Varisu vs Thunivu: இன்றோடு ஓராண்டு நிறைவு.. வாரிசு, துணிவு படத்தால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சோதனை..!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிவாஜி கணேசன் - எம்ஜிஆர், ரஜினிகாந்த் - கமல்ஹாசன் வரிசையில் அடுத்ததாக எதிரும் புதிருமாக உள்ள நடிகர் என குறிப்பிடப்பட வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் விஜய் - அஜித் தான்.
நடிகர்கள் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்து துணிவு படம் வெளியாகி இன்றோடு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிவாஜி கணேசன் - எம்ஜிஆர், ரஜினிகாந்த் - கமல்ஹாசன் வரிசையில் அடுத்ததாக எதிரும் புதிருமாக உள்ள நடிகர் என குறிப்பிடப்பட வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் விஜய் - அஜித் தான். ஒரே காலக்கட்டத்தில் சினிமாவுக்கு நுழைந்த இவர்கள் சினிமாவுலகில் போட்டி நிறைந்த நடிகர்களாக இருந்தாலும், திரைக்கு பின்னால் நட்பு பாராட்டக்கூடியவர்கள் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் அவரது ரசிகர்கள் எத்தனை அறிவுரை வழங்கினாலும் சமூக வலைத்தளங்களில் கருத்து மோதலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
வாரிசு vs துணிவு
தெலுங்கில் பிரபலமான இயக்குநராக உள்ள வம்சி பைடிபள்ளி இயக்கிய வாரிசு படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடித்த நிலையில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த இப்படத்தில் விஜய் நடித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் சென்டிமென்ட் கலந்த கதை என்பதால் பலரும் குடும்பம், குடும்பமாக படம் பார்க்க சென்றனர். இதனால் இப்படம் ரூ.300 கோடி வசூல் செய்ததாக தில் ராஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் அதுவே பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதேபோல் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் தயாரிப்பாளர் போனி கபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் - நடிகர் அஜித் ஆகியோர் கூட்டணியில் 3வதாக வெளியான படம் “துணிவு”. இந்த படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்தார். அதுமட்டுமல்லாமல் ஜான் கொக்கைன், சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள், வீரா, அஜய் உள்ளிட்ட பலரும் நடித்த நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்தார். வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு ஆக்ஷன் த்ரில்லராக உருவான இப்படமும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. ஆனால் துணிவு படத்தின் உண்மையான வசூலை போனி கபூர் கடைசி வரை தெரிவிக்கவே இல்லை.
மேலும் வாரிசு, துணிவு தான் தமிழ்நாட்டில் அதிகாலையில் திரையிடப்பட்ட கடைசி படங்களாகும். இரு முன்னணி நடிகர்களின் படங்களும் ஒரே நாளில் வெளியான நிலையில் தமிழ்நாடு வரலாற்றில் இல்லாத நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படத்துக்கு முதல் காட்சியும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படத்துக்கு முதல் காட்சியும் நேரம் ஒதுக்கியது. ஆனால் சென்னை ரோகினி தியேட்டரில் துணிவு படம் கொண்டாட்டத்தின் மிகுதியால் அப்பகுதியில் சென்ற லாரி மீது ஏறி டான்ஸ் ஆடிய அஜித் ரசிகர் ஒருவர் நிலைகுலைந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதன்பின்னர் ரசிகர்களின் பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கவே இல்லை.
இன்றோடு ஓராண்டு நிறைவு
இந்நிலையில் இந்த 2 படங்களும் வெளியாகி இன்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை ஒருபுறம் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், வழக்கம்போல இரு படங்களின் வசூல் நிலவரம் தொடர்பாக ரசிகர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.