Year Ender 2022: சிவ நாராயணமூர்த்தி முதல் லதா மங்கேஷ்கர் வரை; 2022 ல்- மரணத்தை தழுவிய திரை பிரபலங்களின் பட்டியல்!
கடந்த 2022 ஆம் ஆண்டு திரையுலகை விட்டு பிரிந்து பிரபலங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
1. பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படத் துறையில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பிரதாப் போத்தன் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர். இவர் கடந்த ஜூலை-15 அன்று காலமானார். அவருக்கு வயது 70. சென்னையில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் பிரதாப் போத்தன் இறந்து கிடந்ததாக தகவல்.
2. பூந்தோட்டம் எனும் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்த சிவ நாராயணமூர்த்தி அதன் பின்னர் 200 க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். விவேக் மற்றும் வடிவேலு காமெடிகளில் மிகமுக்கிய துணை நடிகராக நடித்து வந்த நடிகர் , இவர் உடல்நலக் குறைவு காரணமாக டிசெம்பர்-8 அன்று காலமானார். இவருக்கு வயது 67.
3.மர்மதேசம் என்ற பிரபல தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான தமிழ் நடிகர் லோகேஷ் ராஜேந்திரன். தற்கொலை செய்து கொண்ட அவர் கடந்த அக்டோபர்-5 அன்று காலமானார். அவருக்கு வயது 34.
4. சலீம் அகமது கவுஸ் ஒரு பிரபலமான இந்திய திரைப்பட தயாரிப்பாளர், மற்றும் நாடக இயக்குனர் மற்றும் ஒரு தற்காப்பு கலைஞரும் ஆவார். சலீம் கவுஸ் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். பல ஹாலிவுட் படங்களிலும் அவர் ஒரு பகுதியாக இருந்துள்ளார். சமீபத்தில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல்-28 அன்று மும்பையில் இறந்தார். கரோனரி தமனி நோயால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சலீம் அகமது கவுஸ் காலமானார்.
5. கிருஷ்ணகுமார் குன்னத் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும், டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். இதனால் இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக நடிகர் விஜய் நடித்த கில்லி படத்தில் அப்படிப்போடு பாடலில் இருந்து, நினைத்து நினைத்து பார்த்தேன், உயிரின் உயிரே என 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கலைஞர்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றார்.
மே-29 அன்று கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மன்சா அரங்கில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்று முடித்தபின், தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பினார், அப்போது உடல்நலம் குன்றி உயிர் இழந்தார்.
6. இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுவர் லதா மங்கேஷ்கர். இவர் 1971 இல் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார், நிமோனியாவிற்கான அறிகுறிகள் அதிகமாக இருந்ததால் அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
பிப்ரவரி-6 அன்று காலமானார், இவருக்கு வயது 92.