‛மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்...’ மறக்க முடியாத மோகனாம்பாளின் பிறந்த தினமும்!
பத்மினி என்கிற பெயரையே பலர் மறந்து, மோகனாங்கியாக தான் பத்மினி பின்னர் அறியப்பட்டார். பத்மினியை மறந்தால் கூட, மோகனாங்கியை மறக்காது தமிழ் சினிமா. ஆம் மறைந்த நடிகை பத்மினிக்கு இன்று 89வது பிறந்த நாள்!
‛சாதுர்யம் பேசாதேடி... என் சலங்கைக்கு பதில் சொல்லடி...’ எந்த சலங்கைக்கும் பதில் சொல்வார் பத்மினி. அதனால் தான் அவர் நாட்டிய பேரொளி. நடனம்... நடனம்... நடனம்... என வாழ்நாள் முழுவதையும் நடனத்திற்கு அர்ப்பணித்தவர். தமிழ் சினிமாவின் கிளாசிக் பக்கங்களில் பரதமும், பாவமும் நிறைந்த நடிகையாய் பத்மினிக்கு என்றும் இடம் உண்டு. திறமைக்கேற்ற அழகு, அழகுக்கேற்ற அறிவு என அனைத்திலும் தேர்ந்தவர். இன்று அவருக்கு 89வது பிறந்த நாள். மறைந்தாலும், படைப்புகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பத்மினி போன்ற படைப்பாளிகள் என்றும் நினைவு கூறத்தக்கவர்கள். அந்த வரிசையில் இன்று பத்மினியை ரீவைண்ட் செய்கிறோம்.
உடல்...உயிர்... ஊன்... அனைத்தும் நடனம்!
திருவனந்தபுரம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பூஜாப்புர பகுதியில் 1950ல் பிறந்தவர் பத்மினி. இன்றுள்ள நடிகைகளுக்கு பிறக்கும் போது ஒரு பெயர். நாளடைவில் பிறக்கும் போது வைத்த ஒரிஜினல் பெயர் மறந்து, சினிமாவிற்காக வைத்த பெயரை தான் பலர் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், பத்மினி என்பது தான் அவரது பெற்றோர் அவருக்கு வைத்த ஒரிஜினல் பெயர். அதையே கடைசி வரை அவரும் பயன்படுத்தி வந்தார். பத்மினி என்று வரும் போது, அவரது சகோதரிகளை தவிர்க்க முடியாது. ஏனென்றால், திருவாங்கூர் சகோதரிகள் என்பது தான் அவர்களின் அடையாளம். பத்மினியின் அக்கா லலிதா, தங்கை ராகினி ஆகியோரும் பத்மினி போன்றே முறைப்படி கலை பயின்றவர்கள். இயற்கையிலேயே நல்ல செல்வாக்கு உள்ள குடும்பம். தன்னுடைய நான்கு வயதில் சலங்கை கட்ட துவங்கினார் பத்மினி. பரதம் மட்டுமல்லாமல், கதகளி, மணிப்புரி, குச்சுப்படி, மோகினியாட்டம் என நடனத்தின் அடிநாதங்களையும் அலசியவர். 10வது வயதில் அரங்கேற்றம் செய்து, தன் வருகையை பதிவு செய்தவர்.
தனக்கொரு இடம்... அதிலும் திடம்!
திருவாங்கூர் சகோதரிகளின் நடனத்திறமையை அப்போது அறியாதவர்களே இருக்க முடியாது. நடனம், அன்றைய சினிமாவில் கூடுதல் தகுதி. பத்மினி, அதற்கு சகல பொருத்தமும் கொண்டவர். 17 வது வயதில் டைரக்டர் உதயசங்கரின் கல்பனா என்கிற இந்தி படத்தில் அறிமுகமானார். ஆனால் அதில் நடனத்திற்கு பெரிய ஸ்கோப் இல்லை. கல்பனா கைவிட்டாலும் கன்னிகா கைவிடவில்லை. 1947 ல் கன்னிகா என்கிற படத்தில் தனக்கான நடன கதாபாத்திரம் கிடைக்க, தரையில் குதிக்க திரையே அதிர்ந்தது. அதன் பின் பத்மினி என்றால் பரதம் என்றாகிவிட்டது. பரத நாட்டிய கதை என்றால், அதில் பத்மினியை சேர்ப்பார்கள். பத்மினி வந்துவிட்டால், படத்தில் பரதம் சேர்ந்து விடும். இப்படி தான், தனது படங்களில் பரதத்தை தன் புரதமாக கொண்டு சென்றார். சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ள பத்மினி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார். சிவாஜிக்கு ஆப்ட்டான ஜோடி என்றால் பத்மினி தான் என இயக்குனர்கள் அனைவரும் ஒருமித்த கருத்து வைத்திருந்தனர். உண்மையில் அந்த ஜோடி, பலரை கட்டிப் போட்டது.
என்றும் மறக்க முடியாத மோகனாங்கி...!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.,யில் துவங்கி, நடிகர் திலகம் சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுடன் பத்மினி நடித்த படங்கள் பல, சூப்பர் ஹிட். ஆனாலும், பத்மினி தில்லானா மோகனாம்பாள் மோகனாங்கியாகவே அறியப்படுகிறார். தமிழ் சினிமாவின் ‛ஆல் டைம் பேவரிட்’ மூவி என்கிற பட்டியல் இருந்தால், அதில் முதல் இடம் தில்லானா மோகனாம்பாள் தான். இன்று நமக்கு பல டிவி சேனல்கள் இருக்கிறது. அன்று பொதிகை என்கிற சேனல் இருக்கும் போது, தீபாவளிக்கு முதல் நாள், விடிய விடிய நேயர்களை விழிக்க வைக்க, ப்ளே செய்யப்படும் ஒரே மூவி, ‛தில்லானா மோகனாம்பாள்’. சலிப்பு தட்டாத திரைக்கதையும், கதாபாத்திரமும் கொண்ட முழு நீள காதல், நகைச்சுவை திரைப்படம். படத்தின் பெயரிலேயே தெரியும்... பெண்ணை சுற்றிய கதை என்பது. மோகனாம்பாள் என்கிற நாட்டிய பெண்ணை மையமாக கொண்ட கதை. சிவாஜியும்-பத்மினியும் சிக்கல் சண்முகசுந்தரம்-மோகனாங்கியாக வாழ்ந்திருப்பார்கள். நாளடைவில் வந்த கரகாட்டகாரன், சங்கமம் போன்ற படங்கள் எல்லாம் தில்லான மோகனாம்பாளின் 2.0, 3.0 என்றால், அது மிகையாகாது. பத்மினி என்கிற பெயரையே பலர் மறந்து, மோகனாங்கியாக தான் பத்மினி பின்னர் அறியப்பட்டார். பத்மினியை மறந்தால் கூட, மோகனாங்கியை மறக்காது தமிழ் சினிமா. அதே போல் தான் வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினி-வைஜயந்தி மாலாவிற்கும் இடையே நடக்கும் பரதப் போர் இன்றும் மறக்க முடியாத அவரது நினைவுகளில் ஒன்று.
குவிந்த விருதுகளும்... குனிந்த குணமும்!
ஒரு நடிகைக்கு எந்த அளவிற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமோ... அந்த அளவிற்கு பத்மினி அங்கீகாரங்களை பெற்றவர். பரதக் கலைகளில் கைதேர்ந்தவர் என்பதால், நவரசம் அவருக்கு அத்துப்படி. சினிமாவில் அது தானே வேண்டும். இன்று அது இருப்பதில்லை என்பது வேறு கதை. இப்போது பத்மினி கதைக்கு போவோம். அவரது நடிப்பு மற்றும் திறமை தொடர்ந்து கவுரவிக்கப்பட்டது. 1954, 1959, 1961, 1966 ம் ஆண்டுகளில் பிலிம் பேன்ஸ் அசோசியேஷனின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். 1958 ல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, 1957 மாஸ்கோ இளைஞர் விழாவில் சிறந்த பரத நாட்டிய கலைஞர் விருது. 1985 ல் பிலிம் பேர் விருது என பத்மினியின் விருது பட்டியல் பெரிது. மற்ற நடிகைளுக்கு கிடைக்காத இன்னொரு அங்கீகாரம் பத்மினிக்கு கிடைத்தது. பத்மினியின் கலைத் திறமையை பாராட்டி அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தது சோவித் யூனியன். இத்தனை விருதுகள் தலைக்கு மேல் வந்தாலும், அதை தலைகனமாக மாற்றாமல், கடைசி வரை தலை குனிந்து பிறரை மதித்து வாழ்ந்தவர் பத்மினி.
விடைபெற்ற பத்மினி... விடைபெறாத நினைவுகள்!
நல்ல பேர், புகழ் இருந்த சமயத்திலும் டாக்டர் ராமச்சந்திரன் என்பவரை கடந்த 1961 ல் திருமணம் செய்த பத்மினி, 1977 ல் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் குடியேறினார். அங்கும் பத்மினி ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் என்கிற பெயரில், நாட்டியத்தை பயிற்று வித்து கலை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். முதுமையிலும் தமிழ்சினிமாவின் பாட்டி கதாபாத்திரங்களை அவர் தொடர்ந்தார். அவரது சிஷ்யைகள் பலர் இன்றும் நடனத்தில் கொடி கட்டி பறக்கிறார்கள். ஏறக்குறைய 64 ஆண்டுகள் தன் கலை பயணத்தை தொடர்ந்த நாட்டியபேரொளி... 2006ம் ஆண்டு செப்டம்பர் 24, ஞாயிற்று கிழமை அன்று சென்னையில் மாரடைப்பால் தன் சத்தத்தை நிறுத்தியது. பத்மினி போன்ற நடிகையை தமிழ் சினிமா இதுவரை கண்டதில்லை. காணப்போவதும் இல்லை என்கிறார்கள் அவர் காலத்தில் உடன் நடித்தவர்கள். இன்றும் மோகனாங்கி டிவி வழியே சிரிக்க வைக்கிறாள். நவரசத்தில் அழ வைக்கிறாள். அதையெல்லாம் கடந்து, மறைவிற்கு பிறகும் நம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். பிறந்தநாளை கொண்டாட அவர் இல்லை. ஆனாலும் அவர் போன்ற கலைஞனின் பிறப்பை நாம் நினைவு கூற வேண்டும். அது தான் அவருக்கும், அவரது கலைக்கும் நாம் தரும் மரியாதை!
மேலும் படிக்க: சாதுர்யம் பேசாதடி.... பத்மினி சலங்கைக்கு பதில் சொல்லடி! ஆட வைத்த ‛டாப்’ 5 பாடல்கள்!