7G Rainbow Colony 2 : சுட சுட ரெடியாகிறதா '7ஜி ரெயின்போ காலனி'? ரெடியாகிறாரா செல்வ ராகவன்?
19 ஆண்டுகளுக்கு பிறகு '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகி விட்டார் இயக்குநர் செல்வராகவன் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர் செல்வராகவன். அவர் தரமான இயக்குனர் என்பதற்கு அவரது இயக்கத்தில் வெளியான படங்களே சாட்சி. இயக்குநராக மட்டுமின்றி எழுத்தாளர் மற்றும் நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தி வருகிறார். சமீபகாலமாக படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஒரு இயக்குநராக மக்கள் மத்தியில் அவருக்கு கிடைத்த வரவேற்பை போலவே நடிகராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
செல்வராகவன் :
கடந்த ஆண்டு நடிகர் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த 'நானே வருவேன்' திரைப்படத்தை இயக்கி நடித்தும் இருந்தார். அதனை தெடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் செல்வா ராகவன். சமீப காலமாக சோசியல் மீடியாவில் பலதரப்பட்ட கருத்துக்களையும் பதிவுகளை முன்வைத்து போஸ்ட் செய்து வருகிறார். அவை ட்ரெண்டிங்காகவும் இருந்து வருகின்றன. அந்த வகையில் செல்வராகவன் குறித்து வெளியாகியுள்ள மற்றொரு தகவலை அடுத்து சோஷியல் மீடியாவில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ரெடியாகும் இரண்டாம் பாகம்:
அதாவது 19 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வராகவன் இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் என்றும் ஜூன் மாதம் முதல் அதன் பணிகளை தொடங்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் அது எந்த படமாக இருக்கும் என யூகிக்க துவங்கிவிட்டனர். ஒரு சிலர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை' படமாக இருக்கும் என கூற ஒரு சாரார் கார்த்தி நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படமாக இருக்கும் என்று அவரவர்களின் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
'7ஜி ரெயின்போ காலனி' பார்ட் 2 :
இந்த இரெண்டு ஆப்ஷனுமே இல்லை, செல்வராகவன் இரண்டாம் பாகத்தை எடுக்க போவது, ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், மனோரமா மற்றும் பலர் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்ற '7ஜி ரெயின்போ காலனி' படம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இன்றும் இது காதலர்களின் பேவரட் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது '7ஜி ரெயின்போ காலனி'. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றும் பிளே லிஸ்ட்டில் நிச்சயம் இடம் பெற்று இருக்கும் பாடல்கள். யுவன் - நா. முத்துக்குமார் காம்போவில் வந்த மிகவும் சிறந்த படம்.
ஹீரோ ஹீரோயின் யார் ?
'7ஜி ரெயின்போ காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவி கிருஷ்ணா, யுவன் ஷங்கர் ராஜா நிச்சயமாக இருப்பார்கள் என்றாலும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் சோனியா அகர்வால் கதாபாத்திரம் இறந்ததாக கட்டப்பட்டதால் வேறு ஒரு நடிகை இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். மேலும் இதன் மூலம் ரசிகர்கள் புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தையும் செல்வராகவனிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.