காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா? பல மாற்றங்களை சந்திக்கும் இந்தியன் 2 !
முன்னதாக இந்தியன் 2 படம் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி முதல் மீண்டும் மறு துவக்கம் செய்யப்படும் என செய்திகள் வெளியானது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடைபெற்ற நிலையில், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி பூஜையும் போடப்பட்டது. லைகா நிறுவனர் சுபாஸ்கரன் தயாரித்து வருகிற இந்தப்படத்தில் நடிகையாக காஜல் அகர்வாலும் பிரியா பவானி ஷங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிகர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.
படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்துக்கொண்டிருந்த சமயத்தில் , கிரேன் நிலை தடுமாறி கீழே விழுந்து உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் சிறிது காலம் படப்படிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நடிகர் கமல்ஹாசன் அரசியல் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த தொடங்க சென்று விட்டார். அதன் பிறகு கொரோனா ஊரடங்கும் தொற்றிக்கொண்டது. இதனிடையே லைகா நிறுவனம் ஷங்கர் தரப்பு படத்தை விரைந்து முடித்துக்கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்தப் பிரச்னையை விசாரித்த நீதிமன்றம் பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறியது. ஆனால் இருதரப்பிற்கும் இடையேயான பிரச்னை தீரவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பிரச்சனை முடிக்கப்பட்டு திரைப்பத்தை 100 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் ஷங்கர். படம் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக இந்தியன் 2 படம் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி முதல் மீண்டும் மறுதுவக்கம் செய்யப்படும் என செய்திகள் வெளியானது.
இந்த சூழலில் படக்குழுவினருக்கு கூடுதல் சிக்கலாக ஹீரோயின் மாற்றத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை காஜல் தற்போது கர்பமாக உள்ளதால் அவருக்கு மாற்றாக நடிகைகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வந்தது. முதலில் நடிகை த்ரிஷாவை அனுகிய படக்குழு தற்போது நடிகை தமன்னாவை கமலுக்கு ஜோடியாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமன்னா காஜல் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே படத்தின் 50 சதவிகித காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் , காஜல் அகர்வால் நடித்த காட்சிகளை அழித்துவிட்டு மீண்டும் தமன்னாவை வைத்து அந்த காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம் . இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. படத்தில் ஏற்கனவே முக்கியமான வேடங்களில் ஒப்பந்தமாகியிருந்த விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகிய இருவரும் சமீபத்தில் உயிரிழந்ததால் அவர்களின் இடத்தை நிரப்ப சில மாறுதல்களை செய்ய வேண்டிய சூழல் உள்ளது.