Marvel Loki : ’சென்னை பையன்’ டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோக்கி சீரிஸ், எப்படி இருக்கு?
கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன் திரைப்படத்தில் டாக்டர் ஸ்ட்ரேஞ்சர் கதாப்பாத்திரம் நடித்தால் எப்படி இருக்கும்? அப்படியான அறிகுறிகள் இந்த லோக்கியில் தென்படுகின்றன.
டிஸ்கி: சீரிஸ் பார்க்காமல் இதில் கதையைப் படித்தால் அதற்கு சங்கம் எந்தவகையிலும் பொறுப்பல்ல.
மார்வெல் ஸ்டூடியோஸ் வெளியிடும் லோக்கி சீரிஸின் இந்திய ரசிகர்களிடையிலான ப்ரொமோவுக்காகப் பேசியிருந்த அதன் ஹீரோ டாம் ஹிடில்ஸ்டன்,’சென்னை எனக்குப் பிடிக்கும் அங்கதான் என் அக்கா கொஞ்சநாள் இருந்தாங்க’ எனத் தமிழ்ப்பையன் கனெக்ட்டுடன் பேசியிருந்தது ரிலீஸுக்காகக் காத்திருந்த தமிழ் மார்வெல்ஸ் ரசிகர்கள் பட்டாளத்தைப் பல்ஸ் எகிற வைத்திருந்தது. ஏற்கெனவே ஃபால்கன் அண்ட் தி விண்டர் சோல்ஜர், வாண்டாவிஷன் என அடுத்தடுத்து சீரிஸ்கள் வந்தாலும் மார்வெல் வெறியர்களுக்கு டாம் ஹிடில்ஸ்டன் நடித்ததாலேயே லோக்கி கூடுதல் ஸ்பெஷல்.
மார்வெல் சூப்பர் ஹீரோக்களைப் பொருத்தவரை அதை உருவாக்கிய ஸ்டான் லீக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு சர்ப்ரைஸ்கள் அவெஞ்சர்ஸ் திரைப்படக் கேரக்டர்களில் கொட்டிக்கிடக்கும். அந்த வரிசையில் தற்போது ஹாட் ஸ்டாரில் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கிடையே ரிலீஸாகியிருக்கும் ’லோக்கி’. 2019ல் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வெளியானதோடு அவெஞ்சர்ஸுக்கும் எண்ட் கார்டு போட்டாயிற்று எனச் சோகத்தில் இருந்த மார்வெல் விசிறிகளுக்கு இல்லை நாங்கள் 2.0 வெர்ஷனாகத் திரும்ப வர்றோம் என வெளிவந்திருக்கிறது ’லோக்கி’ சீரிஸ். இதுபற்றி 2018ல் இன்பினிட்டி வார் சமயத்திலேயே தன் ரசிகர்களுக்கு சிக்னல் கொடுத்திருந்தார் டாம்.
View this post on Instagram
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் ’பரோட்டா’ சூரியின் காமெடி போல கோட்டை அழித்துவிட்டு முதலில் இருந்து தொடங்குகிறது இந்த சீரிஸ். 2019-ஆம் ஆண்டில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் டைம் ட்ராவல் லாஜிக்கை அப்படியே எடுத்துக்கொண்டு அதுவழியாக 2012-ஆம் ஆண்டில் வெளியான முதல் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் காட்சிக்கே நம்மை மீண்டும் அழைத்துச் செல்கிறார்கள். 2012 அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் லோக்கிதான் இந்த லோக்கி சீரிஸின் ஹீரோ.
லோக்கி யாரெனத் தெரியாதவர்களுக்கு, இடியின் கடவுள் தோரின் தத்துத் தம்பி, ஆஸ்கார்ட்டின் சேட்டைக் கடவுள். எல்லோருக்கும் பரிச்சயமான இரக்கமற்ற வில்லன். டெஸரெக்ட்டைத் திருடிய லோக்கியை அப்படியே முதல் அவெஞ்சர்ஸ் வழியாக வேறொரு டைம் ட்ராவல் மூலம் மங்கோலியாவின் பாலைவனத்தில் களமிறக்குகிறார்கள். நம்ம ‘லோக்கி’ சீரிஸும் இங்கிருந்துதான் தொடங்குகிறது.
தான் கடவுள்...தான் மட்டும்தான் கடவுள் என நம்பிக்கொண்டிருக்கும் லோக்கியை, கடவுளாக இருந்தாலும் குற்றம் குற்றமே என அங்கே கைது செய்கிறது TVA என்னும் டைம் வேரியன்ஸ் டீம். லோக்கி ஏன் கைது செய்யப்படுகிறான்? லோக்கியால் என்ன பிரச்னை உண்டானது. அதை அவன் எவ்வாறு சரி செய்யப்போகிறான் என்பதைச் சுற்றிதான் இந்த சீரிஸின் மிச்சக்கதை பின்னப்பட்டிருக்கிறது. கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன் திரைப்படத்தில் டாக்டர் ஸ்ட்ரேஞ்சர் கதாபாத்திரம் நடித்தால் எப்படி இருக்கும்? அப்படியான அறிகுறிகள் இந்த லோக்கியில் தென்படுகின்றன. ஆம் இந்த சீரிஸில் ஒன்றல்ல இரண்டல்ல பல லோக்கிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்., அதற்கான அறிகுறிகளோடுதான் முதல் எபிசோட் முடிந்திருக்கிறது. அடுத்த எபிசோட் தேதி ஜூன் 16.
Also Read: மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!