சோஷியல் மீடியா அப்யூஸ்.. சொந்த ஐடியுடன் பேஸ்புக்கில் இருக்க பயம்; படித்தவர்கள்தான் மோசம்! - பாரதி பாஸ்கர்
இந்நிலையில் கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பல்வேறு பிரபலங்களிடமும் சோஷியல் மீடியா அப்யூஸ் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
சோஷியல் மீடியாக்களின் காலம் இது. முன்பெல்லாம் சோகமோ, சந்தோஷமோ, வெற்றியோ, தோல்வியோ, வரவோ, நட்டமோ எதுவாக இருந்தாலும் நட்புக்களிடமும், சொந்த பந்தங்களிடமும் சொல்லி மகிழ்ந்தோம், சோகத்தைத் தொலைத்தோம். ஆனால் இன்று கார் வாங்கியிருக்கேன், டீ குடிக்கிறேன், படத்துக்கு போனேன், கமிட் ஆயிட்டேன், பேபி பாய்.. என்ற எல்லா அறிவிப்புகளும், பகிர்வுகளும் சமூக வலைதளங்கள் மூலம் தான் மற்றவர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பல்வேறு பிரபலங்களிடமும் சோஷியல் மீடியா அப்யூஸ் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது நகுல் மற்றும் ஸ்ருதி நகுல் இது குறித்துப் பேசுகையில், சட்டத்திட்டங்கள் வலுவானதாக இருக்க வேண்டும். இதுமாதிரியான அப்யூஸ் குறித்து புகார் செய்ய புகார் எண்கள் நிறைய வர வேண்டும். முதலில் நம் குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் பாலியல் கல்வியைப் புகட்ட வேண்டும். அப்படிச் சொல்லித்தந்தால் பெண் பிள்ளைகளுக்கும் இப்படியான அப்யூஸை எதிர்கொள்ளத் தெரியும். ஆண் பிள்ளைகளுக்கும் அப்யூஸ் செய்யக்கூடாது என்று புரியும் என்றனர்.
நடிகையும் தொகுப்பாளினியுமான அர்ச்சனா கூறும்போது, முகத்தைக் காட்டாமல் இஷ்டத்திற்குப் பேசும் இவர்களுக்கு அவர்களின் அம்மா, அக்கா, தங்கை, மனைவி மீது மரியாதை இருக்குமா என்று தெரியவில்லை. இருந்திருந்தால் அவர்கள் எந்தப் பெண்ணையும் அப்படிப் பேசமாட்டார்கள். தாங்கள் இப்படிப் பேசுவதை அவர்கள் வீட்டிலும் காட்டிக் கொள்ள மாட்டார்கள். அதனால் முகத்தைக் காட்ட பயப்படும் இந்தக் கோழைகளின் கருத்தை சட்டை செய்யக் கூடாது என்றார்.
நடிகர் பாக்யராஜின் மனைவியும் சாந்தனு பாக்யராஜின் மனைவி கீர்த்தி கூறுகையில், ஆமாம் சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்கள் நிறையவே இருக்கின்றன. அவற்றில் சில மிகவும் வன்மமானதாக உள்ளன. என்னைப் பொறுத்தவரை அப்படியான பதிவுகளைப் பதிவோரின் தரம் அவ்வளவே. அவர்களின் கருத்துகளை கேர் செய்யவே மாட்டேன். ஒருபோதும் அப்படியான கருத்துகளுக்கு பதில் சொல்லவே மாட்டேன் என்றார்.
அதேபோல், பட்டிமன்றப் பேச்சாளரான பாரதி பாஸ்கர் பேசுகையில் என்னைப் பொறுத்தவரை இதுபோன்ற செயல்களில் படித்தவர்கள் தான் ஈடுபடுகின்றனர். படித்தால் பண்படுவோம் என்ற வாக்கே பொய்க்கும் அளவுக்கு மெத்தப் படித்தவர்களும் கூட கருத்துகளுக்கு கருத்தால் பதில் சொல்லாமல், அம்மா, அக்கா என்று குடும்பத்தினரை அசிங்கமாகப் பேசுகின்றனர். எனக்குத் தெரிந்த பேச்சாளர் ஒருவர், என் மகளை தனியாக 12 மணிக்குப் பேருந்தில் அனுப்புவேன். ஆனால் அவள் சொந்த ஐடியுடன் பேஸ்புக்கில் இருக்க அவளை அனுமதிக்கமாட்டேன் என்று கூறினார். இதிலிருந்து சமூக வலைதளத்தின் கோர முகம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சமூக வலைதளங்களால் நன்மைகளும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.