Captain Miller : தனுஷின் தீவிரமான ரசிகை நான்.. அவரிடம் ஒரு தனித்தன்மை இருக்கு.. புகழ்ந்து தள்ளிய பிரியங்கா மோகன்
Captain Miller : பீரியட் படம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் நானும் நடிக்கிறேன் என்பது கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது - பிரியங்கா மோகன்
ராக்கி , சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். தற்போது தனுஷ் நடித்துள்ள 50வது படமான 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தை அவர்தான் இயக்கியுள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் , சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் இன்று மாலை முதல் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தி வருகிறார்கள்.
அந்த வகையில் கேப்டன் மில்லர் படத்தின் கதாநாயகி நடிகை பிரியங்கா மோகன் மேடையில் பேசுகையில் "இப்படம் என்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு திரைப்படம். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கதையை என்னிடம் சொன்னதில் இருந்தே என்னுடைய எதிர்பார்ப்பு பல மடங்காக உயர்ந்துவிட்டது. பீரியட் படம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் நானும் நடிக்கிறேன் என்பது கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. கலை இயக்குநர்கள் முதல் உடை, அலங்காரம் என ஒவ்வொரு துறையை சேர்ந்தவர்களும் இப்படத்திற்காக பெரிய அளவில் அர்ப்பணித்துள்ளனர். அதிலும் குறிப்பாக படத்தில் இடம்பெறும் கோயில் ஒரு செட் என்பதை நம்பவே முடியாத அளவிற்கு தத்ரூபமாக இருந்தது. அதை வடிவமைத்த கலை இயக்குநர் தா. ராமலிங்கதிற்கு என்னுடைய பாராட்டுக்கள்.
படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், சிவராஜ் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நடிகர் தனுஷ் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவரின் தீவிரமான ரசிகை நான். அவருடன் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்து நடித்ததில் மிகுந்த சந்தோஷம். அதை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்தவே முடியாது. இந்த திரைப்படத்திற்காக கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக தாடி மீசையுடனே காணப்பட்டார். அது படத்தின் மீது அவருக்கு இருக்கும் ஈடுபாட்டை காட்டுகிறது. இப்படி ஒரு நடிகர் கிடைப்பது மிகவும் கடினம். ரசிகர்கள் அனைவருக்கும் ஜனவரி 12ம் தேதி மிகப்பெரிய ட்ரீட் காத்திருக்கிறது. அவசியம் அனைவரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும்.
ஒரு நடிகராக தனுஷை எந்த அளவுக்கு பிடிக்குமோ அதைவிட அவரின் குரலுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. இளையராஜாவின் குரல்போல தனுஷ் குரலில் ஒரு வித தனித்துவம் இருக்கும். அப்படி அவர் குரலில் பாடிய பாடல்களில் என்னுடைய ஆல் டைம் ஃபேவரட் பாடல் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்ற 'மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே... பாடல்" என பேசி இருந்தார் நடிகை பிரியங்கா மோகன்.