Crime: ”தந்தை சொன்ன அட்வைஸ்” துண்டுகளாக வெட்டி பார்சல் செய்த 21 வயது மகன் - மகள் கண்முன்னே கொடூரம்
Lucknow Blue Drum Horror: படிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தந்தையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த 21 வயது மகனை லக்னோ போலீசார் கைது செய்துள்ளனர்.

Lucknow Blue Drum Horror: சகோதரியின் கண் முன்பே மகனால் தந்தை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையை கொடூரமாக கொன்ற மகன்
தந்தையை சுட்டுக் கொன்று அவரது உடலை பல துண்டுகளாக வெட்டிஅப்புறப்படுத்தியதாக, 21 வயதே ஆன பி.காம் மாணவனை லக்னோ போலீசார் கைது செய்துள்ளனர். படிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இந்த கொடூர கொலை நிகழ்த்தப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 49 வயதான மன்வேந்திர சிங் என்பவர் காணாமல் போனதாக கிடைத்த புகாரில், அஷியானா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போதும் நீல நிற ட்ரம் ஒன்றில் உடல் பாகங்கள் இருந்ததை கண்டறிந்த பிறகு, இந்த கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
படிப்பு விவகாரத்தில் கருத்து வேறுபாடு
காவல்துறை விசாரணை தகவல்களின்படி, குற்றம்சாட்டப்பட்ட நபர் அக்ஷத் பிரதாப் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் நடந்த தீவிர விசாரணைக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். எதிர்காலம் தொடர்பான விவகாரத்தில், தந்தை மற்றும் மகனிடையே கடந்த சில மாதங்களாகவே ஒரு விதமான பதற்றம் இருந்துள்ளது. மருந்து வணிகம் ஈடுபட்டு வந்த மன்வேந்த்ர சிங், மது தொடர்பான வியாபரத்தையும் செய்து வந்துள்ளார். இந்த சூழலில் போட்டி தேர்வுக்கு தயாராவதோடு, மருத்துவம் தொடர்பான துறையில் கவனம் செலுத்தும்படி தனது மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆனால், அதில் தனக்கு விருப்பம் இல்லை என அக்ஷத் தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஒருமுறை அந்த இளைஞர் வீட்டை விட்டே வெளியேறியுள்ளார்.
தந்தையை சுட்டுக்கொன்ற மகன்
இந்த சூழலில் தான், கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் தந்தை - மகன் இடையே கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மோசமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டிலிருந்த ரைஃபில் துப்பாக்கியை பயன்படுத்தி தனது தந்தையை அக்ஷ்த் சுட்டுக் கொன்றுள்ளார். பின்பு மூன்றாவது மாடியிலிருந்து மன்வேந்தரின் உடலை தரை தளத்திற்கு கொண்டு வந்துள்ளார். அங்கு வைத்து உடலை பல துண்டுகளாக வெட்ட தொடங்கியுள்ளார்.
மகளின் கண் முன்பே சிதைக்கப்பட்ட தந்தை உடல்
இதனிடையே, சொந்த சகோதரனே தந்தையை கொன்றதை வீட்டில் இருந்த அவரது மகள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். விஷயம் வெளியே தெரிந்தால் உனக்கும் இதே நிலை தான் என அக்ஷத் மிரட்டியுள்ளார். மேலும், சகோதரியின் கண்முன்பே தனது தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். சில பாகங்களை பிளாஸ்டிக் பையில் போட்டு வீட்டிற்கு வெளியே கொண்டு சென்று அப்புறப்படுத்தியுள்ளார். உடல் உள்ளிட்ட சில பாகங்களை வீட்டில் இருந்த நீல நிற ட்ரம்மில் போட்டு மூடி வைத்துள்ளார்.
அம்பலமான படுகொலை
இதனிடையே மன்வேந்தர் சிங் காணாமல் போனது தொடர்பான புகார் தொடர்பாக, போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டபோது பாரல் ஒன்றை கண்டறிந்துள்ளனர். அதில் உடல் பாகங்கள் இருப்பதை கண்டறிந்ததும், தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். உடலின் மற்ற பாகங்களை கைப்பற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதோடு, அக்ஷத்தையும் கைது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜலவுன் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட மன்வேந்தர் சிங்கின் தந்தை, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஆவார். இவரது மனைவி 9 ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில், மகன் மற்றும் மகளுடன் மன்வேந்தர் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
























