![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Box Office Collection : ரசிகர்களை திருப்திபடுத்தியது யார்.. ப்ளூ ஸ்டார் , சிங்கப்பூர் சலூன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
அசோக் செல்வன் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் மற்றும் ஆர்.ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரத்தை பார்க்கலாம்
![Box Office Collection : ரசிகர்களை திருப்திபடுத்தியது யார்.. ப்ளூ ஸ்டார் , சிங்கப்பூர் சலூன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் singapore saloon blue star first day box office collection report Box Office Collection : ரசிகர்களை திருப்திபடுத்தியது யார்.. ப்ளூ ஸ்டார் , சிங்கப்பூர் சலூன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/26/1026292d4df34ea4bf9f827976e6ecc91706271350570572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குடியரசு தின விடுமுறைகளை முன்னிட்டு வெளியான ப்ளூ ஸ்டார் மற்றும் சிங்கப்பூர் சலூன் ஆகிய இரு படங்கள் முதல் நாளில் எவ்வளவு வசூல் ஈட்டியுள்ளன என்பதை பார்க்கலாம்.
குடியரசு தின வெளியீடுகள்
இந்த ஆண்டு குடியரசு தினத்தை ஒட்டி நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகளில் ரசிகர்களை திரையரங்கத்தின் பக்கம் ஈர்க்கும் நோக்கத்தில் நான்கு படங்கள் வெளியாகின. இந்த நான்கு படங்களில் இரண்டு தமிழ் படங்கள், மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன், ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ஃபைட்டர் உள்ளிட்டப் படங்கள் வெளியாகியுள்ளன. தமிழில் வெளியான ப்ளூ ஸ்டார் மற்றும் சிங்கப்பூர் சலூன் ஆகிய இரு படங்களின் முதல் நாள் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
ப்ளூ ஸ்டார்
அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் பா. ரஞ்சித் வழங்கியிருக்கும் படம் ப்ளூ ஸ்டார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டிய திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடித்து வெளியாகும் முதல் படம் என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் படத்தின் ரிலீஸுக்கு முன்பாக வெளியான ரயிலின் ஒலிகள் மற்றும் அரக்கோணம் ஆந்தம் பாடல்களும் பெரியளவில் ரீச் ஆகின. கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலை ப்ளூ ஸ்டார் படம் பேசியுள்ளது.
சாக்னிக் தளம் வெளியிட்டிருக்கும் தகவலின் படி ப்ளூ ஸ்டார் படம் முதல் நாளில் 60 லட்சம் வரை வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் நாளான இன்று படம் 64 லட்சம் வரை வசூல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் சலூன்
இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன். மீனாக்ஷி செளதரி ,சத்யராஜ், லால் , ஜான் விஜய் , கிஷன் தாஸ் , உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அரவிந்த் சாமி , ஜீவா மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தில் கெளரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஒரு பெரிய ஹேர் ஸ்டைலிஸ்டாக வேண்டும் என்கிற கனவை சுமக்கும் கதாநாயகன், அந்த கனவை நிஜமாக்க எதார்த்தத்தில் அவன் எதிர்கொள்ளும் சவால்கள் பிரச்சனைகளை மையமாக வைத்து காமெடி கலந்து எடுக்கப் பட்டுள்ள படம் சிங்கப்பூர் சலூன்.
சாக்னிக் தளத்தின் படி சிங்கப்பூர் சலூன் திரைப்படம் முதல் நாளில் இந்தியளவில் 1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இரண்டாவது நாளான இன்று படம் 1 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமர்சன ரீதியாக ப்ளூ ஸ்டார் படம் பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக ஆர்.ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்திற்கே ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது என்பதையே இந்த வசூல் நிலவரங்கள் காட்டுகின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)