Rashmika Mandanna: "10 ஆண்டுகளில் அபார வளர்ச்சி" பிரதமர் மோடிக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா திடீர் பாராட்டு!
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து ஆச்சரியமாக உள்ளது என்று நடிகை ராஷ்மிகா மந்தனா பாராட்டு தெரிவித்துள்ளார்.
மோடி அரசில் இந்தியா வேகமாக வளர்ந்துள்ளதாக நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா:
தெலுங்கில் கிரிக் பார்ட்டி படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து தமிழில் சுல்தான் படம் மூலம் எண்ட்ரீ கொடுத்த அவர், வாரிசு படத்தில் நடித்துள்ளார். மேலும் புஷ்பா, அனிமல், சீதாராமன், குட் பை, மிஷன் மஜ்னு என பான் இந்திய அளவில் தவிர்க்க முடியாத நடிகையாக ராஷ்மிகா மந்தனா மாறியுள்ளார். இதனிடையே ரசிகர்களால் “நேஷனல் கிரஷ்” என அழைக்கப்படுகிறார்.
இதனிடையே இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 20 ஆம் தேதி நடக்கவுள்ளது. ஜூன் 1 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஒரு சில மாநிலங்களை தவிர்த்து மற்ற இடங்களில் பரப்புரை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்களும் பல அரசியல் கட்சியினருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
10 ஆண்டுகளில் அபார வளர்ச்சி:
அந்த வகையில் நடிகை ராஷ்மிகா பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர், “மும்பை மற்றும் நவிமும்பை இடையே இரு நகரங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமாக அடல் சேது கடல் வழிபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 மணி நேர பயணம் 20 நிமிடங்களில் முடியும் என்ற கூற்றை சாத்தியமாக்கலாம் என யாராவது நினைத்து பார்த்தார்களா? இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக நம் பயணம் எளிதாக நடக்கிறது. இந்த விஷயம் எனக்கு பெருமை சேர்த்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு கண்ட வளர்ச்சியானது அற்புதமாக உள்ளது.
எனக்கு தெரிந்தவரை இந்தியாவை யாராலும் தடுக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளின் வளர்ச்சியை பார்த்து ஆச்சரியமாக உள்ளது. இந்தியா தான் புத்திசாலியான நாடு என சொல்ல நினைக்கிறேன். இளைஞர்கள் பொறுப்புடன் செயல்படுகிறார்கள். இந்தியா மிக வேகமாக வளர்கிறது. மக்கள் மிகவும் பொறுப்புடன் இருக்கிறார்கள். அதனால் நாடு சரியான பாதையில் செல்கிறது” என ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற ஒரு பக்கம் ஆதரவும், மறுபக்கம் எதிர் கருத்துகளும் கிளம்பியுள்ளது.