Sushmita Sen Heart Attack: பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு.. இப்போ என்ன நிலை? எப்படியிருக்கிறார்?
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றவரும், ரட்சகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவருமான சுஷ்மிதா சென் தனக்கு 2 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றவரும், தமிழில் ரட்சகன் படத்தில் நடித்த பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் தனக்கு இரண்டு நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாள்களுக்கு முன் மாரடைப்பு
இது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. இதயத்தில் ஸ்டெண்ட் பொருத்தப்பட்டது. ‘எனக்கு பெரிய இதயம் இருக்கிறது’ என்று எனது இருதயநோய் நிபுணர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சரியான நேரத்தில் உதவிய பலருக்கும் நான் நன்றி தெரிவிக்க வேண்டும், மற்றொரு பதிவில் அதை தெரிவிக்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன் எனும் நல்ல செய்தியைத் தெரிவிப்பதற்காகவே தற்போது இந்தப் பதிவை பகிர்ந்துள்ளேன். நான் மறுபடி வாழத் தயாராக இருக்கிறேன்” என சுஷ்மிதா சென் பகிர்ந்துள்ளார்.
47 வயதாகும் சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மீண்டுள்ள சம்பவம், பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுஷ்மிதான் சென், சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஐபிஎல் முன்னாள் சேர்மேன் லலித் மோடியை டேட்டிங் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்தன. மேலும் சுஷ்மிதா சென்னும் லலித் மோடியும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவின.
எனினும், இதுவரை திருமணம் செய்து கொள்ளாத நடிகை சுஷ்மிதா சென் இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
சுஷ்மிதா சென் திரைப்பயணம்
மாடலிங் துறையில் நுழைந்து கோலோச்சி, தன் 18ஆம் வயதில், 1994ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நடிகை சுஷ்மிதா சென், 1996ஆம் ஆண்டு ’தஸ்டக்’ எனும் இந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் கால் பதித்தார்.
1997ஆம் ஆண்டு ரட்சகன் படத்தில் நடிகர் நாகார்ஜூனுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய ரசிகர்களின் இதயங்களையும் வென்றார். தொடர்ந்து பாலிவுட்டில் அமிதாப் தொடங்கி ஷாருக்கான், அக்ஷய் குமார் என டாப் ஹீரோக்களுடன் நடித்த சுஷ்மிதா சென், தமிழில் முதல்வன் படத்தில் இடம்பெற்ற ’ஷக்கலக்க பேபி’ பாடல் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளினார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் கோலோச்சி வரும் சுஷ்மிதா சென், இறுதியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ஆர்யா சீரிஸ் மூலம் கவனம் பெற்றார். தன் அடுத்த படங்கள் குறித்து அவர் வேறு அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடவில்லை.
மேலும் படிக்க: Watch Poorna BabyShower: கேரள முறைப்படி வேட்டி கட்டி வளைகாப்பு... நிறைமாத கர்ப்பிணியாக இதயங்களை அள்ளும் பூர்ணா!