(Source: ECI/ABP News/ABP Majha)
Paruthiveeran Row: பருத்திவீரன் வழக்கு..இப்படித்தான் சூர்யா பெயர் சேர்க்கப்பட்டது - காரணத்தை உடைத்த அமீர்
Paruthiveeran: இயக்குநர் அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியாகி 100 நாட்களைக் கடந்து ஓடிய படம் பருத்திவீரன்.
ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிலும் தற்போது பேசப்பட்டு வரும் விஷயம் 17 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநர் அமீரின் பருத்திவீரன் படம் தொடர்பாகத்தான்.17 வருடங்களுக்கு முன்னர் வெளியான இந்த படத்தின் பின்னணியில் இப்படியான பிரச்னைகள் இருப்பது தற்போது கிளம்பியுள்ள புகைச்சலுக்குப் பின்னர்தான் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் நடந்த நடிகர் கார்த்தியின் 25 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அமீர் வரவில்லை. இதற்கான காரணம் குறித்து அமீரிடம் கேட்கப்பட்டபோது அழைப்பு இல்லை என்பது போன்ற பதில் அளித்திருந்தார். கார்த்தியின் முதல் திரைப்படத்தினை இயக்கி அவருடைய நடிப்பு பயணத்தினை பெரும் வெற்றியுடன் தொடக்கி வைத்த அமீருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா என்ற கேள்வி கோலிவுட் கடந்து பேசப்பட்டு வருகின்ற விசயமாக மாறியது.
எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போல் ஸ்டியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் பேட்டி அமீரை கார்னர் செய்வதுபோல் இருக்க, அமீர் தனது தரப்பில், “பருத்திவீரன் உருவான காலத்தில் உடன் இருந்து, தான் பட்ட இன்னல்களை பார்த்தவர்கள் அமைதியாக இருப்பது மிகவும் வருத்தத்தை தருகின்றது” என்பது போன்ற அறிக்கை வெளியிட்டார். அதுவரை அமீரும் ஞானவேல் ராஜாவும் மாறி மாறி பேசிக்கொண்டு இருந்தவர்கள் வரிசையில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களான சசிகுமார், சமுத்திரகனி மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் ஞானவேல் ராஜா செய்தது தவறு, பொது வெளியில் அமீரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என அறிக்கைகளை வெளியிட்டனர்.
அதேபோல் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கரு. பழனியப்பனும் அமீர் பக்கம் நின்றனர். இந்த அறிக்கைகளுக்குப் பின்னர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிக்கின்றேன் என அறிக்கை விட்டார். ஆனால் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக சிவக்குமார் தரப்பில் இருந்தோ, கார்த்தி மற்றும் சூர்யா தரப்பில் இருந்தோ இதுவரை ஒருவரும் வாய் திறக்கவில்லை.
இதற்கு சமுத்திரகனி, “ வருத்தம் தெரிவிக்கின்றேன் என்ற சீனுக்கே இடம் இல்லை. பொது வெளியில் மன்னிப்பு கேட்கவேண்டும். அமீருக்கு நியாமாக வந்து சேரவேண்டிய பணத்தினை ஒரு பைசா பாக்கி இல்லாமல் கொடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில்தான் பருத்திவீரன் படம் தொடர்பாக அமீர் தொடுத்த வழக்கில் நடிகர் சிவக்குமார், அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி பெயர் எதற்காக சேர்க்கப்பட்டது? பிரச்னை முழுக்க முழுக்க ஞானவேல் ராஜாவினால்தான் என்றால் எதற்காக வழக்கில் சிவக்குமார், சூர்யா பெயரைச் சேர்க்கவேண்டும்? என்பது போன்ற கேள்விகள் எழுப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக அமீர் தற்போது பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். அதில் ”தயாரிப்பாளர் சங்கத்தில் என்னிடமிருந்து படத்தை எழுதி வாங்கி அவர்களிடம் கொடுப்பதிலேயே குறியாக இருந்தார்கள். நான் நீதிமன்றம் செல்கிறேன் என்றேன். அதற்கு, தயாரிப்பாளர் சங்கத்தை மீறி நீதிமன்றம் போவியா என கேட்டார்கள். சங்கம் நேர்மையாக இருந்தால் நான் ஏன் நீதிமன்றம் போகப்போறேன் என்று சொல்லிவிட்டு வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கில் சூர்யா, சிவக்குமார் ஆகியோர்களின் பெயர்களை சேர்க்க வேண்டாம் என நான் எனது வழக்கறிஞரிடம் சொன்னேன். ஆனால் அவர்தான் என்னுடைய விருப்பம் இல்லாமலேயே அவர்களது பெயர்களை சேர்த்துவிட்டார்" என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.