பெரியார் கருத்துக்களை கொண்டு சேர்ப்போம்... டியூட் பட இயக்குநர் மாஸ் பேச்சு
Dude Success Meet : பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூ நடித்துள்ள டியூட் படத்தின் வெற்றிவிழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது

இந்த தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான டியூட் திரைப்படம் மிகப்பெரிய கமர்சியல் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. டியூட் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று சென்னையில் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டியூட் பட இயக்குநர் கீர்த்திஸ்வரன் தந்தை பெரியார் குறித்து பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது .
5 நாளில் 95 கோடி வசூலித்த டியூட்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவான படம் டியூட். பிரதீப் ரங்கநாதன் ,மமிதா பைஜூ , சரத்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். கமர்சியல் திரைப்படமாக உருவாகியிருந்தாலும் டியூட் படத்தில் சாதி மறுப்பு திருமணம் , ஆணவக் கொலைக்கு எதிரான முற்போக்கு கருத்துக்கள் பேசப்பட்டிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தீவிரமான ஒரு அரசியல் பிரச்சனையை கமர்சியல் ரீதியாக இயக்குநர் கீர்த்திஸ்வரன் கையாண்டிருந்த விதத்தை பலர் பாராட்டி வருகிறார்கள். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு ரசிகர்களிடையேயும் இப்படம் பெரியளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. 5 நாட்களில் டியூட் திரைப்படம் ரூ 95 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாகவும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் கீர்த்திஸ்வரன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது
பெரியார் கருத்துக்களை படங்களில் சொல்வோம்
டியூட் வெற்றிவிழாவில் பேசிய இயக்குநர் கீர்த்திஸ்வரன். " டியூட் திரைப்படத்தை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய நாள் வரை படம் 95 கோடி வசூலித்துள்ளது . நாளைக்கு 100கோடியை தொட்டுவிடும். மக்கள் இந்த படத்தை ஏற்றுகொண்டு படத்தை பார்க்க வந்துள்ளதையே இந்த வசூல் காட்டுகிறது. என்னுடைய முதல் படத்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. நான் இன்னொன்று முக்கியமாக சொல்ல நினைத்தது. டியூட் படத்தின் கதை இன்று பரவலான விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த படம் நிறைய சொல்லாத விஷயங்களை சொல்லியிருக்காங்க என்று பேசுகிறார்கள். ஆனால் இது தமிழ்நாடு. இங்கு ஒரு பெரியவர் இருந்திருக்கிறார். அவர்கள் வழியில் வந்து தான் நாங்களும் இதை பேசியிருக்கோம். அதனால் இந்த படத்தில் பேசியிருக்கும் கருத்துகள் தமிழ்நாட்டில் இதுவரை பேசாத கருத்து எல்லாம் இல்லை. எங்களுக்கு முன் நிறைய பேர் இதை பேசியிருக்கிறார்கள். அடுத்த தலைமுறை நாங்களும் அதை பேசுவோம். ஆனால் அதை முடிந்த அளவிற்கு சினிமாவிற்கான மொழியில் எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளும் விதமாக இன்னும் பெரிய அளவில் சொல்ல வேண்டும் என்பது என்னுடைய் ஆசை . என்னுடைய அடுத்தடுத்த படங்களிலும் இந்த மாதிரியான விஷயங்களை நான் பேசுவேன். " என டியூட் படத்தின் இயக்குநர் கீர்த்திஸ்வரன் பேசியுள்ளார்





















