Madurai Muthu: ”ரூ.1,000 கொடுத்தா சாமி வீட்டுக்கே வரும்..” அர்ச்சகர்களை சாடிய மதுரை முத்து
கோயில்களில் கட்டணம் வசூலித்து சாமி தரிசனம் செய்யப்படுவது பற்றி நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து பேசியுள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
கோயில்களில் கட்டணம் வசூலித்து சாமி தரிசனம் செய்யப்படுவது பற்றி நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து பேசியுள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்தப் போவது யாரு’ என்ற ரியாலிட்டி காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே அறிமுகமானவர் மதுரை முத்து. இவரின் ஒன்லைன் கவுண்டர்கள் மிகவும் பிரபலமானவை. பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சி மூலம் தனது அடுத்தக்கட்ட வளர்ச்சியை அடைந்தார்.
தொடர்ந்து பட்டிமன்றம், மேடை பேச்சு, குக் வித் கோமாளி என பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்ந்தார். அவருக்கென்றும், அவரின் ஸ்டாண்ட் அப் காமெடிகளுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படியான நிலையில் சமீபகாலமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார் மதுரை முத்து. முன்னதாக ஒரு நேர்காணலில் பேசியிருந்த அவர், வெற்றிமாற இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் பணியாற்ற கூப்பிட்டபோது மறுத்ததாக தெரிவித்தார்.
மேலும் சசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் படத்திலும்ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்திலும் நடிக்க அழைப்பு வந்தபோதும் நடிக்க வைக்க முடியாமல் போய் விட்டதாக தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் நடிகர் விமல் நடிக்கும் ‘தேசிங்கு ராஜா 2’ படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் சின்னத்திரை, பெரிய திரை நிகழ்ச்சிகளை தவிர்த்து வெளியே தனியார் நிகழ்ச்சிகளிலும் மதுரை முத்து தனது ஸ்டண்ட் அப் காமெடியால் அசத்தி வருகிறார்.
மதுரை முத்து U👍👍👍😆😆😆😆 pic.twitter.com/Q7Cqhf3BFQ
— Ramu1811968 (@ramu18119681) February 11, 2024
இப்படியான நிலையில் மதுரை முத்துவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், “ஆன்மீகத்தில் அழகாக சாமி கும்பிடுபவர்கள் இருக்கிறார்கள். இப்போது எல்லா இடங்களிலும் ஸ்பெஷல் அர்ச்சனை என்ற ஒன்று உள்ளது. ரூ.50 கொடுத்தால் குங்குமம், விபூதியை அதிகமாக கொடுப்பார்கள். ரூ.100 கொடுத்தால் நம்மை அழைத்து சாமி சரியாக தெரியும் இடத்தை காட்டி தரிசனம் செய்ய சொல்வார்கள். ரூ.200 கொடுத்தால் கேட் கம்பியை திறந்து விட்டு உள்ளே வந்து நில்லுங்க சொல்வார்கள். ரூ.300 கொடுத்தவனை வாங்க என அழைத்து பெருமாளோடு செல்ஃபி எடுத்துக்கோங்க என சொன்னார்கள்.
ஒருத்தன் ரூ.500 கொடுத்தான். அவனிடம், ‘போனை பெருமாளிடம் கொடுங்கள். அவர் செல்ஃபி எடுப்பாரு’ என சொன்னார்கள். ரூ.1000 கொடுத்தவனைப் பார்த்து அர்ச்சகருக்கு கோபம் வந்து விட்டது. ‘ஏன் சார் இங்கெல்லாம் வர்றீங்க? போன் பண்ணா சாயங்காலம் பெருமாளை தூக்கிட்டு வீட்டுக்கு வந்துருப்பேன்ல” என மதுரை முத்து தனது பேச்சின் போது சொன்னார். அவரின் இந்த பேச்சுக்கு அந்த அரங்கில் இருந்தவர்கள் சிரிப்பலையில் ஆழ்ந்தனர். ஆனால் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் மதுரை முத்துவை திட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம் அவரின் கருத்துகளுக்கும் ஆதரவு குவிந்து வருகிறது.