'திரைத்துறை ஒரு தங்கச்சகதி! என் தூக்கத்தின் விலை ரூ.2 லட்சம்' - மனம் திறந்து பேசிய வைரமுத்து!
எனக்கும் திரைத்துறையின் மற்ற கவிஞர்களுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. மற்றவர்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை சிலர் மட்டுமே அறிந்த நிலையில் இன்று இந்த மேடையில் சொல்லப் போகிறேன்.
தன்னுடைய பிறந்தநாள்விழாவில் பேசிய வைரமுத்து சினிமா வாழ்க்கை குறித்து பேசினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்,
’’எனக்கு முன்னால் இருந்த பாடலாசிரியர்கள் எல்லாம் எழுத்தால், தமிழால், கற்பனையால், திறமையால் சிறந்தவர்கள். எல்லா கவிஞருக்கும் ஒரு பாட்டுக்கும் இன்னொரு பாட்டுக்கும் இடைவெளி இருக்கும். சிலருக்கு 3 மாதங்கள். சிலருக்கு 3 வருடங்கள்கூட இடைவெளி இருந்தது உண்டு.
மதுரகாசி என்ற மகத்தான கவிஞர் இருந்தார். மணப்பாறை மாடு கட்டி, முல்லை மலர் மேலை, ஒன்றுபட்டு வாழ்வதால், மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே போன்ற பாடல்களை எழுதிய மகான். ஆனால் அவர் வாய்ப்பில்லாமல் விவசாயம் செய்ய சென்ற நாட்கள் உண்டு. 2 ஆண்டுகள் கழித்து தேவர் மதுரகாசியை மீண்டும் அழைத்து பாடல் எழுத வைத்தார்.
கண்ணதாசன் குற்றாலம் சென்றால் அங்கேயே சுதந்திரத்தோடு இருந்துவிடுவார். மேலே ஆகாயம், கீழே பூமி நடுவில் கண்ணதாசன் என்று வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விடுவார். தினமும் எண்ணெய்க் குளியல், கோழிக்கறி குழம்பு, அத்துடன் குடிக்க சில பானம் என்று வாழ்வார்.
கவிஞர் வாலியை சில ஆண்டுகளாக கோடம்பாக்கத்தில் பார்த்ததேயில்லை என்று சொல்வார்கள். சகலகலாவல்லவன் நேத்து ராத்திரி அம்மாவுக்குப் பின்னர்தான் வாலி சம்பாதித்தர். சிலர் வேண்டுமென்றே விடுமுறை விட்டுக்கொள்வார்கள்.
ஆனால் நான் 1980 மார்ச் 10 முதல் 2018 ஜூலை 13 வரை நான் பாட்டு எழுதாத நாளில்லை. இதுதான் மூத்த பாடலாசிரியார்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்.
நான் விடுமுறை விட முடியாது. மதியம் 2 மணி முதல் 4 மணி வரை தூங்கினால் அதன் விலை ரூ.2 லட்சம். இந்த வாழ்க்கை எனக்கு வழங்கப்பட்டது. இந்த வாழ்க்கையை இழக்க நான் விரும்பவில்லை.
எனக்கு எல்லோரும் வேண்டும். அதனால் எப்போதும் நான் நேர்மறையான எண்ணம் கொள்வேன். நீங்களும் அதை பின்பற்றிப் பாருங்கள் உங்கள் வாழ்க்கை நலமாக இருக்கும். எதிரிகளை தூரத்து சொந்தமாகக் கொள்ளுங்கள். எதிரிகளாக எல்லோரையும் எண்ணக்கூடாது. நண்பராக இருக்க ஒரே ஒரு தகுதி வேண்டும். அது அன்பு மட்டுமே. மனத்தில் அன்பு இருந்தால் நட்பும், உறவுகளும் நாடி வரும்.
தங்கச் சகதி:
திரைத்துறையில் நான் சகதியில் மூழ்கியிருக்கிறேன். அது தங்கச் சகதி. அந்த சகதியில் நான் கழுத்துவரை மூழ்கியிருக்கிறேன். இங்கே இருந்து எனக்கு எழுவதற்கு மனமில்லை. அதனால் இங்கே யாரிடமும் விரோதம் பாராட்டவும் மனமில்லை. எனக்கு எல்லோரும் அன்பர்கள் தான்.
இவ்வாறு வைரமுத்து பேசியிருக்கிறார்.