Actor Marimuthu: "மன்னவன் சாய்கிறான்.." மறைந்த நடிகர் மாரிமுத்துவை போற்றும் புகழஞ்சலி வீடியோ..! ரிலீஸ் செய்த சன்டிவி..!
எதிர்நீச்சல் புகழ் மறைந்த நடிகர் மாரிமுத்துவை கௌரவப்படுத்தும் விதமாக சன் தொலைக்காட்சியில் புகழஞ்சலி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
எதிர்நீச்சல் தொலைக்காட்சி தொடர் மூலம் தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இந்த சீரியல் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஒளிபரப்பாவதற்கு இவரது நடிப்பும். குரலும் ஒரு காரணம் ஆகும்.
ஆதி குணசேகரனுக்கு மரியாதை:
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகம் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அவரது மறைவால் எதிர்நீச்சல் சீரியலில் அவரது அடையாளமாக திகழும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அடுத்து நடிக்கப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், தற்போது வரை அவர் நடித்துள்ள எபிசோட்களே ஒளிபரப்பாகி வரும் சூழலில், மறைந்த மாரிமுத்துவை கவுரவப்படுத்தும் விதமாக சன் தொலைக்காட்சியின் மன்னவன் சாய்கிறான் என்ற புகழஞ்சலி வீடியோ வெளியிட்டுள்ளது.
ரசிகர்கள் சோகம்:
எதிர்நீச்சல் சீரியலில் அவர் நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை கொண்டே இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. ஆதி குணசேகரின் வில்லத்தனத்தை பார்த்து அவரை திட்டிய ரசிகர்கள், தற்போது சீரியலில் ஒளிபரப்பாகும் அவரது கதாபாத்திரத்தை கண்டும், இந்த வீடியோவை கண்டும் சோகம் அடைந்து வருகின்றனர்.
நடிகர் மட்டுமின்றி மாரிமுத்து இயக்குனராக கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் படங்களை இயக்கியுள்ளார். மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமான பிறகு நடிப்பில் பிசியாகிவிட்டார். பரியேறும் பெருமாள் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும் வில்லனின் அடியாளாக படம் முழுவதும் வருவார். இவரது நடிப்பில் இன்னும் விழா நாயகன், இந்தியன் 2 படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆதி குணசேகரன்:
அவரது உடலுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் அவரது சொந்த ஊரான வருசநாடு அருகே உள்ள பசுமலைத்தேரியில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவால் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரனாக நடிப்பதற்கு எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் மாரிமுத்து மறைந்த அன்றைய தினத்தின் கடைசி பகுதியில் இருந்து அவரது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு வேறொரு நபர் குரல் அளித்து வருகிறார். இன்னும் சில எபிசோட்களுக்கு ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் புதிய நபர் நடிக்க உள்ளார் என்று சின்னத்திரை தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மாரடைப்பு ஏற்பட்ட பிறகு நடிகர் மாரிமுத்து தானே காரை ஓட்டிச்சென்று மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார்.
அவரது மரணத்திற்கு அதுவும் முக்கிய காரணம் என்று மருத்துவ தரப்பில் கூறப்படுகிறது. மறைந்த நடிகர் மாரிமுத்துவிற்கு ஏற்கனவே இதயத்தில் 2 ஸ்டண்ட்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: Amudhavum Annalakshmiyum: செந்திலுக்கு கண் பார்வை திரும்பிடுச்சு.. ஷாக் கொடுத்த மாயா.. அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட்!