S.V. Ranga Rao : தென்னிந்திய சினிமாவின் கடோத்கஜன்... ஈடு இணையில்லா கலைஞன் எஸ்.வி. ரங்காராவ் 50ம் ஆண்டு நினைவு தினம் இன்று..
S.V. Ranga Rao : சினிமா துறையின் மூத்த நடிகராக பெரும்பாலும் 60 முதல் 70 வயதுடைய கதாபாத்திரத்திலேயே நடித்த எஸ்.வி. ரங்காராவ் 50ம் ஆண்டு நினைவு தினம் இன்று.
50களில் வெளிவந்த 'மாயா பஜார்' படத்தில் இடம்பெற்ற 'கல்யாண சமையல் சாதம்...' பாடலை இன்று பார்த்தாலும் கண்களை விரிவடைய செய்யும் அளவுக்கு எதிரே உள்ள உணவையெல்லாம் விழுங்கும் கடோத்கஜனாக நடித்து அசத்தியவர் எஸ்.வி. ரங்காராவ். அவரின் 50வது ஆண்டு நினைவு தினம் இன்று.
எஸ்.வி.ஆர் சிறப்பம்சம் :
சாமர்ல வெங்கட ரங்காராவ் என்ற அவரின் இயற்பெயர் பின்னாளில் எஸ்.வி.ரங்காராவ் எனச் சுருங்கியது. பெயரில் மட்டுமே சுருக்கம் ஏற்பட்டதே தவிர அவரின் புகழும் திறமையும் கற்பக விருட்சமாக விரிந்து உயர்ந்து வளர்ந்தது. ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், மந்திர புன்னகை, அலட்டல் இல்லாத உடல் மொழி, எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அதை எளிதில் வெளிப்படுத்திவிடும் கண்கள், தெலுங்கும் தமிழும் கலப்படமில்லாத மொழி உச்சரிப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்களை இயல்பாகவே கொண்டு இருந்த எஸ்.வி. ரங்காராவ் ஒரு பிறவி கலைஞன் என்றே அழைக்க வேண்டும்.
சகலகலா வல்லவன் :
நல்ல கணவர், பாசமான அண்ணன், அன்புள்ள அப்பா, கம்பீரமான தாத்தா, மரியாதைக்குரிய மாமனார், நேர்மையான போலீஸ், நல்ல மனம் படைத்த ஜமீன்தார், மிரட்டும் மந்திரவாதி, கம்பீரமான புராணக் கதாபாத்திரம், கொடூர வில்லன் இப்படி எந்த கதாபாத்திரமானாலும் அதை சிறப்பாக செய்ய கூடியவர். செயற்கை கலக்காத அவரின் இயல்பான நடிப்பு பல இயக்குனர்களை அவரை தேடி வர வைத்து இன்றளவும் அவரின் பெருமை போற்றப்படுவதற்கு அதுவே முழு முதல் காரணம்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் அவரின் தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பில் புலமை பெற்று விளங்கினார். நடிகராக மட்டுமன்றி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் பரிணாமம் எடுத்துள்ளார்.
இளமை காலம் :
சென்னை இந்துக் கல்லூரியில் பள்ளி படிப்பை முடித்த அவர் தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் அறிவியலில் இளங்கலைப் பட்டம், தீயணைப்பு துறையில் வேலை என தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்து வந்தாலும் நடிப்பின் மீது அவருக்கு இருந்த காதலால் நாடக துறையில் சேர்ந்து நடிப்பு, வசன உச்சரிப்பு, நடனம் என சினிமா துறைக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கற்றுத் தேர்ந்தார்.
திரைத்துறை வாய்ப்பு :
திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்த ஆரம்ப காலகட்டத்திலேயே ஏராளமான ஏமாற்றங்களையும் தோல்விகளையும் சந்தித்தாலும் துவண்டு போகாமல் தொடர்ந்து முயற்சி செய்தார். அப்படி அவருக்கு நல்ல ஒரு திருப்புமுனையாக அமைந்தது தான் 'பாதாள பைரவி' திரைப்படம். அப்படம் 200 நாட்களும் மேல் திரையரங்கில் ஓடிய வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியது. ஆனால் திரைப்பயணத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை மூத்த வேடங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்புகள் வந்தன. அதனாலேயே அவர் சினிமா துறையின் மூத்த நடிகராக விளங்கினார். பெரும்பாலும் எஸ்.வி. ரங்காராவ் 60 முதல் 70 வயதுடைய கதாபாத்திரத்திலேயே நடித்தார் ஆனால் உண்மையில் அவர் இறக்கும் போது அவருக்கு வயது 56 தான். 1974ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இன்று அவரின் 50வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்திய அரசு வழங்கிய கௌரவம் :
1974ல் வெளியான 'சிவகாமியின் செல்வன்' தான் அவர் கடைசியாக நடித்த தமிழ் திரைப்படம். அவரின் அசாதாரணமான நடிப்பை கவுரவிக்கும் வகையில் ராஷ்டிரபதி விருதுகள், நந்தி விருதுகள், பிலிம்பேர் விருதுகள், தேசிய விருது என பல விருதுகள் வழிபட்டாலும் அவரின் நடிப்பை பாராட்டிய இந்திய அரசாங்கம் 2013 இல் எஸ்.வி. ரங்காராவ் படத்துடன் கூடிய அஞ்சல் முத்திரையை வெளியிட்டது.