Actor Chandrakanth: நடிகை பவித்ரா விபத்தில் இறந்த சோகம் முடிவதற்குள் அடுத்த சோகம்.. காதலர் தற்கொலை!
Serial Actor Chandrakanth: தெலுங்கு சீரியல் நடிகர் சந்து நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவரது காதலி பவித்ரா விபத்தில் அகால மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக திரைத்துறையில் ஏராளமான இறப்புகள் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கு சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருந்த பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கார் விபத்தில் உயிரிழந்தார். இவர் திரிநயனி என்ற தெலுங்கு சீரியல் மூலம் பிரபலமானவர்.
அவரின் இறப்பு ரசிகர்கள் மத்தியிலும் சின்னத்திரை துறையினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய வடு மறைவதற்குள் பவித்ரா ஜெயராமின் காதலரும், சின்னத்திரை நடிகருமான சந்து என அழைக்கப்படும் சந்திரகாந்த் (Chandrakanth) நேற்று இரவு அல்காபூர் காலனியில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நடிகர் சந்துவும் திரிநயனி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவருக்கும் பவித்ராவுக்கு (Pavithra Jayaram) இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நடிகர் சந்துவுக்கு 2015ம் ஆண்டு ஷில்பா என்பவருடன் திருமணம் நடைபெற்று விவாகரத்து பெற்றனர். அதே போல பவித்ராவுக்கும் ஏற்கனவே திருமணமாகி 22 வயதில் ஒரு மகனும், 19 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவரை விட்டு விலகி இருந்த பவித்ராவும் சந்துவும் கடந்த ஆறு ஆண்டுகளாக உறவில் இருந்து வந்தனர் என கூறப்படுகிறது. நடிகர் சந்து திரிநயனி, கார்த்திக் தீபம், ராதம்மா பெல்லி போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.
View this post on Instagram
நடிகை பவித்ரா பயணம் செய்து வந்த காரில் நடிகர் சந்துவும் இருந்துள்ளார். ஆனால் அவர் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் பவித்ரா உயிரிழந்தார். அவரது இறப்பு சந்துவை மனதளவில் பாதித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் கடந்த இரு தினங்களாக பவித்ரா குறித்த நினைவுகளை பகிர்ந்து வருத்தத்தை வெளிப்படுத்தி வந்தார். “இரண்டு நாட்களில் நான் வருகிறேன் அது வரை காத்திருக்கவும்” எனப் பதிவிட்டு இருந்தார். விரைவில் அவர்களின் உறவு பற்றி வெளிப்படையாகத் தெரிவிப்பதாக இருந்த நிலையில், அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்த செய்தி தெலுங்கு சின்னத்திரை ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. தங்களுக்கு மன அழுத்தமோ அல்லது தற்கொலை எண்ணங்களோ ஏற்பட்டால் கீழ்காணும் எண்ணுக்கு அழைத்து உதவி பெறவும்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)