Actor Vijay: ‘விஜய் அரசியலுக்கு வரட்டும்.. ஆனால் ஒரு அட்வைஸ்’ .. அண்ணாமலை வைக்கும் செக்..!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக நேர்காணல் ஒன்றில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக நேர்காணல் ஒன்றில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் முழு மூச்சுடன் காத்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக அவரின் நடவடிக்கைகள் எல்லாம் தீவிர அரசியலில் விஜய் களமிறங்க போகிறார் என்பதையே காட்டுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகள் மூலம் மக்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.
விஜய்யின் அரசியல் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தும், வழக்கம்போல சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனிடையே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம், நேர்காணல் ஒன்றில் விஜய் புகைப்படத்தைக் காட்டி அவரைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
கடின உழைப்பால் முன்னேறியவர்
அதற்கு, "விஜய்யின் முதல் படத்தை பார்த்திருக்கேன். அந்த படத்தில் நடிக்க தெரியாது, டான்ஸ் ஆட தெரியாது. ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர். தன் சுயமுயற்சியின் மூலம் கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு சினிமாவை பொறுத்தவரை விஜய் ஒரு உதாரணம். முதல் படம் எனக்கு நன்றாக நியாபகம் இருக்கு. கேமரா முன்பு நிற்பதற்கே கூச்சப்பட்டார். ஆனால் இன்றைக்கு அதையெல்லாம் தாண்டி மெகா ஸ்டாராக உருவாகி இருக்கிறார் என்றால் அந்த பயணம் எளிதானது அல்ல. இன்னைக்கு நிறைய சமுதாய விஷயங்கள் பற்றி பேச ஆரம்பிச்சிருக்காங்க. அந்த விஷயங்கள் மிக ஆழமாக, தீர்க்கமாக விஜய் பேச வேண்டுமென்பது என்னை போன்ற மனிதர்களின் எதிர்பார்ப்பு" என்றார்.
அரசியலுக்கு வாங்க விஜய்
அரசியலுக்கு விஜய் வர்றப்ப எந்த மாதிரியான விஷயங்களை முன்னெடுத்தா நல்லாருக்கும்ன்னு ஒரு சக அரசியல்வாதியா நீங்க நினைக்கிறீங்க என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “சினிமா வாழ்க்கை வேற, அரசியல் வாழ்க்கை வேற. நிறைய கடினம் இருக்கு. அரசியல் என்பது களத்தில் என்ன நடக்கிறது என்பதை நிறைய கேட்க வேண்டி இருக்கும். விஜய் அவர்களும் அந்த பாதையை தாண்டி தான் வரணும்.
அரசியலுக்குள்ள வரும்போது ரசிகர்கள் வேற, உண்மையான பிரச்சினைகள் வேற, மக்கள் நினைக்கிறது வேற என்பது இருக்கும். அது விஜய்க்கு கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கும். எப்படி பாஜக ஆரோக்கியமான தமிழ்நாடு, நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கனுமுன்னு நினைக்கிறோமோ, அதைத்தான் விஜய் அவர்கள் நினைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனால் தான் அவர் அரசியலுக்கே வருகிறார். அதனால் இதை எடுக்க வேண்டும், அதை எடுக்க வேண்டும் என்பதை சொல்வதை விட நல்லதொரு சமுதாயம்,தமிழ்நாட்டை உருவாக்க அவர் அரசியலுக்கு வரட்டும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.