(Source: ECI/ABP News/ABP Majha)
HBD Shankar : 'ஒரு தலை ராகம்' ஷங்கருக்கு பிறந்தநாள்: எப்படி இருக்காரு? ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை!
HBD Shankar : 'ஒரு தலை ராகம்' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நடிகர் ஷங்கர் பிறந்தநாள் இன்று.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை கட்டமைத்துக் கொண்டு அதில் பெரும் தொண்டாற்றி வெற்றி கண்டவர் டி. ராஜேந்தர். அவரின் படைப்புகள் ஒவ்வொன்றும் ஆழமான அழுத்தமான திரைக்கதை கொண்டதாக இருப்பதே அவரின் பலம். அப்படி 1980ம் ஆண்டு அவரே திரைக்கதை, வசனம், இசை எழுத ஈ. எம். இப்ராகிம் தயாரித்து இயக்கிய படம் 'ஒரு தலை ராகம்'. அந்த காலகட்டத்தில் இளையராஜாவின் இசை இல்லாமல் வெளியான ஒரு இசை காவியம். சோகமான நேரத்தில் துயரங்களை கூட காவியமாக எடுக்க முடியும் என நிரூபித்து காட்டியவர் டி. ராஜேந்தர்.
சங்கர், ரூபா, உஷா ராஜேந்தர், தியாகு, சந்திரசேகர், ரவீந்தர் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் காதல் சோகம் நிறைந்த படம் என்றாலும் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. கல்லூரி காலகட்டத்தை அப்படியே கண்முன்னே காட்டியவர். மாணவர்களுக்கே உரித்தான இயல்பான நடை, உடை, பாவனை என்பதால் கல்லூரி மாணவர்களை பெரிதளவு வசீகரித்தது. காதலியிடம் பேசாமல், தொடாமல் காதலன் நடித்த ஒரே படம் இதுவாக தான் இருக்கும். 365 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது 'ஒரு தலை ராகம்'.
இப்படத்தில் புதுமுகமாக அறிமுகமானவர் ஹீரோ ஷங்கர். 'ஒரு தலை ராகம்' படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை பிடித்த ஷங்கரின் பிறந்தநாள் இன்று. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கிய ஷங்கர் சிறு வயதிலேயே சென்னைக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்ததால் இங்கேயே பள்ளி படிப்பை முடிந்ததால் சரளமாக தமிழில் பேச முடிந்தது. 'ஒரு தலை ராகம்' படத்திற்கு பிறகு பெரும்பாலும் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
சுஜாதா, கோயில் புறா, மௌன யுத்தம், ராகம் தேடும் பல்லவி, கானலுக்கு கரையேது, உதயமாகிறது, காதல் எனும் நதியினிலே, பந்தய குதிரைகள், எம்.ஜி.ஆர் நகரில், தாயம்மா, நினைத்து நினைத்து பார்த்தேன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஷங்கர் 2015ம் ஆண்டு வெளியான 'மணல் நகரம்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
நடிகர் பிரஜின், கௌதம் கிருஷ்ணா, தேஜஸ்வினி, வருணா ஷெட்டி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார் ஷங்கர். குடும்ப சூழல் காரணமாக வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்து செல்பவர்கள் அங்கே படும் பாட்டை படம்பிடித்து 'மணல் நகரம்'. தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தால் மீண்டும் நடிப்பேன் என கூறி இருந்தார்.
'ஒரு தலை ராகம்' மூலம் ரசிகர்களின் விருப்பமான நடிகராக இருந்த ஷங்கர் இப்போ எப்படி இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. மீண்டும் அவரை தமிழ் சினிமாவில் காணும் வாய்ப்பு கிடைக்குமா என ஏங்குகிறார்கள் அவரின் ரசிகர்கள். பிறந்தநாள் வாழ்த்து கூறும் இந்த வேளையில் அவருக்கு இதன் மூலம் கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.