எங்களை வளர்க்க அண்ணன் பட்ட கஷ்டம்.. சிரஞ்சீவி பற்றி பவன் கல்யான்
ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது அண்ணன் சிரஞ்சீவி பற்றி ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யான் உணர்ச்சிவசமாக பேசினார்
கேம் சேஞ்சர்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள படம் கேம் சேஞ்சர். கியாரா அத்வானி , எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். சுமார் 450 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராம் சரனின் சித்தப்பா மற்றும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது நிகழ்வில் தனது அண்ணன் சிரஞ்சீவி பற்றி பவன் கல்யான் உருக்கமாக பேசியது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சிரஞ்சீவி பற்றி பவன் கல்யான்
"இன்று நீங்கள் என்னை கல்யான் பாபு , துணை முதலமைச்சர் , ஓஜி என எப்படி வேண்டுமானால் அழைக்கலாம். ஆனால் எங்கள் எல்லாருக்கும் வேர் சிரஞ்சீவி தான். தனியாக வளர்ந்து எங்கள் அனைவருக்கும் அடைக்கலமும் ஆதரவும் கொடுத்தவர் சிரஞ்சீவி அண்ணன். எங்களுக்காக அவர் கடுமையாக உழைத்தார். நான் தொலைதூர இடங்களுக்கு செல்ல ஆதரவு கொடுத்தார். படப்பிடிப்பின் போது அவருக்கு நிறைய முறை காயம்பட்டிருக்கிறது. ஒரு முறை அவர் படப்பிடிப்பில் இருந்து வந்து அவர் காலணிகளை கழற்றியபோது அவர் கால்கள் வீங்கியிருந்தன. அவரது கஷ்டத்தைப் பார்த்து எனக்கு குற்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது. தனது அப்பாவின் கஷ்டங்களை பார்த்து வளர்ந்தவர் ராம் சரண். அவரை சின்ன வயதில் நான் நிறைய அழ வைத்திருக்கிறேன். ராம் சரண் ரொம்ப ஒழுக்கமாக வளர்ந்தவர். நல்ல நடன கலைஞரும் கூட. அவருக்குள் இவ்வளவு திறமைகள் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்ல. என் அண்ணன் சிரஞ்சீவி எனக்கு அப்பா மாதிரி. அதேபோல் ராம் சரண் எனக்கு சகோதரன் மாதிரி. தனது அப்பா மெகா ஸ்டாராக இருப்பது போல் ராம் சரண் க்ளோபல் ஸ்டாராக இருக்கிறார்.
ஒரு நடிகரை வெறுக்க வேண்டும் என்று என் அண்ணன் எப்போதும் சொல்லி கொடுத்தது இல்லை. எல்லாரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். மற்றவர்கள் நல்லவர்களாக இருக்கக் கூடாது என்று நினைப்பதில்லை. " என பவன் கல்யான் பேசினார்