Selvaraghavan Tweet: “பழைய இயக்குநரை மிஸ் செய்கிறேன்” - கவலை தெரிவித்த ரசிகர்! காட்டமாக பதிலளித்த செல்வராகவன்!
’காதல் கொண்டேன்’ திரைப்படம் பார்த்து செல்வராகவனின் இயக்கத்தை மிஸ் செய்து பதிவிட்ட ரசிகருக்கு செல்வராகவன் சற்று காட்டமாக பதிலளித்துள்ளார்.
’காதல் கொண்டேன்’ திரைப்படம் பார்த்து பழைய செல்வராகவனை மிஸ் செய்த ரசிகரிடம் தான் இன்னும் இறக்கவில்லை என இயக்குநர் செல்வராகவன் பதிலளித்துள்ளார்.
21 ஆம் நூற்றாண்டில் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக உருவெடுத்து இளைஞர்களை தன் திரை மொழியால் கட்டிப்போட்டவர் இயக்குநர் செல்வராகவன்.
2002ஆம் ஆண்டு வெளியான ’துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகர் தனுஷ் ஒரு பக்கம் கால் பதிக்க, மற்றொருபுறம் அவரது அண்ணனும் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களுள் ஒருவருமான செல்வராகவனும் புயலாய் எண்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என அசரடிக்கும் படங்களை வழங்கி ஒரு கலைஞனான செல்வராகவன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.
தொடர்ந்து 2013ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புகளிடையே ஆர்யா - அனுஷ்கா நடிப்பில் வெளியான இரண்டாம் உலகம் படம் தோல்வியைத் தழுவ, அதன் பின் தன் தனிப்பட்ட காரணங்களால் ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டார் செல்வா.
மெல்லிய உணர்வுகள், உறவுச் சிக்கல்களை யதார்த்தமான கதைக்களத்தில் பேசி கல்ட் கிளாசிக் படங்களை வரிசையாக வழங்கிய செல்வராகவன், சிறு இடைவெளி எடுத்துக் கொண்டபோதும் அவரது ரசிகர் பட்டாளம் ஓயாமல் அவரது அடுத்தடுத்த படத்துக்காக தொடர்ந்து வழிமேல் விழி வைத்து காத்துள்ளனர்.
முன்னதாக சூர்யா நடித்து செல்வராகவன் இயக்கிய என்.ஜி.கே திரைப்படமும் பெரிய வரவேற்பைப் பெறாத நிலையில், நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கிய செல்வா, பீஸ்ட், சாணிக்காயிதம், பகாசூரன் ஆகிய படங்களில் நடித்து கவனமீர்த்துள்ளார்.
மேலும் சமீபகாலமாக தன் சமூக வலைதளப் பக்கத்தில் படுஆக்டிவாக இருக்கும் செல்வராகவன், தத்துவார்த்த பதிவுகளைத் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இச்சூழலில், ’காதல் கொண்டேன்’ திரைப்படம் பார்த்து தன் இயக்கத்தை மிஸ் செய்து பதிவிட்ட ரசிகருக்கு செல்வராகவன் சற்று காட்டமாக பதிலளித்துள்ளது கவனமீர்த்துள்ளது.
“விவேக் ஒரு காமெடியில் சொல்லுவார், இயக்குநர் ஒவ்வொரு ஃப்ரேமும் செத்துக்கியிருக்கார் என்று, அப்பிடி ஒரு படம் இது. அப்படி ஒரு இயக்குநர் செல்வராகவன், அது ஒரு காலம் !” என ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ”ஏன் நண்பரே இப்படி? நான் இன்னும் சாகவோ அல்லது ஓய்வு பெறவோ இல்லை. நான் எனக்காக சிறிது காலம் செலவழித்தேன். அவ்வளவு தான் நான் என் நாற்பதுகளில் இருக்கிறேன். ஐயாம் பேக்” எனப் பதிவிட்டுள்ளார்.
Why my friend ? I'm not dead or retired. I have just spent some time for myself. I'm just in my forties .. And I'm back. https://t.co/CYdLcoG97k
— selvaraghavan (@selvaraghavan) May 3, 2023
செல்வராகவனின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.