Animal Second Single: ராஷ்மிகாவை அழவைத்த ரன்பீர்.. ‘அனிமல்’ திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு!
ரன்பீர் கபூர் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி இருக்கும் அனிமல் திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகி உள்ளது.
அனிமல்
ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள திரைப்படம் அனிமல். அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அனிமல் படத்தின் அறிவிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானதில் இருந்து இந்தப் படத்துகாக ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருந்து வருகிறார்கள்.
ரன்பீர் கபூரின் புதிய அவதாரம்
பர்ஃபி, ஏ ஜவானி ஹேய் தீவானி, ராக்ஸ்டார், தமாஷா போன்ற சூப்பர்ஹிட் பாலிவுட் திரைப்படங்களில் நடித்த ரன்பீர் கபூரை நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஒரு புதிய கதாபாத்திரத்தில் பார்க்க ஆவலாக இருந்து வரும் நிலையில், அனிமல் படத்தில் அவரது லுக் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்னதாக இந்தப் படத்தின் ஒரு சிறிய முன்னோட்ட வீடியோ வெளியாகியது. உணர்ச்சிகரமான ஒரு ஆக்ஷன் திரைப்படமாக அனிமல் படம் இருக்கும் என்கிற நம்பிக்கையை இந்த வீடியோ கொடுத்தது.
அனிமல் டீசர்
தொடர்ந்து, அனிமல் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த டீசரில் ரன்பீர் கபூர் எந்த மாதிரியான ஒரு சூழலில் வளர்கிறார், அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையிலான உறவு எவ்வளவு சிக்கலானதாக இருக்கிறது, அவருக்கும் அவரது மனைவியான கீதாஞ்சலிக்கு இடையிலான உறவு எப்படி மோதிக் கொள்கிறது, தன்னுடைய தந்தையின் வளர்ப்பினால் தான் எப்படி இவ்வளவு பெரிய கேங்க்ஸ்டராக மாறுகிறார் எனக் கதை பெரிதாகிறது.
முதல் பாடல்
இப்படியான நிலையில் சமீபத்தில் அனிமல் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்தப்பாடல் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம், இந்தப் பாடல்களில் இடம்பெற்றிருந்த முத்தக் காட்சிகள். நின்றால், நடந்தால், பார்த்தால் என எல்லாவற்றுக்கும் முத்தம் கொடுத்துக் கொள்ளும் இணைபிரியா காதலர்களாக ரன்பீர் மற்றும் ராஷ்மிகா நடித்திருந்தனர்.
இரண்டாவது பாடல்
தற்போது வெளியாகி உள்ள இரண்டாம் பாடல் முதல் பாடலுக்கு நேரெதிரான எமோஷனில் அமைந்துள்ளது. முதல் பாடலில் சந்தோஷம் என்றால் இரண்டாம் பாடல் முழுவதும் அழுகையும் கண்ணீரும் நிறைந்துள்ளது. இரண்டு பாடல்களும் தனியாக இல்லாமல் படத்தின் கதையோடு சேர்ந்து இருப்பதால் அனிமல் திரைப்படத்தின் கதை என்ன மாதிரியான உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
மேலும் இந்தப் பாடலில் கடைசியில் ரன்பீர் கபூர் “நான் இந்த முறை திரும்பி வருவனா தெரில.. அப்படி வரலனா நீ வேற கல்யாணம் பண்ணிக்காத” எனப் பேசும் வசனமும் கவனமீர்த்துள்ளது.