Psycho | அவார்டுகளை குவிக்குமா உதயநிதி திரைப்படம்? ஒன்பது பிரிவுகளில் பரிந்துரை!
மிஷ்கின், இளையராஜா உட்பட ஒன்பது விருதுகளுக்கு உதயநிதியின் சைக்கோ திரைப்படம் சைமா 2020 விருது வழங்கும் விழாவுக்கு தேர்வாகியுள்ளது.
டபுள் மீனீங் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கி கடந்த வருடம் வெளிவந்த உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படம் ‘சைக்கோ’. இப்படம் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான சைமா 2020 (SIIMA 2020) திரை விழாவில், 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சினிமா துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், காமெடியன்கள், இசையமைப்பாளார்கள், துணை கதாபாத்திரங்கள் என அனைவருக்கும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டுக்கான சிறந்த படங்கள்,நடிகர் நடிகைகளின் நாமினேசன் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. சைமாவின் இணையதளத்தில் சென்று ரசிகர்களும், பொதுமக்களும் தங்களுக்கு விருப்பமான படங்களுக்கு வாக்களிக்கலாம். அதிகமான வாக்குகளை பெறும் படங்கள் மற்றும் நடிகர்களுக்கு விருது வழங்கப்படும்.
சிறந்த இயக்கத்திற்கான பட்டியலில் இயக்குனர் மிஷ்கினும், முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த நடிகர் எனும் பிரிவில் உதயநிதி ஸ்டாலினும்,
சிறந்த இசையமைப்பாளர் பட்டியலில் இளையராஜாவும், சிறந்த பாடலாசிரியர் பிரிவில் 'உன்ன நினைச்சு' பாடலை எழுதிய கபிலனும், சிறந்த பின்னணி பாடகருக்கான ஆண் பிரிவில் 'உன்ன நினைச்சு' பாடலை பாடிய சித் ஸ்ரீராமும், சிறந்த அறிமுக தயாரிப்பாளராக Double Meaning Productions அருள்மொழி மானிக்கமும், சிறந்த ஒளிப்பதிவாளர் பிரிவில் தன்வீர் மிர்ரும், ராஜ்குமார் பிச்சுமணி சிறந்த வில்லன் மற்றும் சிறந்த அறிமுக நடிகர் ஆகிய 9 பிரிவுகளின் கீழ் சைக்கோ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மிஷ்கின் தற்போது அவர் இயக்கிய பிசாசு திரைப்படத்தின் சீக்வலான பிசாசு பாகம் இரண்டினை ஆண்ட்ரியாவை வைத்து இயக்கிக்கொண்டிருக்கிறார். அந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். உதயநிதி எம்.எல்.ஏ ஆகி பிசியாக இயங்கிக் கொண்டிருந்தாலும், கை நிறைய திரைப்படங்களும் வைத்துள்ளார். தற்போது அவர், தடையற தாக்க, குற்றம் 23 திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA 2020) 9 வது பதிப்பு செப்டம்பர் 18 & 19 தேதிகளில் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.