HAPPY BIRTHDAY VADIVELU : ஒரு நாளும் உன் வசனம் இல்லாம போகாதுய்யா.. ஹாப்பி பர்த்டே மீம் கடவுள் வடிவேலு....!
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலுவுக்கு இன்று 61-வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் ஏராளமான கதாநாயகர்கள் இருந்தாலும், நகைச்சுவை நாயகர்களாக மக்கள் மனங்களை ஆட்சி செய்தவர்கள் வெகுசிலரே. நாகேஷிற்கு பிறகு கவுண்டமணி, செந்தில் தமிழ்சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருந்தபோதுதான் தமிழ் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்தவர்தான் “வைகைப்புயல்” வடிவேலு.
தொடக்க காலம் :
அன்று தொடங்கி இன்று வரையிலும், இனியும் மக்களின் கவலைகளுக்கு சிரிப்பு ’சிரப்’என்ற மருந்தை அளிக்கும் சித்தனாக வாழ்ந்து கொண்டிருக்கும், வாழப்போகும் “வைகைப்புயல்” வடிவேலுவின் பிறந்த நாள் இன்று. நடிகர் வடிவேலு 1960-ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். அவரது பெற்றோர்கள் நடராஜன் – வைத்தீஸ்வரி ஆவார்கள். நடிகர் வடிவேலு தனது பதின்ம வயதில் நண்பர்களுடன் இணைந்து சின்ன சின்ன நாடகங்களில் நடித்து வந்துள்ளார். அப்போதே, நாடகங்களில் நகைச்சுவை நாயகனாக வடிவேலுதான் நடிப்பாராம். சிறுவயதிலே வடிவேலுவின் தந்தை இறந்ததால் அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது.
அப்போதுதான், எதிர்பாராத விதமாக நடிகர் ராஜ்கிரணின் சந்திப்பு வடிவேலுவிற்கு கிடைக்கப் பெற்றது. அவருடன் ஏற்பட்ட சந்திப்பு காரணமாக, பின்னர் சென்னை வந்தவுடன் ராஜ்கிரணின் அலுவலகத்தில் தங்கி அவருக்கு உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
90-களில் தொடங்கிய புயல் :
1991-ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா ராஜ்கிரணை வைத்து என் ராசாவின் மனசிலே என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தில்தான் வடிவேலுவின் தோற்றம் மற்றும் உடல்மொழிகளை கவனித்த இயக்குநரும், ராஜ்கிரணும் அவரை நடிக்க வைக்க முடிவு செய்தனர். அந்த படத்தில் நடிகனாக அறிமுகமானதுடன் வடிவேலு ஒரு பாடலையும் பாடியிருப்பார். அந்த பாடல்தான் “போடா போடா புண்ணாக்கு”.
அந்த பாடல் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாகி வடிவேலுவின் வருகைக்கு சிவப்பு கம்பளத்தை விரித்தது. ஆனால், அந்த படத்திற்கு முன்னதாகவே 1988-ஆம் ஆண்டு வடிவேலு டி.ராஜேந்தரின் “என் தங்கை கல்யாணி” என்ற படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்து தனது அறிமுகத்தை தொடங்கியிருந்தார். பின்னர், விஜயகாந்தின் சின்ன கவுண்டர் படத்தில் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோருடன் இணைந்து மூன்றாவது நகைச்சுவை நடிகராக நடித்தார்.
ஆரம்ப காலங்களில் கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் பல படங்களில் மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அப்போதே, பலரும் வடிவேலுவின் வசன உச்சரிப்பையும், உடல்மொழி அசைவையும் ரசிக்கத் தொடங்கினர்.
மக்களை ஆட்கொண்ட வைகைப்புயல்:
சின்னகவுண்டர் படத்திற்கு பிறகு இளவசரன், சிங்காரவேலன், தேவர் மகன், கோயில் காளை, மகராசன், அரண்மனை கிளி, பொன்னுமணி, கோகுலம் போன்ற படங்களில் நடித்து நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்தினார். கிழக்கு சீமையிலே படத்தில் இவரது ஒச்சு கதாபாத்திரமும், இவரது நகைச்சுவையும் வடிவேலுவை அடுத்த கால்நூற்றாண்டுக்கு தமிழ் சினிமாவை இவர்தான் ஆளப்போகிறார் என்பதை ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் உணர்த்தியது.
அடுத்தடுத்து இடைவிடாது ஏராளமான படங்களில் நடித்துக்கொண்டிருந்த வடிவேலு, காதலன் படத்தில் கல்லூரி மாணவராக அசத்தலான நகைச்சுவையை வௌிப்படுத்தியிருந்தார். பல அறிமுக இயக்குநர்களின் திரைப்படங்களின் நகைச்சுவை நடிகராக மற்றும் இளம் கதாநாயகர்களின் நண்பனாக வடிவேலுவையே திரையுலகம் தேர்வு செய்தது.
1998-ஆம் ஆண்டு வெளியான கண்ணாத்தாள் என்ற பக்தி படத்தில் சூனா பாணா என்று வடிவேலு கதாபாத்திரம் இன்றும் மீம்ஸ் கிரியேட்டர்களின் முதன்மை தேர்வாகவே இருந்து வருகிறது. அந்தளவு அந்த கதாபாத்திரத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார் வடிவேலு.
வைகைப்புயலில் சிக்கிய ரசிகர்கள் :
90-களில் கவுண்டமணி, செந்தில் இருவருக்கும் இணையான நகைச்சுவை நாயகனாக வலம் வந்த கவுண்டமணி புதிய நூற்றாண்டான 2000-த்தில் இருந்து முழுவதும் தமிழக ரசிகர்களை ஆட்சி செய்யத் தொடங்கினார். 2000-ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளியான வெற்றிக் கொடிகட்டு படத்தில் பார்த்திபனுடன் இணைந்து வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றும் ரசிகர்களுக்கு அற்புதமான நகைச்சுவை மருந்து.
அதுவும், அந்த சிலுக்கு ஆடையுடன் வடிவேலு செய்யும் அட்டகாசங்கள் அவரது மாஸ்டர் பீஸ்களில் ஒன்றாகும். பின்னர், 2001-ஆம் ஆண்டு விஜய், சூர்யா இணைந்து நடித்த பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு ஏற்ற கான்ட்ராக்டர் நேசமணி கதாபாத்திரம் அவரது மற்றுமொரு மாஸ்டர்பீஸ். 2003-ஆம் ஆண்டு வின்னர் திரைப்படத்தில் வடிவேலு நடித்த கைப்புள்ள கதாபாத்திரம் வடிவேலுவின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. மாயி படத்தில் மொக்கை சாமியாக நடிகை கோவை சரளாவுடன் அவரது நகைச்சுவை காட்சிகளை பார்க்கும் ஒவ்வொரு கணவருக்கும் தங்களது மனைவிகளிடம் வாங்கிய அடிகளை நினைவூட்டும் என்பதே வேடிக்கையான உண்மை.
அந்த படத்தில் “வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்” தலைவராக கைப்புள்ள கதாபாத்திரத்தில் வடிவேலு செய்யும் அட்டகாசங்கள் அந்த படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கியது.
வயிறு வலிக்க சிரிக்கவைத்த இம்சை அரசன் :
நகைச்சுவை மூலம் மக்களை தன் வசம் கட்டி இழுத்துக் கொண்டிருந்த வடிவேலு, முதன்முறையாக முழுநீள திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். 2006-ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளியானது இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி.
அதுவரை வெளியான வடிவேலுவின் நகைச்சுவைகளுக்கு எல்லாம் வைரமகுடம் சூட்டியது போல, அந்த படத்தின் ஒவ்வொரு நகைச்சுவை காட்சிகளும் அமைந்திருந்தது. அந்த வருடத்தில் வெளியான படங்களிலே மாபெரும் வெற்றி பெற்ற படமாக இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி அமைந்தது. பின்னர், 2008-ஆம் ஆண்டு இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்திலும், எலி படத்திலும், தெனாலி படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.
விருதுகள் :
90-ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள வடிவேலு காலம் மாறிப்போச்சு, வெற்றி கொடிகட்டு, தவசி, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்காக மாநில அரசின் விருதை பெற்றார். சந்திரமுகி, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
வடிவேலுவின் பஞ்ச் :
கதாநாயகர்கள் பேசும் பஞ்ச் வசனங்களை காட்டிலும், வடிவேலு பேசிய காமெடி வசனங்களைதான் பலரும் பல இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர். அவரது காமெடி வசனங்களிலே “ இப்பவே கண்ண கட்டுதே” “ ஏன்டா..! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிகிட்டு இருக்குது..” “ வேணாம்… வலிக்குது… அழுதுடுவேன்…” “ மாப்பு…மாப்பு… வச்சுட்டான்யா ஆப்பு…” “ நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்..” “ ஆணியே புடுங்க வேண்டாம்..” “ பில்டிங் ஸ்ட்ராங்…. பேஸ்மட்டம் வீக்கு..” “ பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருஞ்சு..” “ எதையும் பிளான் பண்ணாம பண்ணக்கூடாது” “ போங்க தம்பி… போங்க…” “ எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்… ரொம்ப நல்லவன்னு சொன்னாங்க..” நானும் எவ்ளோ நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்குறது” என்று வடிவேலு பேசிய காமெடி வசனங்கள் நூற்றுக்கணக்கானவை மிகவும் பிரபலம். இன்றளவும் சமூக வலைதளங்களை வடிவேலு பேசிய காமெடி வசனங்களும், காமெடி காட்சிகளுமே ஆட்சி செய்கிறது என்பதே உண்மை.
அதேபோல அவர் ஏற்று நடித்த நாய் சேகர், கான்ட்ராக்டர் நேசமணி, சூனா பானா, பிச்சுமணி, தீப்பொறி திருமுகம், வண்டுமுருகன், புல்லட் பாண்டி, குப்பைத் தொட்டி கோவிந்தசாமி, வீச்சருவா வீராசாமி, சின்ன பகவதி, மாயி மொக்கை சாமி, சச்சின் அய்யாசாமி, ஆறு சுமோ, வெள்ளைச்சாமி, பாடிசோடா, பிகில் பாண்டி, படித்துறை பாண்டி, சலூன்கடை சண்முகம், அலார்ட் ஆறுமுகம், தேங்காய் கடை தேனப்பன், ஸ்டைல் பாண்டி என்று அவர் ஏற்று நடித்த மக்களிடம் பிரபலமான கதாபாத்திரங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
ஒரு நீண்ட கேப் :
விஜயகாந்துடன் ஏற்பட்ட கருத்து மோதலுக்கு பிறகு தி.மு.க.விற்கு ஆதரவாக 2011-ஆம் ஆண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த தேர்தலில் தி.மு.க. தோற்ற பிறகு, கடந்த 10 ஆண்டுகளாக குறைந்த அளவிலான படங்களிலேயே வடிவேலு நடித்தார்.
“கிங் இஸ் பேக்” :
கடந்த 10 ஆண்டுகளாக திரைத்துறையில் ஒதுங்கியே இருந்த வடிவேலு, இயக்குநர் ஷங்கருடனும் கருத்து வேறுபாடு காரணமாக இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி இரண்டாம் பாக சிக்கலில் சிக்கினார். தற்போது, அனைத்து பிரச்சினைகளும் சுமூகமாக முடிக்கப்பட்டு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படம் மூலம் ரீ என்ட்ரீ கொடுக்க உள்ளார். மேலும், ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து விட்டு பின்னர் தனது பாணியிலே மீண்டும் நகைச்சுவை நடிகராக நடிக்க திட்டமிட்டுள்ளார்.
ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, முரளி, சரத்குமார், சத்யராஜ், பார்த்திபன், அஜித், விஜய், சிம்பு என மூன்று தலைமுறையினருடனான காலகட்டத்திலும் ஏராளமான நடிகர்களுடன் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராக பாடகராகவும் வடிவேலு முத்திரை பதித்துள்ளார்.
அவர் பாடிய எட்டணா இருந்தா, போடா போடா புண்ணாக்கு, சிரிப்பு வருது சிரிப்பு வருது, ஊனம் ஊனம், ஆடிவா பாடி வா, கட்டுனா அவளை கட்டனும்டா, மதுரைக்கார விவேக்கு, வாடி பொட்ட புள்ள வெளிய என அவர் பாடிய அனைத்து பாடல்களும் மெஹா ஹிட்.
தமிழ் சினிமாவை கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஆட்சி செய்து வரும் நடிகர் வடிவேலு ரசிகர்கள் மனதில் அரசனாக அமர்ந்திருக்கும் சூழலில், தனது அரியணையில் அடுத்தடுத்து மகுடங்களை மேலும் சூட்டிக்கொள்ள ரசிகர்கள் சார்பாகவும், ஏபிபி நாடு சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.