என் பட ரிலீஸை ஒத்திவைத்தேன்...மனைவி ராதிகா நடித்துள்ள தாய்கிழவி பட நிகழ்ச்சியில் எமோஷனலாக பேசிய சரத்குமார்
நடிகர் சரத்குமார் நடித்துள்ள ஆழி திரைப்படமும் மனைவி ராதிகா நடித்துள்ள தாய்கிழவி திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கின்றன

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய்கிழவி திரைப்படம் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்கவிருக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். தாய்கிழவி படம் வெளியாகும் அதே நாளில் ராதிகாவின் கணவர் நடிகர் சரத்குமார் நடித்துள்ள ஆழி திரைப்படமும் வெளியாகிறது. இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சரத்குமார் பேசியபோது தனது படத்தைக் காட்டிலும் தனது மனைவியின் படம் வெற்றிபெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
மீண்டும் கிராமத்து கதாபாத்திரத்தில்
கிழக்கே போகும் ரயில் தொடங்கி ஜீன்ஸ் , கிழக்குச் சீமையிலே போன்ற பல படங்களில் கிராமிய கதாபாத்திரங்களில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் ராதிகா. நீண்ட நாட்களுக்குப் பின் நடிகை ராதிகா ஒரு படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என படக்குழு தெரிவித்துள்ளது. 80 வயதான பவுனுத்தாயின் கணவர் இறந்துவிடுவதைத் தொடர்ந்து அவரது சொத்துக்களை பிரிக்க மகன்கள் திட்டமிடுகிறார்கள். தான் உயிரோடு இருக்கும்வரை தனது சொத்துக்களை தானே அனுபவிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் தாய்க்கிழவி. நகைச்சுவை , செண்டிமெண்ட் என கமர்சியல் திரைப்படமாக உருவாகியுள்ளது தாய்கிழவி.
மனைவிக்காக படத்தை ஒத்திவைத்த சரத்குமார்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சரத்குமார் " நான் நடித்துள்ள ஆழி திரைப்படமும் பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாக இருந்தது. இதனால் என்னுடைய படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தேன். ஆனால் தாய்கிழவி படமும் பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தாய்கிழவி திரைப்படம் வெற்றிபெற்று 100 நாட்கள் ஓடவேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். ஏனால் என் மனைவி வெற்றிபெற்றால் அது என்னுடைய வெற்றியும் கூட. கலையரசி ராதிகா இத்தனை வருடங்களாக சினிமாவில் நிலைத்து நின்று, ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்தல் முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன, தாய் கிழவி வெற்றியாளர், இதனால் நான் டெபாசிட் இழக்கப் போவதில்லை. இந்தப் நகைச்சுவை காட்சிகளிலும் என்னை அழ வைத்தது. உணர்ச்சிகரமான காட்சிகளிலும் கூட. இது பெண் அதிகாரத்தை மிகவும் வலுவாகப் பேசுகிறது, குறிப்பாக க்ளைமாக்ஸில். இந்தப் படத்தை 50 நாட்களுக்குப் பிறகு OTTயில் வெளியிட்டு, திரையரங்குகளில் நீண்ட நேரம் ஓட விடுமாறு தயாரிப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன், இந்த முயற்சியை எடுப்போம்." " என்று சரத்குமார் பேசினார்.























