Vishal & Dhanshika Love: 15 வருட நட்பு... விஷாலுடனான காதலை உறுதி செய்த சாய் தன்ஷிகா! திருமணம் எப்போது தெரியுமா?
நடிகர் விஷால், சாய் தன்ஷிகாவை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வந்த நிலையில் தற்போது இந்த காதல் விஷயத்தை இருவரும் உறுதி செய்துள்ளனர்.

பிரபல தயாரிப்பாளர் கிருஷ்ணா ரெட்டியின் 2-ஆவது மகன் தான் விஷால். இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு நடிகர் அர்ஜுன் இயக்கிய சில திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய விஷாலுக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாகவே, நடிகராக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு ரிலீசான செல்லமே திரைப்படத்தில் ஹீரோவாக விஷால் அறிமுகமானார்.
இந்த படத்தின் வெற்றி, விஷாலுக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து நடித்த சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி, போன்ற படங்களுக்கும் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது. அதே போல் விஷால் மிக குறுகிய காலத்திலேயே அதிரடி ஆக்சன் ஹீரோவாக மாறினார். மேலும் நடிகர் சங்க செயலாளர் தயாரிப்பாளர் சங்க தலைவர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.

காதல் சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாத விஷால், நடிகை வரலட்சுமி சரத்குமாரை சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதேபோல் லட்சுமி மேனனும் - விஷாலும் காதலித்து வந்ததாக சில கிசுகிசுக்கள் வந்து ஓய்ந்தது. சில வருடங்களுக்கு முன்பு கூட அனுஷா ரெட்டி என்பவருடன் விஷாலுக்கு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் அந்த நிச்சயதார்த்தமும் திருமணம் வரை செல்லவில்லை.
தற்போது நடிகர் விஷாலுக்கு 47 வயதாகும் நிலையில், இவருடைய திருமணம் குறித்த கேள்விகளை அடிக்கடி பத்திரிக்கையாளர்கள் அவரிடமே எழுப்பி வந்தனர். அதற்க்கு விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்த பின்னர் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என கூறினார்.
சமீபத்தில் கூட தன்னுடைய திருமணம் குறித்து கேள்விக்கு பதில் அளித்த விஷால், நடிகர் சங்க கட்டடப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் சில மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். ஆகஸ்ட் 15ஆம் தேதி நடிகர் சங்க கட்டடத்தில் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிடுவேன் என கூறியிருந்தார். அதேபோல் தன்னுடைய திருமணம் ஒரு காதல் திருமணமாக இருக்கும் என விஷால் தெரிவித்தார்.

கடந்த சில மாதமாக காதல் உறவில் இருப்பதையும் விஷால் உறுதி செய்த நிலையில், விஷால் காதலிப்பது நடிகை சாய் தன்ஷிகாவை தான் என இன்று காலையிலேயே ஒரு தகவல் வெளியானது. மேலும் இன்று சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள 'யோகி டா' படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொள்ள உள்ளதால், இவர்களின் காதல் மற்றும் திருமணம் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தாமாகவே மேடையில் பேசிய நடிகை சாய் தன்ஷிகா, விஷாலை காதலித்து வருவதை உறுதி செய்துள்ளதோடு ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள தகவலையும் அறிவித்துள்ளார். 'யோகி டா' பட விழாவில் பேசிய சாய் தன்ஷிகா, "இதை பற்றி நாங்கள் பேச நினைக்கவே இல்லை... ஆனால் இன்று காலை தந்தியில் ஒரு செய்தி வெளியானது. இனிமேல் எதையும் மறைக்க எங்களுக்கு விருப்பம் இல்லை அதனால் வெளிப்படுத்த முடிவெடுத்தோம். விஷாலை எனக்கு 15 வருடமாகவே தெரியும். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அவர் எப்போதும் எல்லாருக்கும் பிரச்சனை என வந்தால் உறுதுணையாக வந்து நிற்பார். சமீப காலமாக தான் பேச துவங்கினோம். இருவருக்கும் பிடித்ததால் மியூச்சுவலாக இதனை திருமணத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தோம். விஷாலுடன் இருந்தால் கண்டிப்பாக சந்தோஷமாக இருப்பேன் என நினைக்கிறன். அவர் மிகவும் நல்ல மனிதர். என கூறியுள்ளார்.





















