Vadivelu Vijayakanth: “விஜயகாந்த் நினைவிடத்திற்கு செல்லப்போகும் வடிவேலு” ஏபிபி நாடு-விற்கு கிடைத்த பிரத்யேக தகவல்
Vadivelu Vijayakanth: மறைந்த நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வடிவேலு செல்ல இருப்பதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது.
ஒருவர் இறக்கும்போதுதான், அவருடைய செல்வாக்கு என்ன என்பது தெரியும் என்பது முதுமொழி. அந்த வகையில் விஜயகாந்த் இறந்த போது, ஊர் கூடி இறுதி அஞ்சலி செலுத்தியதை அனைவரும் கண்டிருப்போம். இந்த மறைவு - அஞ்சலி செய்திக்கு இணையாக, விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த நடிகர் வடிவேலு வரவில்லை என்பதும் மிகப்பெரிய விவாதமாக, சமூக வலைதங்களில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதிலும், பெரும்பாலோர் நடிகர் வடிவேலுவை நன்றி கெட்டவர் என்பதில் ஆரம்பித்து, தங்களால் முடிந்தளவுக்கு வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏன் இப்படி விஜயகாந்துக்கு, வடிவேலு அஞ்சலி செலுத்த வராததை இந்தளவுக்கு பெரிதாக்குகிறார்கள் என்ற கேள்வி வருவது இயற்கையே. ஏனெனில், தமிழக கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்துவிட்ட சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர், நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர், அரசியல் தலைவர், மனித நேயர் என பல முகங்களைக் கொண்டவர் “கேப்டன்” விஜயகாந்த். அதனால்தான் அவருடைய மறைவுக்கு, தமிழகமே சோகக் கடலில் மூழ்கியது எனக் கூறுமளவுக்கு ரசிகர்களும் அபிமானிகளும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசின் மரியாதையுடன், 72 குண்டுகள் முழங்க, விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்டார்.
வெளியூரில், வெளிநாட்டில், முடியாமல் இருந்த பல பிரபலங்கள், பல்வேறு வகைகளில் தங்கள் இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்தினர். சிலர், தற்போது கூட அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருவதையும் பார்க்க முடிகிறது. ஆனால், நடிகர் வடிவேலு மட்டும், நேரில் வரவும் இல்லை, இன்னமும் இரங்கல் கூட ஏன் தெரிவிக்கவில்லை என்பது பலருடைய கேள்வி. இது தொடர்பாக, பல்வேறு திரை நட்சத்திரங்கள்கூட கேள்வி எழுப்புகின்றனர்.
வடிவேலுவின் மெளனத்திற்கு காரணம்?
சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, நடிகர் வடிவேலுவை தொடர்புக் கொள்ள முயற்சித்து, பலன் அளிக்கவில்லை. இந்தச் சூழலில்தான், அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர்களில் ஒருவருமான மாலின் நம்மிடம் பேசினார். அதில், “கேப்டன் விஜயகாந்த் இறந்த செய்தி கேட்டவுடன் நடிகர் வடிவேலு, ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தாராம். அதேபோல், தனக்கு நெருங்கிய நண்பர்களிடம், நல்ல மனிதர், பண்பாளர் கேப்டன் என அவருடைய நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டார்” என வடிவேலுவின் நண்பர் மாலின் நம்மிடம் தெரிவித்தார்.
அதுமட்டுமல்ல, “கேப்டன் இறப்பதற்கு முன், உடல்நலம் சரியில்லாமல் சில தினங்கள் மருத்துவமனையில் வடிவேலு இருந்திருக்கிறார். இதனால், உடனடியாக அவர் வெளியே வரக்கூடிய சூழலில் அப்போது இல்லை” என நம்மிடம் கூறிய வி.சி.க. பிரமுகரும் வடிவேலுவின் நண்பருமான மாலின், “வடிவேலு வராததை பற்றி மட்டும் இவ்வளவு பேசுபவர்கள், அவரால் எம்.எல்.ஏ-வாகி, அஞ்சலி செலுத்த வராதவர்கள் பற்றி பேசாதது ஏன்?” என கேள்வி எழுப்புகிறார். அதுமட்டுமல்ல, “மாமனிதன் திரைப்படத்தின் வெற்றி மூலம் மீண்டும் வெற்றியாளராக வலம் வரும் வடிவேலு, தூத்துக்குடி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுத்த மண்ணின் மைந்தன் டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ஆதரவாகப் பேசியது பிடிக்காத சிலர் செய்யும் அரசியல்” என்றும் குற்றம் சாட்டுகிறார்.
“விரைவில், கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவது மட்டுமின்றி, அவரது குடும்பத்தாரையும் சந்தித்து வடிவேலு ஆறுதல் தெரிவிப்பார்” என உறுதிப்பட நம்மிடம் தெரிவித்தார் வடிவேலுவின் நண்பரும் வி.சி.க பிரமுகருமான மாலின்.
“உணர்ச்சிப்பூர்வமாக ரசிகர்கள் அஞ்சலி செலுத்தும்போது, இறுதி அஞ்சலிக்கு வடிவேலு வந்திருந்தால் என்னவாகி இருக்கும் என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். நடிகர் விஜய் வந்தபோதே, அவர் கார் அருகே காலணி வீசப்பட்டதை மறந்துவிடக்கூடாது” என கூறும் வடிவேலுவின் நண்பர் மாலின், “வடிவேலுவின் தாயார் இறந்தபோதுகூட, நடிகர் சங்கத்தைச் சேர்ந்த பிரபலங்கள் யாருமே எட்டிப்பார்க்கவில்லை” என்பதையும் சமூல வலைதள போராளிகள் மறந்துவிடக்கூடாது என்கிறார்.
வடிவேலு அஞ்சலி செலுத்த வருவது குறித்து, அவரோ, அவரது தரப்பிலோ அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை. ஆனால், அவரது நெருங்கிய நண்பர் என பலராலும் சொல்லப்படும் விசிக பிரமுகர் மாலின், விரைவில் கேப்டன் நினைவிடத்தில் வடிவேலு அஞ்சலி செலுத்துவார் என்பதை நம்மிடம் உறுதிப்படத் தெரிவித்தார்.
இன்றைய எதிரி, நாளைய நண்பன், இன்றைய நண்பன், நாளைய எதிரி என்பதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா? என்பதை இந்தத் தமிழகம் பலமுறை பார்த்திருக்கிறது. எனவே, பல்வேறு காரணங்களுக்காக, அரசியல் களத்தில் விஜயகாந்தை வசைப்பாடிய வடிவேலு, விரைவில் அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தும் போது, ரணங்கள் ஆறுவதற்கு வாய்ப்புண்டு என்பதையும் யாரும் மறுக்கமுடியாது.