இறுதி ஊர்வலத்தில் கூட அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பிரதாப் போத்தன்! காரணம் என்ன?
சென்னையில் உள்ள வேலங்காடு மின்மயானத்தில் எந்த ஒரு மத சடங்குகளும் இன்றி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன், கடந்த ஜூலை 15ஆம் தேதி, சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்பட மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என் பன்முகம் கொண்ட பிரதாப் சினிமாத்துறையில் தனக்கு என தனி அடையாளம் படைத்தவர் ஆவார்.
69 வயதான பிரதாப் போத்தன் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது அடுக்குமாடியில் குடியிருப்பில் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களாகவே பிரதாப் போத்தன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், ஜூலை 14ஆம் தேதி இரவு பேஸ்புக் பக்கத்தில் வாழ்க்கை குறித்து விரக்தியான ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள வேலங்காடு மின்மயானத்தில் எந்த ஒரு மத சடங்குகளும் இன்றி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என பிரதாப் இறப்பதற்கு முன்பு கேட்டு கொண்டதாக அவரின் உறவினர் அனில் தாமஸ் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் கமல், சத்யராஜ், இயக்குநர்கள் மணி ரத்னம், வெற்றிமாறன், ராஜீவ் மேனன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தினர்.
கேரள அரசின் சார்பாகவும் பிரதிநிதி ஒருவர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த பிரதாப் போத்தன் 1978 ஆம் ஆண்டு இயக்குனர் பரதனின் ஆரவம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் 1979 ஆம் ஆண்டு அழியாத கோலங்கள் படத்தில் அறிமுகமான அவர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் 10க்கும் மேற்பட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கியும் உள்ளார்.
2 முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, ஒருமுறை சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். தமிழில் கடைசியாக கமலி ஃப்ரம் நடுக்காவேரி ஆகிய படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து மலையாளத்தில் மோகன்லால் படமான 'பரோஸ்: கார்டியன் ஆஃப் டி'காமா'ஸ் ட்ரெஷரிலும் பிரதாப் போத்தன் நடித்திருந்தார். இந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்