பெற்றோரை கொண்டாடுங்கள்: டான் திரைப்படத்தை கொண்டாடிய ராமதாஸ்
டான் திரைப்படத்தை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
டான் திரைப்படத்தை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் உடன் பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியானது டான் திரைப்படம். அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் வெகுஜனங்களைக் கவர்ந்தது. அதனால் வசூல் ரீதியாகயும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. வழக்கமாகவே சிவகார்த்திகேயன் படம் என்றால் ஃபேமிலி என்டர்டெய்னர் என்ற ஒரு பெயர் உண்டு. அந்தப் பெயரை டான் மூலமும் தக்கவைத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சிபியை அழைத்து பாராட்டி இருந்தார். தற்போது டான் திரைப்படத்தை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
ராமதாஸின் ட்வீட்:
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)" என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும் " என்று பாராட்டிப் பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ஆகியோரை டேக் செய்து அவர் இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)” என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்!@Siva_Kartikeyan @Dir_Cibi #Don
— Dr S RAMADOSS (@drramadoss) June 15, 2022
வெற்றியால் கனியுமா விஜய் பட வாய்ப்பு:
‘டான்’ திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்தவர். திருச்சியில் உள்ள பன்னாரி அம்மன் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த அவர் அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்துள்ளார்.
அவர் தொடர்ந்து அட்லி இயக்கிய மெர்சல் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்ததோடு நடிக்கவும் செய்திருக்கிறார். அப்போது விஜய் உடன், அவர் எடுத்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை வைத்து, விஜய் உடன், சிபி சக்கரவர்த்தி இணையப் போகிறார் என பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கினர். அவருக்கு அடுத்த வாய்ப்பாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல, தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கியுள்ள சிபி சக்கரவர்த்தியும் விஜய்யுடன் இணைவார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. விஜய் தற்போது வம்சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதன்பின்னர் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதன் பின்னர் தான் சிபிக்கு வாய்ப்பு வருமா என்பது உறுதியாகும்.