Ethirneechal 168 : சக்தியை பிரிந்து வந்துவிடு என்று சொல்லும் ஜனனியின் அப்பா! ஜனனி எடுக்கும் முடிவு என்ன?
இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிக்கொண்டு இந்த வீட்டில் இருப்பதற்கு, நீ என்னுடன் வந்துவிடு என்று ஜனனியை சென்னைக்கு அழைக்கிறார் நாச்சியப்பன்
நன்கு படித்து, மேலாண்மை பட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதன்மையாக பட்டம்பெறும் ஜனனி, மதுரையில் இருக்கும் ஒரு பிற்போக்கான குடும்பத்துக்கு, மருமகளாக வந்து படும் அவஸ்தைகளும், தடைகளை தகர்த்து அவளால் முன்னேற முடிகிறதா அல்லது உறவை முறித்துக்கொண்டு சுய முன்னேற்றத்துக்காக உழைக்கிறாளா என்பதுதான் எதிர்நீச்சலின் கதை..
ஜனனிக்கு கணவனாக சக்தியும் (சபரி பிரஷாந்த்), சக்தியின் அண்ணன்களாக ஆதி குணசேகரன் (மாரிமுத்து), கதிர் (விபு ராமன்), ஞானம் (கமலேஷ்) ஆகியோரும், மருமகள்கள் ஈஸ்வரி (ஃபைவ்ஸ்டார் கனிகா), ரேணுகா (ப்ரியதர்ஷினி), நந்தினி(ஹரிப்ரியா) ஆகியோரும் சேர்ந்து எதிர்நீச்சல் கதையை இன்னும் விறுவிறுப்பாக்குகிறார்கள்.
எபிசோட் 167-இல், ஈஸ்வரியின் 14 வயது மகள் தர்ஷினிக்கு திருமண ஏற்பாடு செய்கிறார்கள் ஆதி குணசேகரனும், அவரது தம்பிகளும் (போக்சோ என ஒரு சட்டம் இருப்பதும், குழந்தை மணம் செய்துவைத்தால் கம்பி எண்ணவேண்டும் என்றும் தெரியாமல், இன்றும் வாழும் பல நிஜ மனிதர்கள் சிலரைத்தான் ஆதி குணசேகரனும், அந்த மக்கு தம்பிகளும் வெளிப்படுத்துகிறார்கள்) . தர்ஷினியை பரீட்சைக்கு அழைத்துச்செல்லும் ஜனனியின் மீது அனைவரின் கோபமும் திரும்புகிறது. ஏற்கெனவே மன ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சக்தி மோசமாக கத்திவிட்டு, மயங்கி விழ, ஜனனியை அனைவரும் திட்டி தீர்க்கிறார்கள்.
எபிசோட் 168-இல், ஏற்கெனவே இருக்கும் பிரச்சனை போதாதென்று, வீட்டுக்கு வரும் ஜனனியின் அப்பா நாச்சியப்பன், ”என் பொண்ணு வாழ்க்கைக்கு பதிலைச் சொல்லுங்க” என வாண்டடாக வண்டியில் ஏறுகிறார். நியாயம், நீதி என்னும் வார்த்தைகளுக்கு அர்த்தம் அறியாத ஆதி குணசேகரனும், அவரது தம்பிகளும் நாச்சியப்பனை அடித்து, கழுத்தை பிடித்து வெளியில் தள்ளிவிடுகிறார்கள். பலரும் அறிவுரை சொல்லிக் கேட்காமல் ’தலைகீழாகத்தான் குதிப்பேன்’ என முடிவெடுத்த தனது அவசரத்தை நினைத்து நினைத்து அழுது தீர்க்கிறார் நாச்சியப்பன். “இனிமே இந்த வீட்டுல நீ வாழவேண்டாம்டா, வீட்டுக்கு வந்து மேற்கொண்டு படிடா, வேலைக்கு போடா” என்று நியூ ஏஜ் அப்பனாக பேசுகிறார். (நல்லவேளையாக, திரும்ப இன்னொரு கல்யாணம் என்று நாச்சியப்பன் பேசவில்லை. பேசியிருந்தால் குதறி வைத்திருப்போம்)
”நான் வேலை பற்றிய சிந்தனையில் இல்லை. சக்தியின் உடல்நிலையையும், மனநிலையையும் சரிசெய்து, அவருடன் நல்ல வாழ்க்கையை அமைத்து கொள்ளத்தான் போகிறேன். எல்லாமே சரியாகிவிடும்” (குடும்ப பெண்களின் யுனிவர்சல் டயலாக்) என்று சொல்லி, அப்பாவை சென்னைக்குப் போகுமாறு வலியுறுத்துகிறாள் ஜனனி. என்னால்தான் எல்லா பிரச்சனைகளும் என்று கதறியழும் தர்ஷினியை தேற்றுகிறார்கள் ரேணுகாவும், நந்தினியும்.
நான் போய் ஜனனி சித்திக்காக பேசப்போறேன் என்று கிளம்பிப்போய் பேசும் தர்ஷினியை, கண்ணாலேயே எரிப்பதுபோல் பார்க்கிறான் சக்தி.