இன்று முதல் விஜய் சேதுபதி வழங்கும் ‛மாஸ்டர் செஃப்’ -என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இன்று முதல் சன் டிவியில் மாஸ்டர் செஃப் சமையல் போட்டி நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் நடிகர் விஜய் சேதுபதி.
இன்று முதல் சன் டிவியில் மாஸ்டர் செஃப் சமையல் போட்டி நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் நடிகர் விஜய் சேதுபதி.
புரோமோக்களைப் பார்த்தே எகிறிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் தமிழ் மக்களுக்கு இன்று காணக் கிடைக்கவுள்ளது மாஸ்டர் செஃப் போட்டி. தமிழில் ஆயிரமாயிரம் சமையல் நிகழ்ச்சிகள் இருந்தாலும் கூட மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ்.. இது புதுசு. ஏன் தெரியுமா?
மாஸ்டர் செஃப் வரலாறு..
உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென முத்தாய்ப்பாய் ஓரிடத்தைப் பிடித்து வைத்துள்ள ரியாலிட்டி ஷோதான் மாஸ்டர் செஃப். இந்த நிகழ்ச்சி முதல்முறையாக பிரிட்டனில் தான் ஒளிபரப்பானது. அங்கே மெகா ஹிட் அடிக்க நிகழ்ச்சி அடுத்தடுத்து வெவ்வேறு நாடுகளுக்கும் பரவியது.
ஆனால், மாஸ்டர் செஃப்பும் புதிய ஐடியா என்று சொல்லிவிட முடியாது அதற்கு முன்னோடியாக ஹெல்ஸ் கிச்சன் என்றொரு ரியாலிட்டி ஷோ இருந்தது. ஹெல்ஸ் கிச்சனுக்குப் போட்டாபோட்டியாக உருவான மாஸ்டர் செஃப் இன்று உலகளவில் மற்ற சமையல் போட்டி நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ஒரு பிராண்ட் அடையாளமாக உருவெடுத்துள்ளது.
மாஸ்டர் செஃப் எத்தனையோ நாடுகளில் ஒளிபரப்பப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த வரவேற்பு சிறப்புமிக்கது. 2009-ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 13 சீசன்களை மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா கண்டுள்ளது. அதுபோல் இந்நிகழ்ச்சிக்கான பார்வையாளர்களும் ஏராளம்.
என்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாஸ்டர் செஃப்பாக அது இது என்று பெரிய தகுதியெல்லாம் தேவையில்லை. சமையல் தொழிலை பிரதான வருவாயாக கொண்டிராத 18 வயதிற்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மிக எளிமையான இந்த விதிமுறை இந்நிகழ்ச்சிக்கு பலரையும் ஈர்த்தது. இந்தப் போட்டிக்கு 3 பேர் கொண்ட நடுவர் குழு இருக்கும். போட்டியாளர்கள் சமையல் கைவண்ணத்தை ருசி பார்த்து அதிலிருந்து 50 பேரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
பின்னர் அந்த 50 பேரின் சமைக்கும் திறன், கலையம்ச அடிப்படையில் சோதனைக்கு உட்படுத்தப்படும். சமையல் நேரம், சமைத்த உணவை பிளேட்டிங் செய்யும் விதம், ருசி, பதம், மனம் எனப்பல அம்சங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும். 50 பேரில் ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு, இறுதிச் சுற்றில் 12 பேர் இடம்பெறுவர். இந்த ஒரு டஜன் பேரில் ஒருவர் தான் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார்.
இதில் பங்கேற்று வெற்றி பெறும் டைட்டில் வின்னருக்கு தொழில்முறை செஃப்பிடம் இருந்து சமையல் பயிற்சி பெறும் வாய்ப்பும், அவர்களின் பிரத்யேக ரெசிப்பிக்கள் அடங்கிய ஒரு புத்தகம் வெளியிடும் வாய்ப்பும், கூடவே $250,000 டாலர் ரொக்கப் பணமும் பரிசாகக் கிடைக்கும். அதாவது இந்திய மதிப்பில் ஏறக்குறைய 1.8 கோடி ரூபாய் பரிசாகக் கொடுக்கப்படும்.
குக் வித் கோமாளிக்கு டஃப் ஃபைட் கொடுக்குமா?
ஹெல்ஸ் கிச்சன் ரியாலிட்டி ஷோவுக்குப் போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட மாஸ்டர் செஃப் இப்போது கிச்சன் போட்டிகளின் கிங்காக இருப்பது போல் விஜய் டிவியின் குக் வித் கோமாளிக்கு மாஸ்டர் செஃப் டஃப் ஃபைட் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
குக் வித் கோமாளி சமையல் போட்டி தமிழ்த் தொலைக்காட்சிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் ஜனரஞ்சகமாக, நகைச்சுவை ததும்ப, புதுப்புது சுற்றுகளால் மக்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ளது. இந்நிலையில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் சன் டிவியின் மாஸ்டர் செஃப் இதற்கு ஈடு கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.