Salaar Trailer: மிரட்டும் சண்டைக் காட்சிகள்; புல்லரிக்க வைக்கும் வசனங்கள்; வெளியானது சலார் பாகம் ஒன்று ட்ரைலர்
Salaar Trailer : 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
Salaar Trailer : கேஜிஎஃப் 1 & 2 பாகங்களை இயக்கி, கன்னட சினிமா பாக்ஸ் ஆஃபிஸை புரட்டிப்போட்டு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல். இவரது ஆழமான கதையோட்டம் தரமான திரைக்கதை செலவிடப்படும் பொருட்செலவிற்கு தரமான படைப்பை எடுத்து வெற்றி கண்டவர் பிரசாந்த் நீல்.
இவர் இயக்கத்தில் அடுத்த படமாக பிரபாஸ் - ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ள ‘சலார்’ திரைப்படம் வெளிவரவிருக்கிறது. மலையாள ஸ்டார் பிருத்விராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள நிலையில், தெலுங்கு ஸ்டார் ஜெகபதி பாபு இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலர் மொத்தம் 3.47 நிமிடங்கள் படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. நட்பை மைய்யப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள படத்தின் மைய்யக்கரு அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் ப்ரித்வி ராஜ் வில்லன் என தொடக்கத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் படத்தில் பிரபாஸ் மற்றும் ப்ரித்வி ராஜ் நண்பர்களாக நடித்துள்ளனர். அதேநேரத்தில் படத்தின் பாதி கதை முடிந்த பின்னர் அதாவது முதல் பாகம் முடியும்போது இருவரும் பகைவர்களாக மாறுகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகின்றது.
வரும் டிசம்பர் 22ஆம் தேதி சலார் படம் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரத்தம் தெறிக்க பிரபாஸ் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ஷாருக்கான் - ராஜ்குமார் ஹிரானி இணைந்துள்ள டங்கி படம் வரும் டிச.22ஆம் வெளியாகும் என சமீபத்தில் தான் தகவல்கள் வெளியான நிலையில், சலார் படமும் வெளியாவதால் இந்திய சினிமா திரையுலகில் பரபரப்பைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளது.
பதான், ஜவான் படங்களின் மூலம் இந்த ஆண்டு இரண்டு முறை ஆயிரம் கோடி வசூலைக் குவித்து ஷாருக்கான் மாஸ் மகாராஜாவாக இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் வலம் வரும் நிலையில் பிரபாஸ் அவருடன் தற்போது நேருக்கு நேர் மோத உள்ளது எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது.
மேலும் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் டிச.15ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், மும்முனைப் போட்டியில் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.