ABP NADU Exclusive: CM சந்திப்புக்கு ஏற்பாடு செய்த அஜித்! ட்ரைலர்ல கதை சொன்னோமா? ஹெச்.வினோத் நேர்காணல்!
பெர்சனலா ஒரு பிரச்னை வந்தா ஒரு ஸ்டெப் பேக் வச்சு ஆராய்ச்சி பண்ணி அந்தப் பிரச்னைய அணுகுவேன். ஆனால் அஜித் சார் அப்படி கிடையாது. பிரச்னை வந்துச்சுனா திரும்ப அடிக்குற ஆளு.. அவருடைய ரூட்லதான் வலிமை பண்ணோம்.
என்ன சார் பயங்கர ப்ரஸ்ரா இருக்கீங்க போல என்று கேட்க, எதிர்பக்கத்தில் இருந்த இயக்குநர் ஹெச். வினோத் இந்த ஃபீல்டுல “ப்ரஸர் அப்படிங்கிறது நிரந்தரம்.. சந்தோஷம் அப்படிங்கிறது டெம்ப்ரெவரி” என்று அசால்ட்டாக பதிலளித்தார்.
ஏகப்பட்ட பிரச்னைகள்,குழப்பங்கள், தடங்கல்கள் எல்லாவற்றையும் தாண்டி வலிமையோடு வலிமை திரைப்படத்தை பொங்கலுக்கு கொண்டு வந்திருக்கும் ஹெச். வினோத்திடம் கேள்விகளை முன்வைத்தேன்.
ஒமிக்ரான் தொற்று பரவலால் மீண்டும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதினு அறிவிப்பு வெளியாகியிருக்கு? பார்க்கும் போது எப்படி இருந்துச்சு?
அதிர்ச்சிதான்... ஆனா அதிர்ச்சிகள் நமக்கு பழகி போயிருச்சு.. (சிரிக்கிறார்). நல்லது நடந்தாத்தான் இப்பெல்லாம் அதிர்ச்சியா இருக்கும்.
மீண்டும் வலிமை தள்ளிப்போக வாய்ப்பிருக்கா?
அது முழுக்க முழுக்க தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் எடுக்கும் முடிவை சார்ந்தது. அதனால் அத பத்தி நமக்கு பெரிய அப்டேட் எதுவும் இல்ல.
வலிமை திரைப்படத்துல உங்களுக்கு மிகப் பெரிய சவாலா கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இருந்ததுனு கேள்விப்பட்டோம்? எப்படி சமாளிச்சீங்க?
ஆமாம்.. எல்லாமே குழப்பமாத்தான் இருந்துச்சு. ஆர்ட்டிஸ்ட் சைடு பிரச்னை, லொக்கேஷன் சைடு பிரச்னை, பெர்மிஷன் கிடைக்குறதுல பிரச்னை எங்ககெங்க பிரச்னை வேணுமோ எல்லா இடத்துலயும் பிரச்னை இருந்துச்சு. ஆனா ஒன்னு மட்டும் எனக்குத் தெரிஞ்சது. என்ன ஆனாலும் சரி இத பண்ணிடணும்.. பண்ணாம விட்டோம் அப்படினா ரொம்ப தள்ளி போயிரும்.. இன்னொரு பக்கம் ஆடியன்ஸுக்கும் படம் வந்து ரொம்ப நாள் ஆன மாதிரி ஃபீல் வந்துருச்சு.
அதனால, என்ன ஆனாலும் சரி இத பண்ணிடணும்ணு முடிவு எடுத்தேன். அதுக்கு காரணம் அஜித் சார். மார்ச் மாதம் ஊரடங்கு போட்டாங்க.. முதல் ஒரு மாசம் எல்லாருக்கும் ரொம்ப ஜாலியா போச்சு.. ஆனால் அடுத்தடுத்த மாதங்கலுள பொருளாதார பிரச்னையால எல்லாரும் கஷ்டப்பட ஆரம்பிச்சாங்க.. அப்ப எல்லா துறைகளும் அரசாங்கத்துட்ட கோரிக்கை வைச்சாங்க..
அரசாங்கமும் கொஞ்ச கொஞ்சமாக தளர்வுகள அறிவிச்சுட்டு வந்தாங்க.. ஆனா சினிமாவுக்கு எந்த தளர்வுகளும் அறிவிக்கப்படல.. ஜூன் மாசம் அஜித் சார் எனக்கு கால் பண்ணி “ நம்மள ஏன் இண்டஸ்ரியா ட்ரீட் பண்ண மாட்றாங்க.. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்க்கக்கூடிய ஃபேக்ட்ரி இயங்குது. நமக்கு மட்டும் ஏன் பெர்மிஷன் கிடைக்கல.. நீங்க சி.எம்ம சந்திச்சு பேசுங்க நான் பெர்மிஷன் வாங்கித் தர்றேன்னு சொன்னார்.
அதுக்கப்புறம் அது தயாரிப்பாளர் சைடு போச்சு.. அங்க இருந்து கொஞ்சம் வெயிட் பண்ணுங்கனு தகவல் வர நாங்க வெயிட் பண்ணோம்.. ஜூன் மாசத்துல இருந்தே அஜித் சார் ஷுட்டிங் பண்ணனும்ங்கிற ஆர்வத்துல இருந்தாரு. அவரு ஒன்னுதான் திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தாரு அது என்ன அப்படினா, “ எத்தன நாள் ஒருத்தருக்கு நீங்க இலவசமா சாப்பாடு கொடுப்பீங்க.. ஒரு தொழிலாளி க்யூல நின்னு சாப்பாடு வாங்கி சாப்பிட ஆசப்படுவானா.. இல்ல அவன் உழைச்ச சொந்த காசுல சாப்பாடு வாங்கி சாப்பிட ஆசப்படுவானா என்றார்.
ஒரு ஹீரோவே இவ்வளவு ஆர்வமா இருக்குறத பார்க்கும்போது, அது எங்களுக்கு ரொம்ப பெரிய உற்சாகத்த கொடுத்துச்சு.. அதுக்கப்புறமாத்தான் கடகடனு போயி ஷூட் பண்ணோம். அது வரைக்கும் நாங்க 30 சதவீதம்தான் ஷூட் பண்ணிருந்தோம். ஆனா அதுக்கடுத்த 2 ஷெட்யூடுல்ல தொடர்ச்சியா ஷூட் பண்ணி 90 சதவீதம் படப்படிப்ப முடிச்சுட்டோம்.
இதக்கிடையில ஒருத்தருக்கு கொரோனா வந்துச்சு.. அவங்க போனாங்க.. அதுக்கபுறம் வந்தாங்க.. ஆனா எதையும் நாங்க கண்டுக்கல.. அஜித் சார் வந்தாரு மாஸ்க்கை தூக்கி கெடாசுனாரு.. தைரியமா நின்னாரு.. அவரோட அந்த ஹோப்தான் எங்கள ட்ரைவ் பண்ணுச்சு.
நான் பர்சனலா ஒரு பிரச்னை வந்தா ஒரு ஸ்டெப் பேக் வச்சு ஆராய்ச்சி பண்ணி அந்தப் பிரச்னைய அணுகுவேன். ஆனால் அஜித் சார் அப்படி கிடையாது. பிரச்னை வந்துச்சுனா திரும்ப அடிக்குற ஆளு.. அவருடைய ரூட்லதான் வலிமை பண்ணோம்.
உங்களுடைய கதைக்களங்கள் எல்லாமே ரொம்ப வித்தியாசமா இருக்கு எங்க இருந்து பிடிக்கிறீங்க?
நான் மட்டும் எல்லாமே பண்றது இல்ல. ஐடியாங்கிறது ஒரு மேக்னட் மாதிரி.. அத உங்க மைண்டுக்குள்ள வைச்சுட்டிங்க அப்படினா.. அது எங்க போனாலும் அதுக்கு சம்பந்தமான தகவல்கள் உங்ககிட்ட வந்துட்டே இருக்கும்
ஒரு கட்டத்துல அந்த மேக்னட் சுத்தி ஒரு பியூட்டிஃபுல்லான ஷேப் உருவாகியிறுப்பது உங்களுக்குத் தெரியும். அப்பதான் அத நம்ம மத்தவங்ககிட்ட ஷேர் பண்ண ஆரம்பிக்கிறோம். ஒரு ஐடியா அப்டிங்கிறது ஒரு சுவாரஸ்யமான சம்பவமா இருக்கலாம் அல்லது சுவாரஸ்யமான காட்சியா இருக்கலாம்..
சதுரங்க வேட்டைய பொறுத்த அளவுல.. 2 நாள்கள ஒரு ஹுரோவுக்கு கதை சொல்ல வாய்ப்பு கிடைச்சது.. அப்ப எங்கிட்ட என்ன இருக்கு அப்டினு தேடினப்ப.. எங்கிட்ட கலெக்டிவான விஷயங்கள் இருந்துச்சு. அத வைச்சு நான் ஒரு கத பண்ணி போய் சொன்னேன்.
தீரன் பொறுத்த வரைக்கும், நியூஸ் பேப்பரை கட் பண்ணி சேகரிக்குற பழக்கம் எனக்கு இருக்குறதால, எப்பயோ ஒரு செய்தில இருந்து கிடைச்ச ஒரு ஐடியாவ ஒன் லைன் பண்ணி வெச்சிருந்தேன். சரி.. சதுரங்க வேட்டை முடிச்சதுக்கு அப்புறமா என்ன பண்றதுனு யோசிச்சுட்டு இருந்தப்ப அதே நியூஸ் பேப்பர் சாப்பாடு பொட்டலத்துல திரும்பவும் கிடைச்சது..அப்பதான் இது நம்ம ஏற்கனவே யோசிச்ச மேட்டர் ஆச்சேனு.. அத பண்ணோம்.
அஜித் சார் சினிமாவை எப்படி பார்க்கிறார் அப்டினா, “மக்களுக்கு சினிமா மூலமா நம்பிக்கையையும், கனவுகளையும் விதைக்கணும். இன்னைக்கு அதுதான் மக்களுக்கு தேவைப்படுது. மக்கள் இன்னைக்கு நிறைய பிரச்னைகளை எதிர்கொள்றாங்க.. அத ஜெயித்து தாண்டி போறதுக்கு நம்பிக்கை வேணும். குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு நிச்சயம் கனவு இருக்கணும். அதுதான் எனக்கு முக்கியமா படுது.” என்பார்.
ட்ரெய்லரிலேயே கதைய சொல்லிட்டாங்களேனு சமூக வலைதளங்கள பேசப்படுதே?
கதையை பொறுத்த அளவுல இன்னைக்கு நாம என்ன பார்க்கப்போறோம் அப்டிங்கிற கிளாரிட்டி மக்களுக்கு தேவைப்படுது. இது இல்லாம அவங்க ஏதாவது ஒரு கற்பனையில வந்தாங்க அப்படினா.. படம் நாங்க எதிர்பார்த்த மாதிரி இல்ல அப்படினு சொல்வாங்க.. பேஸிக்கா கதை எந்த ஏரியாவுல இருக்கும் அப்படிங்கிறத நம்ம சொல்லிட்றோம். ஆனா நாங்க ரொம்ப ரிவீல் பண்ணல..
சதுரங்க வேட்டையில் பணம் சம்பாதிக்க என்ன வேணும்னாலும் அந்தக் கேரக்டர் பண்ணும்.. இரண்டாவது படத்துல நீங்க என்கவுன்ட்டர் செலிபிரேட் பண்றதா சர்ச்சை எழுந்துச்சு.. வலிமை ட்ரெய்லர்ல இதுக்கு ஆப்போசிட்டா, “ ஏழையா இருந்து உழைச்சு சாப்பிடுற எல்லாத்தையும் கேவலப்படுத்தாத” “ உயிர எடுக்குற உரிமை நமக்கு இல்ல” போன்ற வசனங்கள் இடம்பெற்றிருக்கே?
முதல்ல நான் தீரன்ல என்கவுன்ட்டர் செலிபிரேட் பண்ணல.. அது உண்மையான கேஸ் ஹிஸ்டரி . அந்த கேஸ் ஹிஸ்டிரில 2 பேரை என்கவுன்ட்டர் பண்ணிருக்காங்க.. அதைத்தான் நம்ம காட்டுறோம்.. என்கவுன்ட்டர் சரி, தப்புங்குற ஷோனுக்குள்ளே போகல..
அது ஒரு உண்மையான சம்பவம் அப்படிங்கிறதால சினிமாவுக்காக சில விஷயங்களை நான் மாத்த முடியும். ஆனா டேட்டாவ மாத்த முடியாது. அதுனால என்கவுன்ட்டர் நான் செலிபிரேட் பண்ணேன்னு சொல்றது தவறு.
காசு இல்லனா நல்ல கல்வி, நல்ல மருத்துவம் கிடைக்காது அப்படிங்கிற பயம் எல்லாருக்கும் இருக்கு. இத விடுங்க ஒருத்தன் உங்கள மதிக்கணும் அப்பனாலும் பணம்தான் பிரச்னையா இருக்கு. அத அடிப்படையா வைச்சுதான் சதுரங்க வேட்டை உருவானுச்சு
வலிமையை பொறுத்தவரை எந்த நிலையிலும் அறம் தவறாத கதாபாத்திரம்தான் ஹுரோ. அதனால அந்த கதாபாத்திரம் அப்படி இருக்கு.. அதனால இதுல என்னுடைய ஸ்டாண்டுனு எதையும் சொல்ல முடியாது.
அதே நேரத்துல போலீஸ் டிபார்ட்ப்மென்ட்டையும் நான் என்கவுன்ட்டர் பண்ணாதீங்கனு சொல்ல வரல. அந்த அளவுக்கு ஸ்டாண்ட் எடுக்குற பொலிட்டிக்கல் எஜூக்கேஷன் எனக்கு இல்ல.
அஜித்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியங்கள், ஏன் ஹூமா குரேசி ( நீரவ் ஷாவின் பங்கு, உள்ளிட்ட பல விஷயங்களை ஹெச்.வினோத் பகிர்ந்தார். இவையெல்லாம் இந்தப் பேட்டியின் அடுத்தப் பாகத்தில் வெளிவரும் காத்திருங்கள்