HBD Girish Karnad : நடிகர் மட்டுமல்ல.. அதுக்கும் மேல.. கிரிஷ் கர்னாட் பிறந்தநாள் இன்று
பல்வேறு தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் அறிந்த மறைந்த நடிகர் கிரிஷ் கர்னாட் பிறந்தநாள் இன்று.
கிரிஷ் கர்னாட்
காதலன் படத்தில் நடிகை நக்மாவின் தந்தையாக நடித்து பரவலான கவனமீர்த்தவர் கிரிஷ் கர்னாட். இதற்கு முன்னும் பின்னும் ரட்சகன் , ஹேராம் , குணா , நான் அடிமை இல்லை என பல படங்களில் நடித்துள்ளார். வெகுஜன மக்களிடம் பரவலாக ஒரு நடிகராக அறியப்பட்ட கிரிஷ் கர்னாட் பல்வேறு அரசியல் மற்றும் கலைச் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றிய ஒரு படைப்பாளி.
1938 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்த கிரிஷ் கர்னாட் தனது பள்ளிப் படிப்பை மராத்தி மொழியில் முடித்தார். இதனைத் தொடர்ந்து கர்னாடக பல்கலைகழகத்தில் கணிதம் மற்றும் புள்ளியியலில் இளங்கலை பட்டப் படிப்பு முடித்தார். லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் தத்துவம் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
கலை இலக்கியம் மீது ஆர்வம் கொண்ட கிரீஷ் கர்னாட் தனது 23-வது வயதில் யயாதி என்கிற தனது முதல் நாடகத்தை எழுதினார். மகாபாரதத்தின் துணைக் கதாபாத்திரங்களை வைத்து அவர் எழுதிய இந்த நாடகம் நாடகக் கலையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 1960 களில் நாடகங்கள் என்பவை பெரும்பாலும் புராணக் கதைகளை மையமாக வைத்தே எழுதப்பட்டன. ஆனால் நாடக கலையில் சமகால அரசியலையும் சமூக நீதி தனிமனித சுதந்திரம் உள்ளிட்டக் கருத்துக்களை அடிப்படையாக வைத்து தனது நாடகங்களை எழுதியவர் கிரிஷ் கர்னாட். அவர் எழுதிய துக்ளக் நாடகம் இன்று வரை காலம் கடந்து இளம் தலைமுறையினரால் கொண்டாடப்படுகிறது.
நாடகத் துறைத் தவிர்த்து வெகுஜன சினிமா இயக்கத்திற்கு மாற்றாக அன்று எதார்த்தவாத படங்களின் இயக்கத்திற்கும் பங்காற்றியிருக்கிறார் கிரிஷ் கர்னாட். நாவல்களை படமாக்குவது அதில், தானே நடிப்பது என பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர். கன்னடம் , தமிழ் , மலையாளம் இந்தி என இந்தியா முழுவதும் திரைத்துறை மற்றும் இலக்கியத் துறையில் பெரும் அங்கீகாரம் பெற்றவர் கிரிஷ் கர்னாட்
வெகுஜனப் பரப்பில் ஒரு நடிகராக அறியப்படும் கிரிஷ் கர்னாட் தனது கலைச் செயல்பாடுகளுக்காக இன்னும் பாராட்டப்பட வேண்டியவர் . அவரது பிறந்தநாள் இன்று