Rajinikanth: ரஜினி யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல.. ஆடிட்டர் குருமூர்த்தி கருத்துக்கு எஸ்.வி.சேகர் பதிலடி..!
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். பல தேர்தல்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல என நடிகர் எஸ்.வி.சேகர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரஜினியின் அரசியல் பயணம்
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். பல தேர்தல்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த் கிட்டதட்ட தனது அரசியல் வருகையை 25 ஆண்டுகளுக்கு எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அறிவித்தார். தான் சாதி, மதம் சார்பற்ற ஆன்மீக அரசியலை கொண்டு வருவேன் என்றும் ரஜினி தெரிவித்தது பெரிய அளவில் பேசுபொருளானது.. இதனால் உற்சாகமான அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக அரசியல் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
ஆனால் 2020 ஆம் ஆண்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா பரவ தொடங்கிய பிறகு ரஜினியின் உடல் நிலை குறித்து பல தகவல்கள் வெளியாக தொடங்கியது. ஆனால் இப்ப இல்லை என்றால் எப்பவும் இல்லை என சொன்ன ரஜினி அந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி கட்சி தொடங்கப்போவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறினார். ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும், தமிழ்நாடு மக்களும் எதிர்பார்த்து ரஜினி அரசியல் குறித்த அறிவிப்புக்காக காத்திருந்த நிலையில், டிசம்பர் 29 ஆம் தேதி “அரசியல் கட்சி தொடங்கும் எண்ணமில்லை. தன்னுடைய விருப்பத்திற்காக மற்றவர்களின் நலன் பணயம் வைக்க விருப்பமில்லை” என அந்த முடிவில் இருந்து ரஜினி பின் வாங்கினார். இது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.
துக்ளக் விழாவில் வெளியான புது தகவல்
இதனிடையே துக்ளக் பத்திரிக்கையின் 54வது ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, “நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் தீவிரமாக களமிறங்க வேண்டும் என நினைத்த நிலையில், தான் முதலமைச்சர் வேட்பாளராக வரமாட்டேன் என என்னிடம் சொன்னார். அப்படி என்றால் முதலமைச்சர் யார் என கேட்டேன். அதற்கு அப்போது ஐபிஎஸ் அதிகாரியாக அண்ணாமலைன்னு ஒருத்தர் இருக்காரு என இப்போது தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை பற்றி சொன்னார்” என கூறி அதிர வைத்துள்ளார். இது அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
அப்படி நினைச்சதே பெரிய தப்பு, நம்ம பேரை அந்தாளு நாசம் பண்ணிடுவார்ங்கிறதை உணர்ந்துதான் ரஜினி அரசியலே வேண்டாம்னு முடிவு பண்ணியிருப்பாரு. எனக்குத்தெரிந்த ரஜினி யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல. சொந்தமாக முடிவெடுப்பவர். தெய்வத்தை மட்டும் நம்புவர். https://t.co/nKXzBgbcaJ pic.twitter.com/vajemKWPza
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) January 14, 2024
எஸ்.வி.சேகர் கருத்து
இந்நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ்.வி.சேகர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினியுன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “அப்படி நினைச்சதே பெரிய தப்பு, நம்ம பேரை அந்தாளு நாசம் பண்ணிடுவார்ங்கிறதை உணர்ந்துதான் ரஜினி அரசியலே வேண்டாம்னு முடிவு பண்ணியிருப்பாரு. எனக்குத்தெரிந்த ரஜினி யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல. சொந்தமாக முடிவெடுப்பவர். தெய்வத்தை மட்டும் நம்புவர்” என தெரிவித்துள்ளார்.