7 Years Of Joker: ”கொடுக்கலன்னா எடுத்துக்கணும் அதான் பவர்..” : கோமாளியின் மொழியில் அதிகாரத்தை விமர்சித்த ஜோக்கர்!
ராஜூ முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
‘குக்கூ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கிய திரைப்படம் ‘ஜோக்கர்’. குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், பவா செல்லத்துரை உள்ளிட்டோர் நடித்த இப்படத்துக்கு, ஷான் ரோல்டன் மனம் உருகும் பாடல்களைக் கொடுத்திருந்தார்.
அரசியல் பேசாத தமிழ் படங்கள்
தமிழ் சினிமாவில் அரசியல் பேசும் திரைப்படங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றன. ஒரு படம் அரசியல் ரீதியாக சரியாகவும், அதே நேரத்தில் கலைத்தன்மையுடனும் சேர்ந்து வரவேண்டும் என்கிற நிபந்தனைகள் இந்த மாதிரியான படங்களுக்கு இருக்கின்றன.
இந்த சிக்கலை எதிர்கொள்ள முடியாமல் தான் அரசியல் பேசும் படங்களை இயக்க நினைப்பவர்கள் பெரும்பாலும் காமெடி கலந்து அவற்றை பேச முயற்சிக்கிறார்கள். ஆர்.கே நகர், எல்.கே.ஜி மாதிரியான படங்களை இந்த வரிசையில் சேர்க்கலாம். ஆனால் நகைச்சுவை உணர்வுடன் இருக்கும் இந்தப் படங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் ஒரு பிரச்னையை நீர்த்துப் போகச் செய்கின்றனவா என்கிற கேள்வியும் இருந்து வருகிறது.
கென் லோச் என்கிற அரசியல் படைப்பாளி
ஒரு நல்ல அரசியல் படத்தை நல்ல கலைநுட்பத்துடன் எப்படி எடுக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள பிரித்தானிய இயக்குநர் ‘கென் லோச்’ஐ உதாரணமாக திரைப்பட ஆர்வலர்கள் முன்வைப்பார்கள். கென் லோச்சின் படங்களில் இருக்கும் மிகப்பெரிய பலம் அவரது படங்களில் இருக்கும் உணர்ச்சிகள் தான்.
எவ்வளவு பெரிய அரசியலைப் பேசினாலும் அதனை பிரச்சார தொனியில் இல்லாமல் உலகத்தில் எந்த ஒரு சாமானிய மனிதரும் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் ஒரு அடிப்படையான உணர்வின் மேல் அந்தப் படத்தைக் கட்டமைத்திருப்பார்.
அவரது ஐ டானியல் ப்ளேக், சாரி வி மிஸ்டு யூ உள்ளிட்ட படங்களைப் பார்த்தால், அதில் இருக்கும் மனிதர்கள் ஏதோ ஒரு அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்களாக இல்லாமல் பார்வையாளர்களுடன் உரையாடி, அவர்களின் இடத்தில் இருந்து கதையை நகர்த்துவதை நம்மால் உணர முடியும்.
தமிழில் இந்த மாதிரியான படங்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. ராஜூ முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படம் கென் லோச்சின் படங்களில் இருக்கும் செரிவான திரைமொழியைக் கொண்டிருக்கவில்லை என்கிற போதிலும் அவரது கதைகளில் இருக்கும் உணர்வெழுச்சிகளுக்கு நிகரான தருணங்களைக் கொண்டிருக்கிறது.
மன்னர் மன்னன் என்கிற ஜோக்கர்
இந்திய நாட்டின் ஜனாதிபதியென்று தன்னை நினைத்துக்கொள்கிறார் கதைநாயகனான ‘மன்னர் மன்னன்’. தனது ஊரில் நடக்கும் சின்ன சின்ன அரசியல் முறைகேடுகளை தட்டிக்கேட்கும் வகையில் உடனே அவற்றின் மேல் வழக்குப்பதிவு செய்து அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சின்ன சின்ன குடைச்சலை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.
படத்தின் தொடக்கத்தில் இருந்தே யதார்த்தத்தில் இருந்து விலகியே இருக்கும் இந்தக் கதாபாத்திரம் மனம் பிறழ்ந்தவரா இல்லை அப்படி நடிக்கிறாரா என்கிற குழப்பம் பார்வையாளர்களுக்கு இருந்து வருகிறது. இந்தக் குழப்பம் பார்வையாளர்களுக்கு வரவேண்டும் என்பதே இயக்குநரின் நோக்கமாகவும் இருப்பதாக தெரிகிறது.
படத்தின் இரண்டாம் பாதியில் தான் நமக்கு உண்மை தெரியவருகிறது. கழிப்பறை உள்ள ஒரு வீட்டின் சொந்தக்காரரைதான், தான் திருமணம் செய்துகொள்ள்வேன் என்று உறுதியோடு இருக்கும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார் மன்னர் மன்னன்.
அரசின் கழிப்பறை கட்டித் தரும் திட்டத்தை அதிகாரத்தின் படிநிலையில் உள்ள ஒவ்வொருவரும் தனது சொந்த சுயலாபத்திற்காக பயண்படுத்தியதன் விளைவாக தனது மனைவியை கிட்டதட்ட இழந்துவிடுகிறார் மன்னர் மன்னன். இந்த அதிர்ச்சியே அவரை மிகை எதார்த்த சுபாவமுள்ள ஒரு மனிதனாய் மாற்றுகிறது.
எந்த வித அதிகாரமும் இல்லாத ஒர் சாமானியன், அதிகாரத்தை எதிர்த்து என்ன செய்துவிட முடியும்? நியாயமாக நீதி கிடைக்கும் வரை போராடலாம். புரட்சியாளனாக மாறலாம். படத்தில் பவா செல்லத்துரையின் கதாபாத்திரம் அடிக்கடி சொல்லும் வசனம் “ குடுக்கலனா எடுத்துக்கனும் அதான் பவரு“. அதைதான் செய்கிறார் நமது கதாநாயகன். தன்னை ஜனாதிபதியாக பாவித்துக் கொண்டு தன்னைச் சுற்றி நடக்கும் தவறுகளை கேள்வி கேட்கிறார்.
எதிர்கொண்ட விமர்சனங்கள்
மன்னர் மன்னனாக நடித்த குரு சோமசுந்தரத்தின் நடிப்பு ஒரே நேரத்தில் நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் உணர்ச்சிகரமாகவும் அமைந்து படத்துக்கு வலு சேர்த்திருக்கும். ஜோக்கர் திரைப்படத்தின் மேல் வைக்கப்பட்ட மிகப்பெரிய விமர்சனம் என்னவென்றால், படம் அதிகம் பிரச்சாரமாக இருக்கிறது என்பதே.
நாடகங்களில் கோமாளி என்கிற ஒரு கதாபாத்திரம் அடிக்கடி வந்து போவதை நாம் பார்த்திருப்போம் . தனக்கு கொடுக்கப்பட்ட சின்ன நேரத்திற்குள் பெரிய பெரிய அரசியலைப் பேசிவிட்டுப் போகும் இந்தக் கோமாளி. அதே கோமாளியை வைத்து ஒரு முழு நீளப்படத்தை ராஜூ முருகன் இயக்கியிருக்கிறார்.
ஒரு கதாநாயகன் என்று பார்க்காமல் ஒரு கோமாளியின் கண்களில் இருந்து சமூகத்தின் மேல் தனது கேள்விகளை எழுப்பியிருக்கிறார் ராஜூ முருகன். கோமாளியின் மொழியே பிரச்சாரம் தான், பிரச்சாரமான ஒரு படத்தை எடுக்கவே இயக்குநர் முயற்சித்திருக்கலாம் இல்லையா! ஆனால் அதில் எந்த நல்ல கலை படைப்பிலும் காணப்படும் உணர்வுகளும் இல்லாமல் இல்லை.