Radhika Apte: நடிகைகளை மிக மோசமாக நடத்தும் தெலுங்கு சினிமாக்காரர்கள்: வைரலாகும் ராதிகா ஆப்தேவின் பேச்சு!
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தெலுங்கு சினிமாத் துறையயை கடுமையாக சாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகைகளை மிக மோசமாக நடத்துவதாக டோலிவுட் சினிமாத் துறையை கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.
ராதிகா ஆப்தே
‘கபாலி’ படத்தின் மூலமாக கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. அந்தாதுன், லஸ்ட் ஸ்டோரீஸ், சோக்ட் முதலிய பாலிவுட் படங்களில் நடித்து பரவலாக அறியப்பட்டார். தமிழ், தெலுங்கு, இந்தி , மராத்தி, பெங்காலி என பல்வேறு மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். சினிமாத் துறையில் பெண்களுக்காக தொடர்ச்சியாக குரலெழுப்பி வருபவர் ராதிகா ஆப்தே. தனது உடலை காரணமாக வைத்து, தான் நடிக்க வேண்டிய படங்களில் வாய்ப்புகளை இழந்ததாக அவர் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
"வேற நடிகைக்கு தன்னை விட பெரிய உதடுகள் மற்றும் பெரிய மார்பகங்கள் இருந்ததால் நான் சமீபத்தில் ஒரு படத்தில் இருந்து நிராகரிக்கப்பட்டேன். அவர் என்னை விட அதிக கவர்ச்சியாக உள்ளார். அதிக விலைக்கு செல்வார் என்றும் காரணம் தெரிவித்தனர். மேலும், நான் நிராகரிக்கப்பட்ட அந்தப் படம் ஒரு நல்ல படம். நான் மதிக்கும் நபர்களால் தயாரிக்கப்பட்டது. நீங்கள் சில நபர்களைப் பார்த்து, இவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுப்படமாட்டார்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அவர்களும் அத்தகைய மனநிலையுடன் இருக்கின்றனர். பெண்கள் எந்த அளவுக்கு இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு மனிதர்களிடம் மாற்றங்களும் நிகழ்கிறது" என்று அவர் இது தொடர்பாக கூறியிருந்தார்.
தெலுங்கு சினிமா மீது விமர்சனம்
Radhika Apte blasting Tollywood 😐
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 16, 2024
pic.twitter.com/Flhch95JJM
வெவ்வேறு மொழிகளில் படங்கள் நடித்து வந்தாலும் ராதிகா ஆப்தே தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்து பத்து ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு சில குறிப்பிட்ட காரணங்களும் இருக்கின்றன. கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘ரத்த சரித்திரம்’ படத்தின் மூலம் ராதிகா ஆப்தே முதல்முறையாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு வெளியான லெஜண்ட் படத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவர் தெலுங்கு படத்தில் நடிக்கவில்லை. இது குறித்து அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் அவர் “ நான் பார்த்ததிலேயே தெலுங்கு சினிமாத் துறை தேசப்பற்றும் ஆணாதிக்கமும் நிறைந்த ஒரு துறை. அவர்களின் படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் ஆண்களை கடவுள் போல் வழிபடுபவர்களாக இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் ஒரு படத்தின் செட்டில் அவர்கள் பெண் நடிகர்களை நடத்தும் விதம் இன்னும் மோசமானது. ஏதோ மூன்றாம் நபரை நடத்துவது போல் அவர்கள் உங்களை நடத்துவார்கள். உங்களது தேவை என்ன என்பதைகூட அவர்கள் கேட்கமாட்டார்கள். இந்த மாதிரியான நடத்தைகளுடன் நான் கடுமையாக போராடியிருக்கிறேன். ஒருவழியாக நான் இதற்கு ஒரு முடிவு செய்துவிட்டு என் வழியை நான் தேர்வு செய்து விலகிவிட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.