TRP Rating 18th Week: கலக்கும் புதிய சன் டிவி சீரியல்! மற்ற சீரியல்களின் நிலவரம் என்ன? இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங் லிஸ்ட்!
TRP Rating 18th week: டி.ஆர்.பி ரேட்டிங் பட்டியலில் கடந்த வாரம் முன்னிலை வகித்த சீரியல்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை ரசிகர்களை நாள் முழுக்க என்டர்டெயினிங்காக வைத்திருக்கும் பொறுப்பு சீரியல்களுக்கு தான் உள்ளது. ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இருப்பினும் அவை எந்த அளவுக்கு ரசிகர்களின் கவனத்தைப் பெறுகின்றன என்பதன் அளவுகோலாக டி.ஆர்.பி ரேட்டிங் விளங்குகிறது.
இந்த டி.ஆர்.பி ரேட்டிங் லிஸ்ட் வாராவாரம் வெளியாவதன் மூலம் எந்த சேனலில் ஒளிபரப்பாகும் எந்தெந்த சீரியல் முன்னிலை இடத்தில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பல சேனல்களும் போட்டியிட்டு கொண்டாலும் அந்தப் பட்டியலில் முன்னணி இடத்தை என்றுமே சன் டிவி காலம் காலமாக தக்கவைத்து வருகிறது. அடுத்தபடியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் இடம்பெறும்.
குறைந்த டி.ஆர்.பி ரேட்டிங் பெரும் சீரியல்களை அதிரடியாக முடிவுக்கு கொண்டு வந்து புதிய சீரியல்களின் வரவும் அவ்வப்போது நடைபெறும். அந்த வகையில் சன் டிவியில் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் 'மல்லி'. இரவு 9.30 மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலால் இனியா மற்றும் Mr. மனைவி தொடரின் நேரம் மாற்றப்பட்டது. இந்தப் புதிய சீரியல் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளதா? கடந்த வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் பட்டியலை பார்க்கலாம் வாங்க..
முதல் 10 இடங்களில் உள்ள சீரியல்கள்
18ஆவது வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் பட்டியலில் முதல் 10 இடத்தை எந்தெந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எவ்வளவு டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று முன்னிலை வகிக்கின்றன என்பதன் லிஸ்ட் இதோ:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கார்த்திகை தீபம்' தொடர் அவ்வப்போது இந்த லிஸ்டில் இடம்பெறும். அந்த வகையில் இந்த வாரம் 5.47 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தில் உள்ளது. விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் 5.81 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும், 6.27 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தை 'பாக்கியலட்சுமி' தொடரும் கைப்பற்றியுள்ளது.
சன் டிவியில் கடந்த வாரம் முதல் தொடங்கிய சீரியல் என்பதால் ரசிகர்கள் 'மல்லி' சீரியலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்துள்ளனர். இந்த புது சீரியல் 6.36 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. வரும் வாரங்களில் இந்த சீரியலுக்கான ரேட்டிங் அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
சன் டிவியில் சுந்தரி சீரியல் 6.82 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் இருக்க, விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியல் சன் டிவி சீரியல்களுடன் மிகவும் கடினமாகப் போட்டியிட்டு 7.24 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்ததாக 8.05 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் 'வானத்தை போல' சீரியலும், 8.06 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் எதிர்நீச்சல் சீரியலும், 8.44 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் 'கயல்' சீரியலும் இடம்பெற்றுள்ளது. முதல் இடத்தை யாரும் தட்டி செல்ல முடியாதபடி 9.25 புள்ளிகளுடன் முன்னிலை இடத்தை பல வாரங்களாக தக்க வைத்துள்ளது 'சிங்கப்பெண்ணே' சீரியல்.
இந்த டி.ஆர்.பி ரேட்டிங் 18ஆவது வாரத்திற்கானது மட்டுமே. வரும் வாரங்களில் இந்த ரேட்டிங் பட்டியலில் மாற்றம் நிகழவும் வாய்ப்புகள் உள்ளது. அந்த வகையில் வரும் வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் பட்டியலைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.