Devayani : சூரியவம்சம் இட்லி உப்புமா சீனுக்கு இதுதான் காரணம்.. தேவயானி சொன்ன சுவாரஸ்யம்..
சூரியவம்சம் படத்திற்கு பிறகுதான் இட்லி உப்புமா என்ற உணவை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருப்போம்.
தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட இயக்குநராக வலம் வந்தவர் இயக்குநர் விக்ரமன். விக்ரமன் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய படங்களாகவே இருந்தன. அதில் மிக முக்கியமான திரைப்படம் சூரியவம்சம். சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் சரத்குமார் நடித்து இருப்பார். அப்பா சரத்குமாருக்கு ஜோடியாக ராதிகாவும் மகன் சரத்குமாருக்கு ஜோடியாக தேவயானியும் நடித்திருப்பார்கள். சூரியவம்சம் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகி மக்கள் கூட்டம் கூட்டமாக இப்படத்தை கண்டு ரசித்தனர். இதுவரை மிகப்பெரிய வசூல் சாதனை செய்த திரைப்படமாக சூரியவம்சம் இருந்து வருகிறது. தியேட்டரில் அதிக பேரால் பார்க்கப்பட்ட திரைப்படத்தில் இன்னமும் முக்கிய இடம் வகிக்கிறது.
இரட்டை வேடம்
நாட்டாமை என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த நடிகர் சரத்குமார் அப்பொழுது இரட்டை வேடங்களில் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் சூரியவம்சம். பொதுவாக அனைத்து மிடில் கிளாஸ் குடும்பத்தில் நடக்கக்கூடிய அப்பா மகன் பிரிவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை அனைத்து ரசிகர்களும் கொண்டாடினர்.
கதை
ஊர்ப்பெரியவராகத் திகழும் அப்பாவுக்கு பிடிக்காத மகன், இருவரும் சரத்குமார் தான். வீட்டில் நடைபெறும் திருமணத்தைப் பற்றிய எந்த விவரமும் தெரியாமல், பணியாள் செய்யும் வேலைகளைச் செய்கிறார் மகன். மகனை அப்பா வெறுக்கக் காரணம் என்ன என்பதை அறிகிறார் நாயகி. தெரிந்ததும் அவனின் மீது காதல்வயப்படுகிறாள், அவனும் காதலிக்கிறான். இதனிடையே ஊரில் வில்லத்தனம் செய்வதற்காகவே பிறந்திருக்கும் வில்லனின் மகனுக்கும் நாயகிக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. ஹீரோ சண்டை செய்து ஹீரோயினை திருமணம் செய்துகொள்கிறார். ஏற்கெனவே வெறுப்பில் இருக்கும் அப்பா, இன்னும் கடுப்பாகி வீட்டை விட்டுத் துரத்துகிறார். ஹீரோவும் ஹீரோயினும் தனிக்குடித்தனம் இருக்கிறார்கள். நாயகியின் ஐஏஎஸ் ஆசையை அறிந்துகொள்ளும் ஹீரோ அதன் தேர்வுக்கு தயாராக்குகிறார், அவர் கலெக்டர் ஆக, இவர் தொழில் அதிபர் ஆக ஒரே பாட்டில் ஓஹோன்னு வருகிறார்கள். மகனைப் புரிந்துகொண்ட அப்பா, மனம் திருந்துகிறார். மகனை ஏற்றுக்கொள்கிறார் என்பதை, பக்கா வெற்றி பேக்கேஜாகக் கொடுத்திருந்தார் விக்ரமன்.
இட்லி உப்புமா
படம் நெடுக விக்ரமன் டச் பார்ப்போரை நெகிழ செய்ய அதில் முக்கியமாக, இன்றளவும் பேசப்படும் ஸீன், இட்லி உப்புமா ஸீன்தான். தேவயானியின் அப்பா வீட்டிற்கு வர, அவருக்கு சாப்பிட கொடுக்க ஒன்றுமே இல்லாததால், காலையில் சுட்ட இட்லியை உதிர்த்துவிட்டு உப்புமா செய்து கொடுப்பார் தேவயானி. அதையும் சாப்பிட்டுவிட்டு உப்புமா பிரமாதம் என்று கூற, அந்த காட்சியே நெகிழ்ச்சியாகி பார்ப்போரை மனம் இலகச்செய்யும். சாதாரண இட்லியை வைத்து இப்படி உருக்கும் ஸீன் எழுதிய விக்ரமனின் சாமர்த்தியம் இன்றும் பேசப்படுகிறது.
இட்லி உப்புமா குறித்து தேவயானி
இந்த இட்லி உப்புமா ஸீன் குறித்து தேவையானியிடம் கேட்டபோது, "இட்லி உப்புமா, அது மொத்தமும் இயக்குனர் விக்ரமன் சாருடைய சிந்தனை. அந்த படத்துக்கு அப்புறம் தான் எனக்கு அப்படி ஒரு உணவு இருக்கிறதே தெரியும். கிட்டத்தட்ட தமிழ்நாட்டுக்கே அப்புறம்தான் அது ஃபேமஸ். என் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும், என் கணவருக்கு பிடிக்கும், எல்லாத்துக்கும் மேல எனக்கு ரொம்ப ஃபேவரைட். புதுப்புது அர்த்தங்கள் தொடருக்காக ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தபோது மார்னிங் பிரேக் ஃபாஸ்ட் காம்ப்ளிமென்டரிதானே, நான் ரெட்ட்டாரண்ட் வந்து சாப்பிட முடியாது, ரூமுக்கு கொண்டு வந்துடுங்கன்னு சொல்லிருந்தேன். வந்த சாப்பாடு இட்லி உப்புமா. நான் ஆச்சயமா கேட்டேன், அப்போதான் சொன்னாங்க, ஹோட்டல் உரிமையாளர் தேவயானி வர்றாங்கன்னு சொன்னதும் இட்லி உப்புமா செய்ய சொன்னார்ன்னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது." என்றார்.