Thai Maaman: மீனா பிறந்தநாள் கிப்ட்... 28 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வெளியான ‛தாய் மாமன்’
இயக்குனர் குருதனபால் "தாய் மாமன்" படத்தில் ஒரு புரட்சியையே செய்திருந்தார். இப்படத்தில் சத்யராஜ் பேசும் காரா சாரமான அரசியல் தொடர்பான வசனங்கள் பலருக்கும் அடிவயிற்றில் புளியை கரைத்தது போல இருந்தது.
1994ம் ஆண்டு நடிகர் சத்யராஜ் - மீனா ஜோடியில் வெளியான திரைப்படம் "தாய் மாமன்". இப்படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய ஒரு திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
லொள்ளு கூட்டணி :
எம்.ஜி. சேகர் தயாரிப்பில், குருதனபால் இயக்கிய திரைப்படம் "தாய் மாமன்". இப்படத்தில் நடிகர் சத்யராஜ் ஜோடியாக மீனா நடித்திருந்தாலும் மிகவும் சரியான ஜோடியாக இருந்தது சத்யராஜ் - கவுண்டமணி காம்பினேஷன் தான். இருவரும் ஒரு படத்தில் இருந்தால் அதில் லொள்ளுக்கு ஒரு அளவே இருக்காது. அப்படிப்பட்ட ஒரு தரமான நகைச்சுவை கலந்த அரசியல் பற்றி பேசும் படம். ஏற்கனவே சத்யராஜ் - மணிவண்ணன் காம்பினேஷனில் "அமைதிப்படை" திரைப்படத்தில் இருவரும் காமெடியில் கலக்கியது நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் இப்படத்தில் கவுண்டமணி - சத்யராஜ் நகைச்சுவையும் மிகவும் பிரபலம். மேலும் இப்படத்தில் விஜயகுமார், மணிவண்ணன், வடிவுக்கரசி, செந்தில், பொன்வண்ணன், எம்.என். நம்பியார் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்து இருந்தார் தேனிசை தென்றல் தேவா.
இயக்குனரின் புரட்சி:
இயக்குனர் குருதனபால் இப்படத்தில் ஒரு புரட்சியையே செய்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்தில் சத்யராஜ் பேசும் காரா சாரமான அரசியல் தொடர்பான வசனங்கள் பலருக்கும் அடிவயிற்றில் புளியை கரைத்தது போல இருந்தது. மிகவும் துணிச்சலாக நடித்த சத்யராஜ் இந்த தைரியம் குறித்து ஒரு முறை கூறுகையில் "நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. படத்தில் நான் பேசிய வசனங்கள் அனைத்தும் கதைக்கு சம்பந்தமான விஷயங்களாகவே எடுத்துக்கொள்ளப்படும். அதனால் நான் எதற்கு பயப்பட வேண்டும் " என்றார்.
காலம் செய்த கோலம்:
சத்யராஜ் வில்லனாகவும் நடிகர் சிவகுமார் கதாநாயகனாகவும் நடித்த திரைப்படம் "தீர்ப்புகள் திருத்தப்படலாம்". இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை மீனா. கால ஓட்டத்தில் "தாய் மாமன்" திரைப்படத்தில் நடிகை மீனா சாத்யராஜுக்கு ஜோடியாக நடித்து விட்டார். இதன் மூலம் நடிகர் சத்யராஜுக்கு ஏற்ற ஒரு உயரமான நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகை மீனா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நூறு நாட்களையும் கடந்து திரையரங்குகளில் ஓடி வெற்றிபெற்றது. இப்படத்தின் திரைக்கதை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. பல திரை பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை இப்படத்திற்கு தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இணைந்த அதே கூட்டணி:
இப்படத்தினை தொடர்ந்து குருதனபால் இயக்கிய அடுத்த திரைப்படமான "மாமன் மகள்" திரைப்படத்திலும் ஜோடி சேர்ந்தனர் சத்யராஜ் மற்றும் மீனா. இந்த திரைப்படமும் நல்ல வெற்றி படமாக அமைந்தது. இவர்கள் கூட்டணி ஒரு வெற்றி கூட்டணியாக அமைந்ததால் பின்னாளில் இயக்குனர் தயாரிப்பாளராக "பெரிய மனுஷன்"என்ற படத்தினை நடிகர் சாத்யராஜை வைத்து எடுத்தார். அனால் அப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெற வில்லை.
தாய் மாமன் திரைப்படம், மீனாவின் பிறந்தநாளான செப்டம்பர் 16ம் தேதி வெளியானது. இது அந்த ஆண்டில், மீனாவுக்கு இரட்டிப்பு மகிழச்சியை தந்தது.