Vivek: சிரிக்க வைக்கும் சிந்தனைவாதி... சமூக சீர்திருத்தவாதி.. “சின்ன கலைவாணர்” விவேக் பிறந்தநாள் இன்று..!
Vivek : நகைச்சுவை நடிகராக கவலை மறந்து சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் நமது சிந்தனையை தூண்டும் வகையில் பல சமுதாய பிரச்சினைகளுக்கும் எளிதான தீர்வு கொடுத்த விவேக் பிறந்தநாள் இன்று...!
தென்னிந்திய சினிமாவின் பொக்கிஷம், எளிதில் கலந்து விட முடியாத ஒரு கலைஞன், நகைச்சுவை மூலம் நாசுக்காக சிந்திக்கவும் வைத்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக் 62வது பிறந்தநாள் இன்று.
இந்த உலகை விட்டு அவர் மறைந்தாலும் அன்றும் இன்றும் என்றும் நெஞ்சங்களில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர். ஒரு இயக்குநராக வேண்டும் என்ற கனவோடும் லட்சியத்தோடும் தான் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தவர். கே. பாலச்சந்திரன் 'மனத்தில் உறுதி வேண்டும்' படம் மூலம் திரையுலகில் கால் பதித்தவர். அதை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் பல வசனங்கள் இன்றும் நாம் அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம் நினைவில் கொள்கிறோம்.
'சொல்லி அடிப்பேன்' என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக விவேக் அறிமுகமான படம் சில காரணங்கள் வெளிவராமலே போனது. அதனை தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த விவேக் 2014ம் ஆண்டு வெளியான 'நான் தான் பாலா' திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
நகைச்சுவை நடிகராக கவலை மறந்து சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் நமது சிந்தனையை தூண்டும் வகையில் பல சமுதாய பிரச்சினைகளுக்கும் எளிதான தீர்வு கொடுத்தவர். மூட நம்பிக்கை, ஊழல், மக்கள் தொகை, லஞ்சம் இப்படி பலதரப்பட்ட விஷயங்கள் குறித்தும் எளிதாக மக்களை சென்றடையும் வகையில் நகைச்சுவை கலந்து கருத்துக்களை கொண்டு சேர்த்தவர். ஏராளமான பிலிம் பேர் விருது, தமிழ்நாடு மாநில விருதுகள், பத்மஸ்ரீ விருது என பல விருதைகளை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சிறு வயது முதலே பரத நாட்டியம் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட விவேக் முறையாக அதை கற்று தேர்ந்து பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்றவர். அப்துல் கலாம் ஐயாவின் கொள்கைகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். அவரின் கொள்கையின் படி ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு சுமார் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்தவர். பிளாஸ்டிக் உபயோகத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்த விவேக் அதற்காக ஒரு கமிட்டியையும் துவங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.
மனித நேயம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருந்த விவேக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். நாளைய இந்தியாவின் வளர்ச்சி இன்றைய குழந்தைகளின் கையில் தான் உள்ளது எனவே அவர்களுக்கு கட்டாய கல்வி வேண்டும் என்பது குறித்து அவரின் தெளிவான சிந்தனையை பல பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று எடுத்துரைத்துள்ளார்.
சமூக அக்கறை கொண்டவராக இருந்த நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு மீடியா மூலம் பேசி இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் உலகம் இருக்கும் வரையில் தலைமுறைகள் கடந்தும் விவேக் கொண்டாடப்படுவார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.