A.R.Rahman : கடவுளுக்கு அஞ்சும் மனிதர் ரஹ்மான்.. சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த ஷங்கர் மகாதேவன்
ஏ.ஆர் ரஹ்மானுடன் பாம்பே படத்தின் இணைந்து வேலை செய்தவர் ஷங்கர் மகாதேவன். 28 ஆண்டுகளாக ரஹ்மானை பார்த்துவரும் ஷங்கர் மகாதேவனிடம் ரஹ்மான் குறித்து பேசுவதற்கு நிறைய இருக்கின்றன.
28 ஆண்டுகளுக்கு முன் தான் பார்த்த கடவுளுக்கு அஞ்சும் அதே நபராகவே இன்னும் ஏ.ஆர். ரஹ்மான் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஷங்கர் மகாதேவன்.
ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் ஷங்கர் மகாதேவன் இருவரும் பாம்பே படத்திற்கு முதல் முறையாக இணைந்து பணியாற்றினார்கள். ஏ,ஆர், ரஹ்மான் இசையமைத்து சங்கர் மகாதேவன் பாடகராக இந்தப் படத்தில் பணியாற்றினர். அண்மையில் பேட்டி ஒன்றில் ரஹ்மானைப் பற்றி பல்வேறு சுவாரஸ்யமானத் தகவல்களை ஷங்கர் மகாதேவன் பகிர்ந்துகொண்டார்.
ரஹ்மானுடன் முதல் முறையாக வேலை செய்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட ஷங்கர் அதுவரை பின்பற்றி வந்த வழக்கமான முறையில் இல்லாமல் ரஹ்மானுடன் வேலை செய்தது தனக்கு புதிதான ஒரு அனுபவமாக இருந்தது என கூறினார்.
இருவரும் சேர்ந்து பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மிக இயல்பாக மேற்கொண்டார்கள் என்று அவர் கூறினார். அதே நேரத்தில் ஒரு படத்திற்கு மிகச் சரியாக எந்த இசையைத் தேர்வுசெய்ய வேண்டும் என்பதும் ரஹ்மானுக்குத் தெரிந்திருந்தது எனக் கூறினார் ஷங்கர்.
”ஒரு மனிதனாக கடந்த 28 ஆண்டுகளில் ரஹ்மானின் குணத்தில் எந்த வகையான மாற்றமும் தென்படவில்லை. அவர் தொடக்கத்தில் இருந்த அதே பணிவான நபராக தான் இன்றும் இருக்கிறார். அவரிடம் இருக்கும் ஒரு மாற்றம் என்றால் முன்னைவிட இன்னும் தைரியசாலியாக இருக்கிறார் ரஹ்மான். முன்பெல்லாம் ரஹ்மான் மிகுந்த சுய பிரஞ்கைக் கொண்டவராக மேடைகளில் தயக்கப்படுபவராக இருப்பார். ஆனால் இன்று மேடைகளில் அவரது தன்னம்பிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. மற்றபடி தொடக்கத்தில் தான் பார்த்த , பணிவான, இசை ஆற்றல் நிறைந்த கடவுளுக்கு அஞ்சும் ஒரு மனிதனாகவே ரஹ்மான் இருக்கிறார்“ என்று ஷங்கர் மகாதேவன் கூறியுள்ளார்.
மேலும் ”ஒரு இசையமைப்பாளராக ரஹ்மான் ஒரு மாணவனைப்போல் ஆர்வம் நிறைந்தவராகவே இருக்கிறார். இசை அமைப்பதிலும் தொழில்நுட்ப ரீதியாகவும் அவரது வளர்ச்சியை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். குறிப்பாக உலகில் இருக்கும் பல்வேறு இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் ரஹ்மானின் இசையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தையும் உருவாக்கியிருக்கிறது. அவரது இசைக்கோர்வைகள் பலமடங்கு மெருகேறியிருக்கின்றன.
ரஹ்மான் இசையமைத்த பாம்பே திரைப்படம் உலகளவில் பரவலாக கவணிக்கப்பட்டது. டைம்ஸ் இதழ் உலகின் சிறந்த 10 இசைகோர்வைகளின் பட்டியலில் பாம்பே படத்தின் பாடல்களை சேர்த்து வெளியிட்டது.
ரஹ்மான் தற்போது மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் இந்தப் படத்தின் இசை வெளியிடு மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது .