Sridevi Vijayakumar: கொஞ்சம் கூட மாறல! பிரபாஸுக்கு புகழாரம் சூட்டிய ஸ்ரீதேவி
Sridevei Vijayakumar : 'சுந்தரக்கண்டா' படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் நடிகர் பிரபாஸ் பற்றி பேசி இருந்தார் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மறைந்த நடிகை மஞ்சுளா விஜயகுமார் தம்பதியின் கடைக்குட்டி மகளான ஸ்ரீதேவி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவர். குழந்தை நட்சத்திரமாக சத்யராஜ் நடித்த 'ரிக் ஷாமாமா' படத்தில் நடித்த குட்டி பப்ளிமாஸ் பாப்பாவாக இருந்த ஸ்ரீதேவி தெலுங்கு திரையுலகின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சில காலங்கள் பிஸியான நடிகையாக இருந்த அவர் சினிமாவில் இருந்து விலகி தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.
'காதல் வைரஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் ஸ்ரீதேவி. தொடர்ந்து பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் உள்ளிட்ட தமிழ் படங்களில் தனுஷ், ஜீவா, மாதவன் உள்ளிட்டோருடன் நடித்திருந்தார். தமிழ் தவிர ஏராளமான தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்ட ஸ்ரீதேவி சமீப காலமாக சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியின் நடுவராக என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து தன்னுடைய சகோதரி ப்ரீத்தா விஜயகுமார் - இயக்குனர் ஹரி தம்பதியரின் மகன் ஸ்ரீராம் ஹரி இயக்கத்தில் யூடியூபில் வெளியான 'ஹம்' என்ற ஷார்ட் பிலிமில் நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை ஸ்ரீதேவி. அறிமுக இயக்குநர் வெங்கடேஷ் நிம்மலபுடி இயக்கத்தில் நாரா ரோஹித் ஹீரோவாக நடிக்கும் நகைச்சுவை படத்தில் ஹீரோயினாக ரீ என்ட்ரி கொடுக்கிறார் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். நடித்து விர்த்தி வாகனியும் மற்றுமொரு ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரிடம் அவரின் முதல் பட ஹீரோவான பிரபாஸ் குறித்து கேட்கப்பட்டது.
"என்னுடைய முதல் படமான ஈஸ்வர் படத்தில் நடிக்கும் போது எப்படி இருந்தாரோ அதே குணாதிசயங்களுடன் தான் இன்றும் இருக்கிறார். இத்தனை பெயர், புகழ், முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்ற பிறகும் அவரின் கேரக்டரில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அதே போல எளிமையாகவே இருக்கிறார். சரியான வாய்ப்புகள் அமைந்தால் அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பேன். மேலும் நாங்கள் நடித்த ஈஸ்வர் படம் ரீ ரிலீசாக உள்ள நிலையில் அதை பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்" என தெரிவித்து இருந்தார் நடிகை ஸ்ரீதேவி.