Rajinikanth: “மத்திய அரசின் நடவடிக்கை இப்படி இருக்கணும்” – பஹல்காம் தாக்குதல் குறித்து ரஜினி சொன்ன யோசனை!
காஷ்மீரில் அமைதியான சூழலை கெடுக்க எதிரிகள் முயற்சித்து வருகின்றனர் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் அமைதியான சூழலை கெடுக்க எதிரிகள் முயற்சித்து வருகின்றனர் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கூடியிருக்கும் நிலையில் அவர்களை குறித்து ஒரு பயங்கரவாத கும்பல் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியது.
இதில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இந்த தீவிரவாத கும்பல் பாகிஸ்தானை சேர்ந்தது என இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அதோடு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து. வாஹா – அட்டாரி எல்லை உடனடி மூடல், பாகிஸ்தானியர்களுக்கு எஸ்விஇஎஸ் விசா ரத்து, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்ற உத்தரவு, டெல்லியில் இருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற உத்தரவு, பாகிஸ்தானில் இருக்கும் இந்திய அதிகாரிகள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என பல்வேறு அதிரடி நடவடிக்களை பிரதமர் தலைமையிலான குழு முடிவு எடுத்தது.
இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் 2 படப்பிடிப்பு தமிழக கேரள எல்லையான கோவை ஆனைக்கட்டி, மாங்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்காக ஆனைக்கடியில் இருந்து மாங்கரைக்கு காரில் சென்றார் ரஜினி. பின்னர் சென்னை திரும்பினார். அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம் பஹல்காம் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார். மேலும், “காஷ்மீரில் அமைதியான சூழலை கெடுக்க எதிரிகள் முயற்சி செய்து வருகின்றனர். குற்றவாளிகளை கண்டு பிடித்து கனவில் கூட நினைக்காத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜெயிலர் படம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அனிருத் இசையில் மிரட்டி விட்டிருப்பார். இந்த படம் கிட்டத்தட்ட ரூ.600 கோடிக்கும் மேல் வசூலை எட்டி சாதனை படைத்தது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அட்டப்பாடி மலைத்தொடரில் நடந்து வருகிறது. இங்கு ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.





















