மாமியார் வீட்டில் ஹெவி விருந்து... தமிழ்நாடு... ஆந்திரா... இப்போ கேரளா... நயன்-சிவன் ஹனிமூன் ஸ்டார்ட்!
Nayanthara-Vignesh Sivan: தமிழ்நாடு-ஆந்திரா-கேரளா என அடுத்தடுத்து மாநிலம் விட்டு மாநிலமாக மாறிக் கொண்டிருக்கும் நயன்-சிவன் ஜோடி, மாமியார் வீட்டிலிருந்து தங்களது ஹனிமூனை தொடங்குகிறார்களாம்.
தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் சமீபத்தில் முடிந்தது. மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு கண்ணாடி விடுதியில், முக்கிய பிரபலங்கள் மட்டும் பங்கேற்க நடந்த திருமணத்தை, இந்தியாவே கொண்டாடியது என்று கூறலாம். ட்ரெண்டிங் வரை இடம் பிடித்த நயன்-சிவன் திருமணம், மறுநாளே சர்ச்சையிலும் சிக்கியது.
தமிழ்நாட்டில் திருமணம் முடிந்த கையோடு, ஆந்திர மாநிலம் திருப்பதி சென்ற நயன்-சிவன் தம்பதி, அங்கு ஏழுமலையானை தரிசித்து வழிபாடு நடத்தினர். அதன் பின் கோயில் வெளியே, அவர்கள் நடத்திய போட்டோ ஷூட் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. காலணி அணிய தடைவிதிக்கப்பட்ட இடத்தில், நயன்தாரா காலணி அணிந்து போட்டோஷூட் நடத்தியதை பலரும் விமர்சனம் செய்தனர். அது தொடர்பாக, போலீசில் புகார் அளிக்கப்படும் என கோயில் நிர்வாகிககள் கூட கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் சென்னை திரும்பி தம்பதி, தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர். சனிக்கிழமை அன்று நடந்த அந்த சந்திப்பில், தங்களுக்கு என்றும் ஊடக ஆதரவு வேண்டும் என இருவரும் சமேதமாக கேட்டுக்கொண்டனர். கொஞ்சும் தமிழிலில் நயன்தாரா வைத்த கோரிக்கையும், நன்றியும் அன்றைய தினம் முழுவதும் பேசப்பட்டது.
இதற்கிடையில், விக்னேஷ் சிவன் அறிவித்தது போல, இந்து முறைப்படி அனைத்து சம்பிரதாயங்களும் நிறைவடைந்ததால், அடுத்ததாக மாமியார் ஊரான கேரளாவிற்கு, அதாவது நயன்தாரா வீட்டிற்கு நேற்று புறப்பட்டது புதுமணத் தம்பதி. அங்கு மாமியார் வீட்டில் விக்னேஷ் சிவனுக்கு தடபுடல் விருந்து அளிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், பூங்கொத்து கொடுத்து வரவேற்பு உள்ளிட்ட மாப்பிள்ளை தாங்கும் படலம் தொடங்கியது.
வீட்டில் விருந்து வைத்தது போதாது என்று, கொச்சியில் உள்ள தனியார் விடுதியிலும் அவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. புதுமணத்தம்பதிகள் இருவரும், அங்கு அமர்ந்து மாமியார் வீட்டு விருந்தை மகிழ்வோடு உண்டு ரசித்தனர். தமிழ்நாடு-ஆந்திரா-கேரளா என அடுத்தடுத்து மாநிலம் விட்டு மாநிலமாக மாறிக் கொண்டிருக்கும் நயன்-சிவன் ஜோடி, மாமியார் வீட்டிலிருந்து தங்களது ஹனிமூனை தொடங்குகிறார்களாம்.
வெளிநாடு செல்வது அவர்களுக்கு புதிதல்ல என்றாலும், யாரும் இல்லா தீவுகளை நயன்தாரா ‛டிக்’ செய்திருப்பதாகவும், அங்கு தான் அவர்களின் ஹனிமூன் காலங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக தனி விமானத்தை அமர்த்தவும் தம்பதிகள் முடிவு செய்துள்ளனர்.
மஞ்சள் மாங்கல்ய கயிறோடு, மாடர்ன் உடையில் வலம் வரும் நயன்தாராவை பார்த்து பலரும் பூரிப்படைந்து வருகின்றனர். இன்னும் சிறிது நாளைக்கு நயன்தாரா பரபரப்பாக பேசப்படுவார்.