Pathaan Trailer: ரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சிகள்..நாட்டை காக்கும் வீரராக ஷாருக்..தமிழ் ட்ரெய்லரை வெளியிட்ட விஜய்!
Pathaan Trailer: ஷாருக்கானின் நடிப்பில் இம்மாதம் 25ஆம் தேதி வெளியாகவுள்ள பதான் திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.

இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் ஆகியோரின் நடிப்பில், சுமார் 250 கோடி ரூபாய் அளவில் உருவாக்கப்பட்டுள்ள படம், பதான். ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
பதான் ட்ரெய்லர்:
இம்மாதம் 25ஆம் தேதி வெளியாகவுள்ள பதான் படத்தின் ட்ரெயலர் இன்று வெளியானது. இதில், நடிகர் ஷாருக்கான் இந்தியாவின் சில இடங்களை குண்டுபோட்டு தகர்க்க முயற்சிக்கும் கும்பலை தவிடுபொடியாக்கும் வீரராக வருகிறார். இவருக்கு ஜோடியாகவும், இவருடன் இணைந்து பணிபுரியும் சீக்ரெட் ஏஜென்டாகவும் வருகிறார் நடிகை தீபிகா படுகோன். விமானத்தில் இருந்து குதித்து சண்டை, ஆளாளுக்கு கையில் துப்பாக்கி, ரத்தக்களறியுடன் ஃபைட் சீன்ஸ் என பாலிவுட் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
விஜய் வெளியிட்ட பதான் ட்ரெய்லர்
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியுள்ள பதான் திரைப்படம், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு என மும்மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.
Wishing @iamsrk sir and the team all the best for #Pathaan
— Vijay (@actorvijay) January 10, 2023
Here is the trailer https://t.co/LLPfa6LR3r#PathaanTrailer
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பதான் படம் வெற்றி பெற அப்படத்தின் குழுவிற்கும் ஷாருக்கானுக்கும் வாழ்த்து தெரிவித்து குறிப்பிட்டுள்ளார். மேலும் பதான் படத்தின் தமிழ் ட்ரெய்லரையும் தனது ட்வீட்டுடன் இணைத்துள்ளார்.

ரன்வீர் சிங் கெஸ்ட் ரோல்?
பாலிவுட்டின் பெரிய நட்சத்திரங்கிளில் ஒருவராக கருதப்படும் ரன்வீர் சிங், இப்படத்தில் கேமியோ ரோல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதான் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, ரன்வீர் சிங் நடித்துள்ளது குறித்த தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் காட்சிகளில் சில க்ளிம்ஸ் காட்சிகளிலும் ரன்வீர் சிங் இருப்பதாக சில இணையவாசிகள் கூறி வருகின்றனர்.
பதான் சர்ச்சை:
பதான் படத்தின் முதல் சிங்கிள் பாடலான பேஷ்ரம் ரங் பாடல், சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இப்பாடலில் நாயகி தீபிகா படுகோன், காவி நிற கவர்ச்சி உடையணிந்து ஷாருக்கானுடன் நடனமாடுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா மற்றும் சபாநாயகர் ஆகியோர் எதிர்த்து கண்டனம் தெரிவித்தனர். “அந்த காவி உடையை நீக்கவில்லை என்றால், பதான் படத்திற்கு மத்திய பிரதேசத்தில் தடை விதிக்கப்படும்” என்றும் அவர்கள் போர் கொடி தூக்கினர்.
பாஜக உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, இந்த சர்ச்சை நாடாளுமன்றம் வரை சென்றது. “சினிமாவிற்கு ஒப்புதல் அளிப்பதையோ, தடை விதிப்பதையோ தணிக்கை குழுவிடம் விட்டுவிட வேண்டும். யாரோ காவி உடை அணிவதால் ஆபத்துக்கு உள்ளாவதற்கு சனாதன தர்மம் பலவீனமானது அல்ல, அது போல் இஸ்லாமிய மதமும் பலவீனமானது அல்ல” என்று பதான் படம் குறித்து அப்போது நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் வெளியாகுமா?
பதான் படத்தை, மத்திய பிரதேசத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள், இப்படத்தினை ஒழுங்காக திரையரங்குகளில் திரையிட விடுவார்களா என்ற சந்தேகம் பலரது மனங்களில் எழுந்தது. நாடாமன்றத்தில் நடந்த விவாதத்திற்கு பிறகு, பதான் பஞ்சாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், பதானிற்கு மத்திய பிரதேசத்தில் தடை விதிப்பது குறித்து தற்போதைக்கு எந்த பேச்சும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





















