IND T20 World Cup: ஒரே கல்லில் ரெண்டு மாங்கா..! ஊசலாடும் இந்தியாவின் கனவு - ஸ்கை பாய்ஸ்க்கான வாய்ப்புகள்
IND T20 World Cup: மேற்கிந்திய தீவுகள் அணியின் அபார வெற்றியை தொடர்ந்து, டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பு மேலும் கடினமாகியுள்ளது.

IND T20 World Cup: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு உள்ள, வாய்ப்புகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
மேற்கிந்திய தீவுகள் அபாரம்:
ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்ரிக்கா அணியிடம் மோசமான தோல்வியை கண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்நிலையில் தான், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ருத்ரதாண்டவாம் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 254 ரன்களை குவித்து 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பு என்பது மேலும் பலவீனமடைந்துள்ளது. மீதமுள்ள போட்டிகளை வெல்வதால் மட்டுமின்றி, மற்ற போட்டிகளின் முடிவை சார்ந்தே, இனி இந்தியாவின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட உள்ளது.
புள்ளிப்பட்டியல்:
| அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | ரன் ரேட் |
| மேற்கிந்திய தீவுகள் | 1 | 1 | 0 | 2 | 5.350 |
| தென்னாப்ரிக்கா | 1 | 1 | 0 | 2 | 3.80 |
| இந்தியா | 1 | 0 | 1 | 0 | -3.80 |
| ஜிம்பாப்வே | 1 | 0 | 1 | 0 | -5.30 |
ஒரே கல்லில் ரெண்டு மாங்கா..
முதல் க்ரூப்பில் இடம்பெற்றுள்ள நான்கு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. அதில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் முறையே 5.350 மற்றும் 3.80 என வலுவான ரன் ரேட்டை கொண்டுள்ளன. அதேநேரம், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோசமான ரன்ரேட்டை கொண்டு, தங்களுக்கான அரையிறுதி வாய்ப்புகளை மிகவும் சிக்கலாக்கியுள்ளன. தென்னாப்ரிக்கா அணியுடனான தோல்வியை காட்டிலும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மேற்கிந்திய தீவுகளின் வலுவான வெற்றி இந்திய அணிக்கான ஆபத்தை அதிகரித்துள்ளது. சூர்யகுமார் யாதவின் அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளை வெல்வதோடு, தங்களுடையே ரன் ரேட்டை மேம்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியா வசமுள்ள வாய்ப்புகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்புகள்
- சூப்பர் 8 சுற்றில் மீதமுள்ள தங்களுக்கான 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், இந்திய அணியால் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற முடியாது
- ஒருவேளை தென்னாப்ரிக்கா அணியுடனான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுவிட்டால், இந்திய அணி வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்
- ஒருவேளை தென்னாப்ரிக்கா அணி மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தினால், ரன் ரேட் இந்திய அணிக்கு ஒரு பிரச்னையாக இருக்காது
- காரணம், மேற்கிந்திய தீவுகள் அணியின் கடைசி போட்டி இந்திய அணிக்கு எதிராக பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் வெற்றி பெற்றாலே சூர்யகுமார் யாதவின் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று விடலாம்
- அதற்கு முன்பாக வரும் 26ம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பட்டியலிடப்பட்டுள்ள, போட்டியிலும் இந்திய அணி ஒரு வலுவான வெற்றியை பதிவு செய்ய வேண்டி உள்ளது.





















