Trisha Forgive Mansoor Ali Khan: தவறு செய்வது மனித இயல்பு ...மன்சூர் அலிகானை மன்னித்த த்ரிஷா..எக்ஸ் தளத்தில் அவரே போட்ட ட்வீட் ...
மன்சூர் அலிகான் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நிலையில், தான் அவரை மன்னிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா.
மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்தன. இந்நிலையில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தனர். இன்று, த்ரிஷாவே என்னை மன்னித்து விடு என மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து நடிகை த்ரிஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ பண்பு என பதிவிட்டுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து பேசியது சர்ச்சையானது. இதனையடுத்து த்ரிஷா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிட்டதாவது, “மன்சூர் அலிகான் சமீபத்தில் என்னைப் பற்றி அருவெறுக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று என் கவனத்துக்கு வந்தது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது அவமரியாதையான, பெண் வெறுப்புமிக்க, பாலியல் அத்துமீறல் பேச்சு. அவர் இதற்கெல்லாம் ஆசைப்படலாம். ஆனால் இவ்வளவு மோசமான ஒருவருடன் திரையைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இனியும் நடிக்க மாட்டேன்” என பதிவிட்டிருந்தார். தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், பெண் அரசியல் தலைவர்கள் என பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டது. மறுபுறம் தேசிய மகளிர் ஆணையம் அவரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.
மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், தேசிய மகளிர் ஆணையத்தை கடுமையாக விமர்சித்தார். தன்னிடம் விளக்கம் கேட்காமல் அறிக்கை விட்ட நடிகர் சங்கத்துக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதனையடுத்து அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று அவர் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் மன்சூர் அலி கான் இன்று த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக” என குறிப்பிட்டிருந்தார்.
மன்னித்த த்ரிஷா
இதனையடுத்து த்ரிஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: ”தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ பண்பு” என பதிவிட்டுள்ளார். ஒருவாரமாக நடைபெற்ற பிரச்சினைக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
To err is human,to forgive is divine🙏🏻
— Trish (@trishtrashers) November 24, 2023